பின்னியக்காள்

ஊரையே எதிர்த்து ஒற்றை ஆளாக நின்ற பெண் பூசாரி – பின்னியக்காளின் 12 ஆண்டு போராட்டம்!

தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சில நாள்களுக்கு முன்பு, பெண்கள் அர்ச்சகராகப் பயிற்சி எடுக்க விரும்பினால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து அர்ச்சகர் பணியில் ஈடுபடுத்த முடிவு எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாகவும் தமிழக அரசின் நிலைப்பாடுகளை தெரிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்புகள் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதுதொடர்பான விவாதங்கள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க.. ஏற்கெனவே அர்ச்சகராக பொறுப்பேற்றுள்ள பின்னியம்மாளின் கதையைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை அடுத்த நல்லுதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பின்னியக்காள். சுமார் பத்து தலைமுறையாக நல்லுதேவன்பட்டி கிராமத்துக்கு அருகில் உள்ள லிங்கநாயகன்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் துர்க்கை அம்மன் கோவிலில் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பூசாரியாக இருந்து வருகின்றனர். பின்னியக்காளின் தந்தை உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதும் தனது தந்தை செய்து வந்த பூசாரி பணியை பின்னியக்காள் எடுத்து செய்து வந்தார். அவர் பெண் என்பதால் கோவிலில் பூசாரியாக இருப்பதை கிராமத்து மக்கள் பலரும் விரும்பவில்லை. இதனால், தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் எதிர்த்து கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகிறார்.

சிவில் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகளும் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் பின்னியக்காளுக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்தாலும் மக்களிடம் இன்னும் சில கருத்து மாறுபாடுகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. பின்னியக்காளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்புடன் கோவிலில் பூஜைகளை மேற்கொண்டு வருகிறார். பின்னியக்காள் இதுதொடர்பாக பேசும்போது, “எங்க அப்பாவுக்கு நான் ஒரே ஒரு பொம்பளை பிள்ளைதான். எனக்கு விபரம் தெரியுறதுக்கு முன்னாடியே எங்கப்பா என்னை இந்தக் கோவிலுக்கு கூட்டி வந்துட்டாரு. எங்க கோயில்ல செய்யுற முறை எல்லாமே எனக்கு அத்துப்புடி. எங்கப்பா எனக்கு திருநீறு போட்டு பூசாரியா இருக்க தைரியம் கொடுத்து ஆரம்பிச்சு விட்டாரு. ஆனால், என்னோட சொந்தக்காரங்க எல்லாம் விலக்குனாங்க. பொம்பளை பிள்ளை இதெல்லாம் செய்யக்கூடாதுனு சொன்னாங்க. ஆனால், எங்கப்பா போட்ட திருநூறு வீணா போகக்கூடாதுனு நான் தொடர்ந்து நீதிமன்றம், காவல்துறை, தாசில்தார் ஆஃபீஸ்னு எல்லா இடமும் ஏறி இறங்கினேன்” என்கிறார்.

பின்னியக்காளிடம் பிரச்னை செய்து அவருக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றி புகாரை முதலில் தாசில்தாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், தாசில்தார் அப்போது ஆண் ஒருவரை பூசாரியாக அறிவித்துள்ளார். ஆனால், இதனை எதிர்த்து பின்னியக்காள் நீதிமன்றம் சென்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை `துர்க்கையம்மன் கோவிலில் பெண் பூசாரியாக இருக்க முடியாது என எந்த சட்டமும் இல்லை. இந்த விஷயத்தில் தாசில்தார் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு நடந்தது 2008-ம் ஆண்டு. சுமார் 12 வருடங்களுக்கு முன்பு. 2008-ல் நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பின்படி பல வருஷம் பின்னியக்காளால் பூசைக்கட்ட முடியவில்லை. மக்களில் பலர் அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களைக் கொடுத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து பின்னியக்காள் பேசும்போது, “பல சமயங்கள்ல நானே எனக்கு ஊக்கம் கொடுத்துகிட்டேன். ஊரையே எதிர்த்து நின்னேன். கிராமத்துல கொஞ்சம் மக்கள் எனக்கு ஆதரவாகவும் இருந்தாங்க. என்னை எதுத்தவங்ககிட்டகூட நான் என்னோட எதிர்ப்ப காட்டல. சாமி கும்பிட வர்றவங்க எல்லாத்துக்கும் திருநூறு எடுத்துக் கொடுக்கிறேன். என்னுடைய இடத்துல வேற ஒருத்தங்க இருந்துருந்தா ஓடியே பொய்ருப்பாங்க. ஆனால், நான் ஓடல. தற்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசாங்கம் பெண்களுக்கு பல விஷயங்களில் முன்னுரிமை அளித்து வருகிறது. அதேமாதிரி, கோவில்களிலும் பெண்கள் வந்துட்டா எந்தவிதமான வித்துயாசமும் இல்லாமல் ஒற்றுமையா இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : ரூ.55,692 கோடி; அதானி குழும பங்குகள் வீழ்ச்சியால் யாருக்கு இழப்பு… என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top