ஹீரோ - டைரக்டர் காம்போஸ்

“திரை தீப்பிடிக்கும், வெடி வெடிக்கும்” ஹீரோ – டைரக்டர் காம்போஸ்

ஹீரோ – டைரக்டர் காம்போஸ் | இந்த ஹீரோவும் இயக்குநரும் ஜோடி சேர்ந்தா திரைத் தீப்பிடிக்கும், வெடி வெடிக்கும்னு சில அற்புதமான காம்பிஷேன்கள் தமிழ் சினிமாவுல இருக்கு. அது என்னென்ன பார்ப்போமா…

முன்னொரு காலத்துல, `ப’ வரிசை காம்போ பட்டையை கிளப்புச்சு. `வாஜி, வாஜி-னு சிவாஜியைக் கூப்பிட்டு பீம்சிங் பண்ன படங்கள சூப்பர் சூப்பர்ஜினு ரசிகர்கள் கொண்டாடினாங்க. பாசமலர், பாலும் பழமும், பாக பிரிவினை, பாவ மண்ணிப்புனு டைட்டில்ல `ப’ சென்டிமென்ட், கதையில பயங்கர சென்டிமென்ட். இவ்ளோதான் வின்னிங் ஃபார்மூலா.  பாசமலர் படம் பார்த்த தமிழ் சமூகம்,  சிவாஜியும் சாவித்ரியும் உண்மையிலேயே அண்ணன், தங்கச்சின்னு நம்பிடுச்சு. ஆனால், அடுத்த சில படங்கள்லேயே இரண்டு பேரும் டூயட் பாடினதைப் பார்த்து அதிர்ச்சியில நெஞ்சை பிடிச்சதெல்லாம் முரட்டு காமெடி.

ஹீரோ - டைரக்டர் காம்போ | கே.பாலச்சந்தர் - கமல்ஹாசன்
ஹீரோ – டைரக்டர் காம்போ | கே.பாலச்சந்தர் – கமல்ஹாசன்

Once upon a time இதே பீம்சிங் இயக்கத்துல அறிமுகமானவர்தான் கமலஹாசன். அதன்பிறகு, குழந்தை நட்சத்திரமா நடிச்சுட்டு இருந்தவர அழைச்சு வந்து, வளர்ந்த நட்சத்திரமா நடிக்க வெச்சவர் கே.பாலசந்தர். இயக்குநர் சிகரம் இயக்க, உலக நாயகன் நடிக்க, தமிழ்ல ஹிட் வேணுமா அது இருக்கி, தெலுங்கு ஹிட் வேணுமா அது இருக்கி, ஹிந்தி ஹிட் வேணுமா அதுவும் இருக்கினு ஒரு Pan India காம்பாவோ எல்லா பக்கமும் சிதறவிட்டாங்க. இந்தி படமான `ஏக் துஜே கே லியே’ வெறும் 50 லட்சம் முதலீடு, 10 கோடி லாபம்னு ப்ளாக் பஸ்டர் ஹிட்டடிக்க, பாலிவுட்டே கதிகலங்கி போயிருச்சு.

கேடி பில்லாவா, கில்லாடி ரங்காவா இருந்த சூப்பர் ஸ்டாரை குடும்பங்கள் கொண்டாடும் ஸ்டாரா மாத்தினதுல எஸ்.பி.முத்துராமனுக்கு பெரும் பங்கு இருக்கு. கிட்டதட்ட 25 படங்கள். நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய், காவிய புதன், அதிரடி வியாழன், சூப்பர் ஹிட் வெள்ளினு எல்லா மாதிரி படங்களையும் கொடுத்திருக்கு இந்த காம்போ. ஒரே இயக்குநர், ஒரே நடிகர் சேர்ந்து படங்கள் பண்ணா ரசிகர்களுக்கே ஒரே அலுப்பா இருக்காதான்னு கேட்டா, ஒரே மாதிரி பண்ணாதான் அலுப்பா இருக்குன்ற சூட்சமத்தை புரிஞ்சுகிட்டு, முரட்டுக்காளை, அதிசயபிறவி, ராகவேந்திரா, ஆறிலிருந்து அறுபது வரைன்னு ரகரகமா கொடுத்திருக்காங்க. இல்ல இல்ல, கொளுத்திருக்காங்க.

ஹீரோ - டைரக்டர் காம்போ | எஸ்.பி.முத்துராமன் - ரஜினி
ஹீரோ – டைரக்டர் காம்போ | எஸ்.பி.முத்துராமன் – ரஜினி

அடுத்ததா கோலிவுட்டின் ஸ்டான்லீ, கேமியோ ஸ்டார் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித்னு கே.எஸ்.ஆர் எல்லா உட்ச நட்சத்திரங்களையும் இயக்கியிருந்தாலும், சரத்குமார் – கே.எஸ்.ரவிக்குமார் காம்பினேஷன் தனி ரகம். சேரன் பாண்டியன்ல அழகா ஆரம்பிச்சு நாட்டாமை, நட்புக்காகனு டாப் கியர்ல போய், ஜக்குபாய்னு பிரேக் டவுனாகி நின்னுச்சு இந்த கூட்டணி. இருந்தாலும், என்றென்றும் நன்றியுடன்னு 90’ஸ் கிட்ஸ் கொண்டாடுகிற கூட்டணி. படையப்பாவையும், பஞ்சதந்திரத்தையும் சரத்குமார வெச்சி எடுக்காம இருந்ததுக்கே அவருக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள்.

ஹீரோ - டைரக்டர் காம்போ | விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்
ஹீரோ – டைரக்டர் காம்போ | விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய்ய வெச்சி அதிக படங்கள் பண்ணினது அவருடைய அப்பாவும், ரசிகர்களின் பெரியப்பாவுமான எஸ்.ஏ.சிதான். இந்த காம்போவுல அப்படி என்ன சிறப்புன்னு கேட்டீங்கனா, என்ன நான் சொல்றது? நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா மாதிரியான படங்களை விட, `சுக்ரன்’., `பந்தயம்’ படங்கள்ல அண்ணா பண்ணின கேமியோக்கள்தான் நல்லாவே நினைவிருக்கு. அதுலேயும் `சுக்ரன்’ சூசைட் பண்ணிக்கப் போற ரவிக்கிருஷ்ணாவையும் ஹீரோயினையும் தடுத்து நிறுத்தி `தற்கொலை பண்ணிக்குறது தவறு’னு பக்கம் பக்கமா வசனம் பேசுவார் பாருங்க. இதுக்கே கடல்லேயே குதிச்சுருக்கலாம்னு தோணிடும். அப்போ, எஸ்.ஏ.சி என்னதான் பண்ணிருக்கார்னு கேட்டா, கேப்டனோட சேர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் பண்ணியிருக்கார். சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சில் துணிவிருந்தால், நீதியின் மறுபக்கம், நீதி பிழைத்ததுனு சமூக அக்கறையோட பல படங்கள் பண்ணியிருக்காங்க. விஜய்யை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்கணும்னு, `செந்தூரப்பாண்டி’ படத்துல கெஸ்ட் ரோல் பண்ண சொல்லி விஜயகாந்த் கிட்டே கேட்குறார் எஸ்.ஏ.சி. தன் நண்பனுக்காக அதுக்கு ஒத்துகிட்டது மட்டும் இல்ல, ஒத்த ரூபாய் கூட சம்பளம் வாங்காமலும் நடிச்சு கொடுத்துருக்கார்.

அடுத்ததா, அஜித் – சரண். காதல் மன்னன் படத்துல தொடங்கின இந்த கூட்டணி. அமர்க்களம், அட்டகாசம்னு அடுத்தடுத்து படம் பெயரையே விமர்சனமா சொல்ற அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்துச்சு இந்தக் கூட்டணி. ரொம்பவே சாதாரண ஒன் லைனை எடுத்துகிட்டு, எக்ஸிக்யூசன்ல அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறதுதான் சரணோட ஸ்டைல். ஆசை நாயகனை ஆக்‌ஷன் பக்கமா திருப்பிவிட்டு ஆல்டிமேட் ஸ்டார் ஆக்கின பெருமை சரணையே சாரும். அசலோட சேர்த்து மொத்தம் நான்கு படங்களைக் கொடுத்திருக்கு இந்த கூட்டணி. `ரேஸ்ல கவனம் செலுத்தப்போறேன்’னு காரணம் சொல்லி ஜெமினி படத்துல நடிக்காம போயிட்டார் ஏ.கே. அது மட்டும் நடந்திருந்தா, இன்னும் தாறுமாறா இருந்திருக்கும் காம்போ.

ஹீரோ - டைரக்டர் காம்போ | சரண் - அஜித்
ஹீரோ – டைரக்டர் காம்போ | சரண் – அஜித்

ஆறு படத்துல தொடங்கி ஐந்து படங்கள் சேர்ந்து பண்ணி, அதுல நான்கு படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டா கொடுத்திருக்காங்க இந்த இரண்டு பேர் காம்போ. ஏன்டா ஆறு பேர எரிச்சோம், ஆறுமுகத்தை பகைச்சோம்னு சவால் விடுற `ஆறு’, `மண்ணெணய் ஊத்தினா மசமசனு ஏரியும், தேங்காண்ணெய்  ஊத்தினா தெளிவா எரியும், நல்லெண்ணய் ஊத்தினா நல்லா எரியும்’னு வேதியியல் பண்புகள் விளக்குற வேலு, `ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்’னு பவர் காட்டுற சிங்கம்னு எல்லா படங்களும் ஸ்க்ரீன்ல ஃபாஸ்ட் ஃபார்வார்டுல ஓடினாலும், தியேட்டர்ல  நின்னு நிதானமா ஓடுச்சு. எல்லா சூப்பர் காம்பினேஷனும் ஒரு மட்டி கொடுத்து பெட்டியைக் கட்டுற மாதிரி `சிங்கம்`3′ கமலா ஆரஞ்சு, விமலா ஆரஞ்சு’னு காமெடி நம்ம கண்ணுகள்ல ஆரஞ்ச புளிஞ்சுவிட்டார் ஹரி.

`என் தம்பிக்கு நான்தான்டா செய்வேன்’ன்னு ஜெயம் ரவிக்கு ஜெயம் தொடங்கி, தனி ஒருவன் வரையிலும் சிறப்பா செய்திருக்கார் ஜெயம் ராஜா.  ஓடுற மீன் ஓட, உறுமீன் வர்ற வரை காத்திருக்கும் கொக்கு. அதேமாதிரி, டோலிவுட்ல நல்லா ஓடுற படம் வரும் வரை காத்திருப்பார் ஜெயம் ராஜா. வந்ததும் ஒரு கொத்தா கொத்தி, `தம்பி வா தமிழ்ல பண்ணலம் வா’னு ஜெயம் ரவியை நடிக்க வெச்சி ஹிட்டாக்கிடுவார். இதனால், பத்திரிகைகள் எல்லாம் இவரை ரீமேக் ராஜான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அதுல காண்டாகி, இருங்கடா நானே ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்றேன்னு ஒரிஜினலா பண்ண ஸ்க்ரிப்ட்தான் `தனி ஒருவன்’.  அண்ணன், தம்பி இரண்டு பேரோட கெரியர்லேயும் மிக முக்கியமான படமா அமைஞ்சது.

ஹீரோ - டைரக்டர் காம்போ | சூர்யா - ஹரி
ஹீரோ – டைரக்டர் காம்போ | சூர்யா – ஹரி

`நீ மட்டுமா நானும்தான் என் தம்பிக்கு செய்வேன். ஏன், நானே வருவேன்’னு தனுஷோட கெரியர்ல மிக முக்கியமான மூன்று படங்கள கொடுத்திருக்கார் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் தனுஷுக்கு மட்டுமில்ல, தமிழ் சினிமாவுக்கே மிக  முக்கியமான படங்கள். `மயக்கம் என்ன’ ரீ ரிலீஸ் பார்த்துட்டு வந்த நண்பர் ஒருத்தர், தியேட்டர் பார்க்கிங்ல எதையோ சீரியஸா தேடிகிட்டு இருந்தார். என்ன ப்ரோ, என்ன தேடுறீங்கனு கேட்டதுக்கு. `படம் பார்த்துட்டு வந்தேன்ல. என் ஆண் திமிர் தொலைஞ்சு போச்சு. அதான் தேடிகிட்டு இருக்கேன்’னு சொன்னார். யெஸ், செல்வா இஸ் ஜீனியஸ்.

Also Read – Wow Daa.. லவ் டுடே மேக்கிங்… பிரதீப் பகிர்ந்த ரகசியங்கள்!

செல்வராகவன் மட்டுமில்ல. இதேபோல் இன்னும் இரண்டு இயக்குநர்கள் தனுஷுக்கு  இருக்காங்க. அதான் மாஸ்! ரத்தம் தெறிக்க தெறிக்க பண்றதுக்கு வெற்றிமாறன்னா, வயிறு வலிக்க சிரிக்க மித்ரன் ஜவஹர். வெற்றிமாறன் ஜாக்கியா நின்னு பறக்கவிட்ட எந்த தனுஷ் படமும் ஜமீன் வாங்கினதே இல்ல. ஈராஸ், மூராஸ் தாண்டி நாலு ஹிட் அடிச்சு கொடுத்திருக்கு. சிறந்த நடிகருக்கான, சிறந்த இயக்குநர்களுக்கான தேசிய விருதுகளையும் வாங்கி கொடுத்திருக்கு. சொல்லப்போனா, வெற்றிமாறனோட வெற்றிக்கூட்டணியில் இருப்பவர் தனுஷ் கிடையாது மக்களே, மூணார் ரமேஷ்ன்ற இவர்தான். அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்னு எல்லா படத்திலேயும் போலீஸாவே வேற வருவாப்ல. மூணார் ரமேஷ் மல்டிவெர்ஸ்…

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன்னு இரண்டாம் ரீமேக் ராஜாவா உலவிகிட்டு இருந்த மித்ரன் ஆர்.ஜவஹரும், `திருச்சிற்றம்பழம்’னு ஸ்வீட்டா, க்யூட்டா ஒரு படம் கொடுத்து எல்லோரையும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கிட்டார்னுதான் சொல்லணும்.

STR-ன்ற மூண்றெழுத்து, GVM-ன்ற மூண்றெழுத்தோட காம்போ-ன்ற மூண்றெழுத்த போடும்போதெல்லாம், VTV-ன்ற மூண்றெழுத்து காவியம், AYM-ன்ற மூண்றெழுத்து மணிக்காவியம், VTK-ன்ற மூண்றெழுத்து மணி ஓவியம்னு பச்சக்குதிரை தாண்டி போய்கிட்டே இருக்காங்க. இந்த இரண்டு மூண்றெழுத்துகளோட மூணாவதா ARR-ன்ற மூண்றெழுத்து சேரும்போதெல்லாம், OMG-ன்ற மூண்றெழுத்தைத்தான் சொல்ல தோணுது.

ஆக்சுவலா, உண்மையான `அண்ணனுக்கு நான்தான்டா பண்ணுவேன்’ அட்லியை விட்டா நல்லாருக்காதே. சீனியர்கள் பண்ண ப்ராஜெக்ட்ல அப்படியே நம்ம பெயர், ஃபான்ட், அட்டைப்படம், கலர் எல்லாம் மாத்தி ப்ரெஸென்டேஷன்ல பிரிச்சு விடுற மாதிரி சத்ரியன், அபூர்வ சகோதரர்கள், சக்தே இந்தியா ஸ்க்ரிப்ட்ட எல்லாம் அருமையா ப்ரெஸென்ட் பண்ணி ஜெயிச்சவர் அட்லி. காப்பியா இருந்தாலும் ஃபில்டர் காப்பிடா இதுனு பெருமையா சொல்றமாதிரி,  தெறி, மெர்சல், பிகில்ல வரும் விஜய் கதாபாத்திரங்கள் எல்லாம் நம்ம மனசுல நிக்கும். விஜயகுமார், வெற்றிமாறன், மைக்கேல் ராயப்பன்னு நிஜ உலக திரைப்பிரபலங்கள் பெயரை எல்லாம் வைக்குற அட்லி, ஷாரூக்கானுக்கு படத்துல பெயர் சல்மான்கான்னு வெச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

தமிழ் சினிமாவின் உண்மையான இணைந்த கைகள், விக்னேஷ் சிவனும் விஜய் சேதுபதியும்தான். சிவா மனசுல சக்தி படத்துல சத்யன் கிட்டே, `உனக்கு ஒரு பிரச்னைனா நான் வருவேன்’னு ஜீவா சொல்றது மட்டும் இல்லாம, விதியின் விளையாட்டால வந்து நிற்குறது மாதிரி, வி.சிக்கு ஒண்ணுனா வி.சே வந்து நின்னுடுறார். நானும் ரௌடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல்னு ரெண்டு காத்து வாக்குல பண்ண மாதிரி இருந்தாலும் காமெடி பண்னதால  ஜெயிச்சுடுச்சு. இப்போ, அடுத்த படம் ஜோடி சேர போறதா பேச்சு வந்துகிட்டு இருக்கு. அப்புறம் என்ன பாஸ்? கார்த்திக் சுப்பராஜ் – பாபி சிம்ஹா காம்போவா… அதுக்கு ஒரு எபிஸோட் பத்தாது. இன்னொரு நாள் பேசுவோம். இதே போல தமிழ் சினிமாவின் வேற சிறப்பான காம்போக்கள் உங்க சிந்தனையில உதிச்சதுன்னா கமென்ட்ல சொல்லுங்க…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top