மன்சூர் அலிகான்

`ராஜாதி ராஜராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ – படத்தின் கதை – ஸ்பெஷல் என்ன?

`ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்‘ – தமிழ் சினிமாவில் அதிக நீளம் கொண்ட படத்தின் பெயர் இதுதான். இந்தப் படத்தில் மன்சூர் அலி கான், நாகேஷ், ஜெய் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், விவேக், நெப்போலியன், சில்க் ஸ்மிதா மற்றும் நந்தினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1993-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை பாபு ஆனந்த் இயக்கியிருந்தார். இந்தப் படம் ஜூன் மாதம் 24-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியாகி சுமார் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தப் படத்தின் கதை மற்றும் ஸ்பெஷல் என்ன என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

`பிடிவாதத்தினால் அழிந்தவர்களும் உண்டு. விட்டுக்கொடுத்ததினால் ஜெயித்தவர்களும் உண்டு. வாழ ஆசைப்படுபவர்களுக்கு வழிகாட்டுங்கள்!’ – ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் படத்தோட கோர் பாயிண்ட் இதுதாங்க. அப்டினு நாங்க சொல்லல. படத்தோட எண்ட்ல அவங்களே சொல்றாங்க. இந்தப் படத்தில் குலோத்துங்கனாக மன்சூர் அலிகான் நடிச்சிருக்காரு. அவரு அசால்ட்டாக திருட்டுகளை செய்யும் திருடன். பெரும்பாலும் காவலர்களின் உடையில் வந்து திருட்டுகளை செய்யக்கூடியவர். இந்தப் படத்தின் ஹீரோயின் நந்தினி, ராதிகாவாக நடித்துள்ளார். ராதிகாவுக்கு பெற்றோர்கள் கிடையாது. இவரை அவரது உறவினர்களான ஜெய்கணேஷ் (சுப்ரமணியன்), அபிலாஷா (ஷாலு) மற்றும் வக்கீல் கதாபாத்திரத்தில் வரும் நாகேஷ் ஆகியோர் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.

ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்

ஷாலு, ராதிகாவின் சொத்துகளை அடைய நினைப்பவர். எனவே, அவரை போதை ஊசிகளைப் போட்டு அதற்கு அடிமையாக்கி வைத்திருப்பார். ராதிகாவின் மனநலமும் இதனால் பாதிக்கப்படும். மனதளவில் பாதிப்படைந்த ராதிகா ஒருநாள் குலோத்துங்கனிடம் எதேர்ச்சையாக வந்து சேர்கிறாள். ஒருபக்கம் ராதிகாவின் உறவினர்கள் அவரைத் தேட மறுபக்கம் குலோத்துங்கனுடன் இவர் பயணிக்கிறார். குலோத்துங்கன் குடிபோதையில் ராதிகாவிடம் தவறாக நடந்துகொள்கிறான். இதனையடுத்து, ராதிகாவை அவரது உறவினர்கள் தேடி கண்டுபிடிக்கின்றனர். பின்னர், சொத்து வேண்டும் என்பதற்காக ஷாலு குலோத்துங்கனிடம் பணத்தைக் காட்டி ராதிகாவின் கணவராக நடிக்க ஒப்புக்கொள்ள வைக்கிறார். பிறகு, அதிகமாக சொத்து இருப்பதை உணர்ந்து ராதிகாவின் உறவினர்களுக்கு எதிராக குலோத்துங்கன் திரும்புகிறான். 

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

ஆரம்பம் முதலே குலோத்துங்கனின் எதிரியாக இதில் பிரபல நடிகர் ஸ்ரீஹரி நடித்துள்ளார். அவரும் ஷாலுவும் இணைந்து சுப்பிரமணியைக் கொலை செய்து அந்தப் பழியை குலோத்துங்கனின் மீது சுமத்துகிறார்கள். உண்மை அனைத்தையும் அறிந்த குலோத்துங்கன் இறுதியில் மனம் திருந்தி ராதிகாவை ஏற்றுக்கொண்டாரா? காவல்துறை அதிகாரியாக வரும் நெப்போலியன் கொலையின் உண்மைகளை எவ்வாறு கண்டறிந்தார்? என்பது படத்தின் இறுதிக் காட்சிகளில் வரும். ஆரம்பம் முதல் இறுதி வரை அரசியல் வசனங்களும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கடைசி வரை தெளிவாகவே இல்லை என்பது படத்தின் மிகப்பெரிய மைனஸ். இந்தப் படத்தின் நீளமான பெயரைத் தவிர படத்தைப் பற்றி பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை. மன்சூர் அலிகான் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரின் மேனரிசங்கள் படம் முழுவதும் உள்ளன. சில நகைச்சுவைக் காட்சிகளும் உள்ளன. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியது மன்சூர் அலிகான்தான். எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா, வாணி ஜெய்ராம் உள்ளிட்ட முக்கிய பாடகர்கள் பலர் இந்த திரைப்படத்தில் பாடியுள்ளனர்.

Also Read : இசை, குரல், நடிப்பு – எம்.எஸ்.வி-யின் மூன்று முகம்… 3 சம்பவங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top