காந்தாரா, பிரின்ஸ்லாம் ஏன் ஓ.டி.டில பிடிக்கலை?

முன்னெல்லாம் தியேட்டரில் வெளியாகும் ஒரு படம் வசூல் ரீதியாக ஹிட்டா ஃப்ளாப்பா என்று பார்க்கப்படும். ஆட்களைப் பொறுத்து படம் பிடித்திருக்கிறது, பிடிக்கலை என்று பேசிக்கொள்வார்கள். ஆனா இப்போ ஓ.டி.டியில படங்கள் பார்க்கும் கூட்டம் அதிகமான பிறகு நிறைய கேட்டகிரி வந்திருக்கிறது. தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும்போது ஆகா ஓஹோவென்று விமர்சனங்கள் வருகிறது. ஓ.டி.டியில் படம் வெளியானதும் ‘இதுக்காடா ஃபயர் விட்டீங்க’ என்று ஒரு குரூப் திட்டிக்கொண்டிருக்கிறது. ரிவர்ஸாக தியேட்டரில் பார்த்து தலைவலிக்குதுடா என்று புலம்பிய படம் ஓ.டி.டியில் வெளியான பிறகு ‘இந்த தங்கத்தையாடா திட்டுனீங்க’ என்று கொஞ்சுவதும் நடக்கிறது. இந்த வருசம் ரிலீஸான படங்களில் எந்தப் படம் எந்த கேட்டகிரியில் வந்ததுனு பார்க்கலாமா?

Kantara
Kantara

தியேட்டரில் பிடித்து ஓ.டி.டியில் பிடிக்காதவை

காந்தாரா படம் தியேட்டரில் வெளியான போது செம்ம ரெஸ்பான்ஸ். 16 கோடிக்கு எடுத்த படம் 400 கோடிக்கு மேல் வசூலானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு’ என்று பாராட்டியதோடு இந்த வெற்றியைப் பார்த்து மலைத்துப்போய்தான் தன்னுடைய பாபா படத்தை ரி-ரீலீஸ் செய்யச் சொல்லியிருக்கிறார். படத்தை தியேட்டரில் பார்த்த எல்லாருமே புகழ்ந்து பக்கம் பக்கமாக ரைட்டப் எழுதினார்கள். ஆனால் படம் ஓ.டி.டியில் ரிலீஸான பிறகு விமர்சனங்கள் அப்படியே உல்டாவானது. இதுக்காடா இவ்ளோ ஹைப்பு கொடுத்தீங்க, நாலு நாலா பார்த்துட்டு இருக்கேன் அரை மணி நேரம் தாண்ட முடியலை என்று எக்கச்சக்க திட்டு வாங்கியது. தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணீட்டீங்க, மொபைல்ல பார்த்தா அப்படித்தான் இருக்கும் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் ‘காந்தாரா’ ரசிகர்கள். இந்த கேட்டகிரியில் இன்னும் சில படங்களையும் சொல்லலாம். 100 கோடி வசூலான டான் படம் தியேட்டரில் எதோ மேஜிக்கில் ஓடிவிட்டாலும் ஓ.டி.டியில் வந்தபிறகு யாருக்கும் பிடிக்கவில்லை. எதற்கும் துணிந்தவன், வெந்து தணிந்தது காடு, விருமன், நானே வருவேன் இப்படி இன்னும் சில படங்களையும் சொல்லலாம். 

Also Read – கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி… விஜய் படங்களுக்கு வந்த பிரச்னைகள்!

தியேட்டரில் பிடிக்காமல் ஓ.டி.டியில் பிடித்தவை

Beast
Beast

பீஸ்ட் படம் வந்தபோது விஜய் ரசிகர்களே நெகட்டிவ் ரிவ்யூ சொன்னார்கள். அந்தளவுக்கு விமர்சிக்கப்பட்ட படம் டிவியில் போட்டபோது ‘சில இடங்கள் சொதப்பல் மத்தபடி நல்லாத்தானே இருக்கு’ என்ற விமர்சனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எட்டிப்பார்த்தது. தியேட்டரில் பெரிய எதிர்பார்ப்போடு போனதால் வந்த ஏமாற்றம் இது. அதுவே இத்தனை நெகட்டிவ் விமர்சனங்களுக்குப் பிறகு எதிர்பார்ப்பில்லாமல் படம் பார்க்கும்போது சில காட்சிகள் ஓகேவாக இருப்பதே போதுமானதாக இருக்கிறது. இதே போல் கோப்ரா படத்திற்கும் நிறைய பாசிடிவ் விமர்சனங்களை ஓடிடியில் வந்தபிறகு பார்க்க முடிந்தது. கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், FIR படங்களுக்கும் இது பொருந்தும். பிரின்ஸ் படத்துக்கும் தியேட்டரில் நெகட்டிவ் ரிவ்யூ நிறைய வந்தளவுக்கு ஓ.டி.டியில் கொஞ்சம் குறைவாகவே வந்தது. ஆனால் இதை அடுத்த கேட்டகிரியான C கேட்டகிரியிலும் வைக்கலாம். 

தியேட்டரிலும் அடி ஓ.டி.டியிலும் அடி

Valimai
Valimai

வலிமையில் ‘அம்மா சாப்பிட்டு ஆறுநாள் ஆச்சு’ சீனை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு எப்படி கடுப்பாயிருந்ததோ அதேதான் ஓ.டி.டியில் பார்த்தவர்களுக்கும் இருந்தது. பைக்கில் பறந்து பறந்து சண்டை போட்ட ஆக்சன் மாதிரி தியேட்டரில் நன்றாக இருந்த சில காட்சிகள்கூட ஓ.டி.டியில் வந்தபோது விமர்சிக்கப்பட்டது. அண்ணாத்த படத்தையும் இரண்டு வகையறாவும் கலாய்த்துத் தள்ளினார்கள். சிலருக்கு நட்சத்திரம் நகர்கிறது பிடித்திருந்தாலும் பலருக்கும் ‘ஓ.டி.டில ஓட்டி ஓட்டி பார்த்ததுக்கே இப்படி சொல்றீங்களே… இதை தியேட்டர்ல பார்த்த எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்’ என்று சில அங்கலாய்ப்புகளும் தென்பட்டது. தமிழ் சினிமாவின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் ஃபிலிம் இரவின் நிழலுக்கும் இதே ரென்ஸ்பான்ஸ்தான்.

தியேட்டரிலும் ஹிட்டு ஓ.டி.டியிலும் ஹிட்டு

Ponniyin Selvan
Ponniyin Selvan

இந்த வருடத்தில் ரொம்ப குறைவான படங்கள்தான் தியேட்டரிலும் சக்கை போடு போட்டு ஓ.டி.டியில் வந்த பிறகும் மக்களிடம் இருந்து ரெஸ்பான்ஸ் அள்ளியது. அதில் முக்கியமான இரண்டு படங்கள் பொன்னியின் செல்வன், விக்ரம். பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வெற்றியை தியேட்டரில் பெற்றது. 500 கோடிக்கு மேல் வசூல் கணக்கிடப்பட்டது. ஓ.டி.டிக்கு வரும் முன்னரே கிட்டத்தட்ட எல்லாரும் தியேட்டரில் பார்த்த படமாக இது இருக்கும். ஓ.டி.டியில் வந்த பிறகும் சிலர் ரசித்து சிலாகித்தனர். விக்ரம் படத்திற்கும் தியேட்டரிலேயே ரிப்பீட் ஆடியன்ஸ் அதிகம் இருந்தனர். ஓ.டி.டிக்கு வந்த பின்னரும் மீம்ஸ்களால் சக்கை போடு போட்டது. திருச்சிற்றம்பலம், மன்மத லீலை, நெஞ்சுக்கு நீதி, சர்தார் படங்களும் இந்த கேட்டகிரியில் வரும்.

இப்ப நான் சொன்னது எல்லாமே என்னோட அப்சர்வேசன்தான். ஒருவேளை நான் எதாவது மாத்தி சொல்லியிருந்தா எந்தப் படம் எந்த கேட்டகிரில வரும்னு உங்களோட ஒபீனியனை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top