#RussiaUkraineWar: மக்களை கண்கலங்க வைத்த 3 வயது சிறுவனின் பாடல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டு அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. உக்ரைன் மக்கள் வேறு வழியின்றி தங்களது நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ரஷ்யா முழு பலத்தோடு உக்ரைனை தாக்கி ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வருகிறது. எனினும், உக்ரைனும் சில நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. பலகட்ட பேச்சு வார்த்தைகள் ஐ.நா தலையீடு போன்றவை இருந்தபோதிலும் ரஷ்யா – உக்ரைன் போருக்கு சுமுகமான தீர்வை எட்ட முடியவில்லை. இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசியதும், 3 வயது சிறுவன் லியோனார்ட் புஷ் போர் குறித்து பாடியதும் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “21-வது நூற்றாண்டில் போர் என்பது ஏற்க முடியாத ஒன்று. கட்டடங்களில் வாழ்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பறிபோனது. இந்த துயரம் பற்றி உலக மக்கள் சிந்திக்க வேண்டும். உலகில் போர் ஏற்பட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் மட்டுமே. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரை தடுப்பதற்கும் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சில் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை. இது விரக்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உக்ரைன் மக்கள் மிகவும் கொடுமையான வலிகளை அனுபவித்து வருகின்றனர். உக்ரைனில் அமைதியை மீண்டும் கொண்டு வந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அன்டோனியோ குட்டரெஸ்
அன்டோனியோ குட்டரெஸ்

உலக தலைவர்கள் தலையிட்டும் எந்தவிதமான தீர்வையும் கொண்டுவர முடியாத நிலையில் இருக்கும் உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக மூன்று வயது சிறுவன் பாடியிருக்கும் பாடல் ஒன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான கீவ்-ல் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் லியோனார்ட் புஷ் என்ற மூன்று வயது சிறுவன், ‘ஒகியான் எல்ஜி’ என்ற இசை குழுவுடன் சேர்ந்து தனது நாட்டில் நடக்கும் போருக்கு எதிராக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். உக்ரைனில் உள்ள இர்பின் என்ற நகரைச் சேர்ந்த அந்த சிறுவனின் பாடல் கீவ் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத் திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை மக்கள் பலரும் அமைதியுடனும் கண்ணீருடனும் பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லியோனார்ட் புஷ்-ன் வீடும் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுவனின் குடும்பம் உக்ரைனில் மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பும் இந்த மாதத் தொடக்கத்தில் போருக்கு எதிராக இந்தச் சிறுவன் ஒரு பாடலைப் பாடி வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவனின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போர் தொடர்பாக குரல் கொடுக்காமல் இருந்தவர்களும் தற்போது குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுமட்டுமல்லாமல், பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் இந்தப் போர் தொடர்பாக பேசும்போது, “ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் பத்து ஆண்டுகள் நீடிக்கும். குண்டுகளை இயக்கும் கொடூரமான நபர், புதின். ஐரோப்பிய நாடுகள் இன்னும் பல ஆண்டுக்கு போருக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: காமெடி கிங் டு உக்ரைன் அதிபர் – யார் இந்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top