தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏகப்பட்ட பாடல்கள் வெளியாகின்றன. கதைக்களத்துக்கு ஏற்ப பாடல்கள் இசையமைக்கப்ட்டு வரிகள் எழுதப்பட்டாலும் சில பாடல்கள் சர்ச்சைகளை சந்திக்கின்றன. அவ்வகையில் சர்ச்சைகளை சந்தித்த 10 பாடல்கள் இங்கே…
மஞ்சனத்தி புராணம்
தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்துவதாகக்கூறி சர்ச்சைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பாடலின் வரிகள் மாற்றியமைக்கப்பட்டன.
கிளாமர் சாங்
விஜய் ஆண்டனி நடிப்பில், சசி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தில் `கிளாமர் சாங்’ பாடலில் இடம்பெற்ற கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆகுறான் போன்ற வரிகள் சர்ச்சையைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பாடலின் வரிகள் மாற்றியமைக்கப்பட்டது.
இரணிய நாடகம்
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படத்தில் இடம்பெற்ற இரணிய நாடகம் பாடலில் உள்ள வரிகள் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகக்கூறி விஷ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்தப் பாடல் வரிகளால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
எவன்டி உன்னைப் பெத்தான்
சிம்பு நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான திரைப்படம், வானம். இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள் பெண்களை இழிவுபடுத்துவதாகக்கூறி சர்ச்சைகள் எழுந்தன.
பற பற பற பறவை
விஷ்ணு விஷால் நடிப்பில், சீனுராமசாமி இயக்கத்தில், என்.ஆர்.இரகுநாதன் இசையில் வெளியான திரைப்படம், நீர்ப்பறவை. இந்தப் படத்தில் இடம்பெற்ற `பற பற பறவை’ பாடலில் வைரமுத்து எழுதிய வரிகள் கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகக்கூறி சர்ச்சைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அப்பாடலில் இருந்து சர்ச்சை வரிகள் நீக்கப்பட்டன.
சைத்தான் டீஸர் பாடல்
விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் இசையில் வெளியான திரைப்படம், சைத்தான். இந்தப் படத்தின் டீஸரில் இடம்பெற்ற பாடல் சமஸ்கிருத மந்திரத்தைப் போலவே இருபதாகவும் இதனால், ஒரு பிரிவினர் வருத்தம் அடைந்ததாகவும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து பாடலின் வரிகளை விஜய் ஆண்டனி மாற்றினார்.

கொலவெறி
தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம், 3. இந்தப் படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் பெண்களின் மனதை புண்படுத்துவதாகக்கூறி சர்ச்சைகள் கிளம்பியது. எனினும், பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடல் மரண ஹிட் அடித்தது.
#DemonetizationAnthem
டீஜே நடிப்பில் பாலமுரளி இசையில் உருவான திரைப்படம், தட்றோம் தூக்றோம். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடல் மத்திய அரசை விமர்சிப்பதாக இருந்தது. இதனை சிம்பு பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் அதிகம் டிரெண்டான இந்தப் பாடலுக்கு எதிராக விமர்சனங்களும் கிளம்பின.
பீப் பாடல்
சிம்பு குரலில் வெளியான பீப் சாங் தமிழகம் முழுவதும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமூல வலைதளங்களில் இது தொடர்பான பதிவுகள் குவிந்தன. சிம்பு மீது காவல்நிலையங்களில் புகார்களும் குவிந்தன.

வாங்கணா வணக்கங்கணா
விஜய் நடிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான திரைப்படம், தலைவா. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமல்ல, திரைப்படமே பெரிய எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தது. எனினும், இந்தப் பாடல் பெண்களை இழிவுபடுத்துவதாகக்கூறி சர்ச்சைகள் எழுந்தன.
இந்த லிஸ்டில் நாங்க மிஸ் பண்ண பாடல்களை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: YouTube Classics: யூடியூபில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத தமிழ் கிளாசிக் நிகழ்ச்சிகள்!