ஆபாச படங்களைத் தயாரித்து அதை செல்போன் செயலிகள் மூலம் விற்பனை செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார். பின்னணி என்ன?
மும்பை குற்றப்பிரிவு போலீஸார் ஆபாசப் படம் தயாரிப்பது தொடர்பாகக் கடந்த பிப்ரவரியில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா அழைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய மும்பை போலீஸ் கமிஷ்னர் ஹேமந்த் நர்காலே, “ஆபாசப் படங்கள் தயாரித்து அவற்றை செல்போன் செயலிகள் சிலவற்றின் மூலம் விற்பனை செய்வதாகக் கடந்த பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவே ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன’’ என்றார்.
ராஜ்குந்த்ரா கைது – வழக்குப் பதிவு!
ராஜ்குந்த்ரா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மும்பை கமிஷ்னர் அலுவலகத்தில் இரவு தங்க வைக்கப்பட்டிருந்த அவர், எஸ்பிளனேடு 37-வது மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். கைது செய்யப்பட்ட பிறகு மும்பை ஜே.ஜே மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
நடிகை கெஹனா வசிஸ்த்
சினிமாவில் வாய்ப்புத் தேடி வரும் இளம் நடிகைகளை ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸில் நடிக்க வாய்ப்புக் கொடுப்பதாகக் கூறி ஆபாசப் படங்களில் நடிக்க வைக்கும் கும்பல் குறித்த தகவல் கடந்த பிப்ரவரியில் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை கெஹனா வசிஸ்த் உள்பட 9 பேரை மும்பை கிரம் பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான Kenrin Production நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆபாசப் படங்களை Kenrin நிறுவனத்துக்கு We Transfer மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து சில செல்போன் செயலிகளில் அவை அப்லோட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக Kenrin நிறுவனத்தின் இந்தியப் பிரிவு ஊழியர் உமேஷ் காமத் என்பவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். அவர் ராஜ்குந்த்ரா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பதும் தெரியவந்தது. அதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆபாசப் படங்களை ராஜ்குந்த்ரா நிறுவனத்தில் இருந்தே இங்கிலாந்துக்கு உமேஷ் அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகச் சொல்கிறார்கள் மும்பை போலீஸார். இந்திய சட்டங்களில் இருந்து தப்பும் நோக்கில் இங்கிலாந்தில் இருந்து அவை செல்போன் செயலிகளில் அப்லோட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த வழக்கில் இதுவரை ராஜ்குந்த்ராவோடு சேர்த்து பத்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கச்சைகட்டும் சர்ச்சைகள்
ராஜ்குந்த்ரா சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறையல்ல. தொழிலதிபரான ராஜ்குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி ஆகியோரது பெயர்கள் கடந்தாண்டு மார்ச்சில் Satyug Gold Pvt. Ltd என்ற தங்க விற்பனை நிறுவன சர்ச்சையில் சிக்கின. அந்த நிறுவனத்தில் இவர்கள் இருவரும் இயக்குநர்களாகப் பதவி வகித்திருந்தனர். மும்பையைச் சேர்ந்த பிரபல தாதா இக்பால் மிர்ச்சி மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 2019-ல் அமலாக்கத் துறை ராஜ்குந்த்ராவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. பாஸ்டியன் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தோடு தொடர்புடைய பணமோசடி வழக்கில் ராஜ்குந்த்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது.