`வேற லெவல் சம்பவங்கள்’- அரசியல்வாதிகளின் பிரஸ்மீட் அலப்பறைகள்!

தமிழக அரசியல்வாதிகள், தேசிய அரசியல்வாதிகள் ஒரு சிலரைப் போல் அல்லாமல் செய்தியாளர்களைச் சந்திப்பதை ஒரு வழக்கமாகவே தொடர்ந்து வருகிறார்கள். அப்படி நடக்கும் பிரஸ்மீட்டில் கடந்த காலத்திலும் சரி சமீபகாலங்களிலும் சரி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பிரஸ்மீட்டை ஹேண்டில் பண்ணுவதில் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் என தனி பாணி இருக்கிறது. இன்னாரின் பிரஸ்மீட்டுக்குப் போனால் இப்படியெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுமே பத்திரிகையாளர்கள் மத்தியில் இருக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முதல் அண்ணாமலை வரையில் பிரஸ்மீட்டில் நடந்த சுவாரஸ்யங்களைப் பற்றிதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.  

கருணாநிதி பிரஸ்மீட்

Karunanidhi
Karunanidhi

வார்த்தை விளையாட்டால் சீரியஸான சூழ்நிலையையும் சிரிப்பாகிவிடும் வழக்கம் கொண்டவர் கருணாநிதி. அதை சட்டமன்றத்திலும் பிரஸ்மீட்டிலும் பலமுறை செய்திருக்கிறார். கருணாநிதி வந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதற்கு சில உதாரணங்களை மட்டும் பார்க்கலாம். 2001-ல் கைது செய்யப்பட்டு விடுதலையான பிறகு சோர்ந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தன்னைக் கைது செய்த போலீஸ்காரர் முருகேசன் பெயரைக் குறிப்பிட்டு பேசிய கருணாநிதி, `அவர் முருகேசன் இல்லை; முருக்கேசன்’ என்று குறிப்பிட்டு கலகலப்பூட்டினார். அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் நேர செய்தியாளர் சந்திப்பொன்றில், இந்தத் தேர்தலில் முக்கியமான பிரச்னையாக எது இருக்கும் என்று பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, `வெற்றி, தோல்விதான்’ என்று சிரித்துக் கொண்டே பதில் கொடுத்திருப்பார். 1980 காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் அறிவித்த புதிய வேட்பாளர் பட்டியலில், பழைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலரது பெயரும் விடுபட்டிருந்தது. இதனால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். அப்போது நடந்த பிரஸ் மீட் ஒன்றில் இதுபற்றி கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், `புதிய வேட்பாளர் பட்டியலால் சட்டமன்ற உறுப்பினர் விடுதி முழுவதும் ஒரே முனகல்; போர்க்கொடி. ஏன், இதனால் எம்.எல்.ஏக்கள் பலரும் விக்கி விக்கி அழுதுகொண்டே இருக்கிறார்கள்’ என்று கேள்வியை முடிப்பதற்குள் குறுக்கிட்ட கருணாநிதி, `அன்புள்ள நிருபரே நீங்கள் சொல்வதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் `விக்கி விக்கி’ அழுதிருக்க மாட்டார்கள். `விஸ்கி விஸ்கியாக’ அழுதிருப்பார்கள் என்று கவுண்டர் கொடுத்து அசத்தினார். கருணாநிதி பிரஸ்மீட்டுகளை எடுத்துக் கொண்டால் இதுபோல பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படியான வித்தியாசமாக கருணாநிதி பதில் கொடுத்த பிரஸ்மீட் பற்றி தெரிந்திருந்தால், அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

ஜெயலலிதா

Jayalalithaa
Jayalalithaa

கருணாநிதி பிரஸ்மீட்களுக்கு நேரெதிரானது ஜெயலலிதாவின் செய்தியாளர் சந்திப்புகள் என்றே சொல்லலாம். ஆரம்ப காலங்களில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, பிற்காலங்களில் அதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். தேர்தலுக்கு முன்பும் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், அவை பெரும்பாலும் பத்திரிகையாளர்களின் கேள்விகள் எதுவும் இல்லாமலேயே முடிந்துவிடும். பிரதமர்களைச் சந்திப்பதற்காக அல்லது அரசியல்ரீதியான பயணமாக டெல்லி செல்கையில் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார். அந்த சந்திப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பெரும்பாலும் அதிகாரத் தொனியிலேயே பதிலளித்திருப்பார் ஜெயலலிதா. விஸ்வரூபம் பிரச்னையின்போது ஜெயலலிதா பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read – ரஜினிகாந்த் அ.தி.மு.க-வை எதிர்க்கக் காரணமான அண்ணாமலை! #SilverJubilee #TNNYoutube

மு.க.ஸ்டாலின்

MK Stalin
MK Stalin

2011-க்குப் பிறகு பத்தாண்டுகள் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்திப்பது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என ஸ்டாலின் களமாடினார். கருணாநிதி இல்லாத இடத்தில் சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செய்தியாளர்களைச் சந்திப்பதையும் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். முதல்வரான பிறகும் செய்தியாளர்களைச் சந்திப்பதோடு, அவ்வப்போது தனியார் டிவி சேனல்களுக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். `வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நான் பேச மாட்டேன். காரணம் நான் கலைஞரின் மகன்’ என்று பல்வேறு பொதுக்கூட்ட மேடைகளில் அவர் குறிப்பிட்டதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ்

OPS - EPS
OPS – EPS

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரனை ஓரங்கட்டியதோடு, ஓ.பன்னீர்செல்வத்தையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தார். அதற்கு முன்பு பெரிதாக எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பையுமே நடத்தியிராத அவர், முதல்வரான பின்பும் சரி இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் சரி தொடர்ச்சியாக பிரஸ்மீட் நடத்தி வருகிறார். `என்னை பழைய பழனிசாமி என்று நினைத்தீர்களா…கிடையாது’ என்றும் `எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அரசியல் பள்ளியில் பாடம் படித்தவன் நான்’ என்றும் மேடையில் பேசி அதிமுக தொண்டர்களிடம் பாராட்டைப் பெற்றார். எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, ஓ.பி.எஸ்ஸை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்திருந்தார். அன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர் சந்திப்பில் திடீரென எகிறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிகம் செய்தியாளர்களைச் சந்திக்காத ஓ.பி.எஸ், தர்மயுத்தம் சமயத்தில் அடிக்கடி பிரஸ்மீட்டில் பேசினார். அதற்கு முன்பும் சரி; பின்பும் சரி பெரிதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி கொடுப்பது அவரது வழக்கம் இல்லை. கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி நகர்ந்துவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

சீமான்

Seeman
Seeman

தமிழ்நாட்டில் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் இரண்டு அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். காட்டுப்பள்ளி துறைமுகம் தொடங்கி பரந்தூர் புதிய விமான நிலையம் வரையில் பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தவர், சில இடங்களில் சர்ச்சைகளிலும் சிக்கினார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளரை மண்டையை உடைப்பேன் என்று பேசியது சர்ச்சையானது. அதுபற்றிய கேள்விக்கு, `பத்திரிகையாளர்கள் நாகரிகத்தோடு நடந்துகொள்ள வேண்டும். பத்திரிகையில் பணியில் சேர்ந்துவிட்டாலே நீங்கள் பரமாத்மா ஒன்றும் இல்லை. பார்த்து நடந்துகொள்ளுங்கள்’ என்று கூறியதும் விவாதத்தைக் கிளப்பியது. `கறுப்பாக இருந்தால் திராவிடமா… தேவைப்பட்டால் இந்தியன்; தேவைப்பட்டால் திராவிடன்; தேவைப்பட்டால் தமிழன்னு சொல்லிக்கிறீங்க. எருமை மாடுகூடத்தான் கறுப்பாக இருக்கிறது. அது என்ன திராவிடமா?’ என்று ஒரு பிரஸ்மீட்டில் சீமான் சொன்னது பல்வேறு எதிர்ப்புக் கருத்துகளுக்கு வித்திட்டது. பிரஸ்மீட்டில் அவரது யுனீக்கான சிரிப்பும் மீம் கிரியேட்டர்களின் ஆதர்ஸமாகிப்போனது.

விஜயகாந்த்

Vijayakanth
Vijayakanth

அரசியல்வாதிகளின் பிரஸ்மீட் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் பிரஸ்மீட்கள்தான். டெல்லி பிரஸ்மீட்டில் கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரைப் பார்த்து தூக்கி அடிச்சிருச்சுருவேன் பார்த்துக்க என்று சொன்னது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதேபோல் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களைப் பார்த்து காறித் துப்பியதும் சர்ச்சையானது. அதேபோல், விஜயகாந்த் உடல்நலக் குறைவுக்குப் பிறகு தே.மு.தி.க சார்பில் பிரஸ்மீட்டில் பேசிவந்த பிரேமலதாவும் ஒரு சில சந்தர்பங்களில் பத்திரிகையாளர்களுடன் சண்டையிட்டதும் உண்டு.

அண்ணாமலை

Annamalai
Annamalai

தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி பிரஸ்மீட் நடத்தி வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, அவ்வப்போது கூறும் கருத்துகளால் சர்ச்சையில் சிக்குவதுண்டு. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது 2 லட்சம் வழக்குகளைப் பதிவு செய்தேன்; இதுவரை 20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்றெல்லாம் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னது விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல், இவ்வளவு ரூபாய் கொடுத்துவிடுவார்கள் அறிவாலயத்தில் இருந்து என பத்திரிகையாளர் ஒருவருடன் செய்தியாளர் சந்திப்பிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், சமீபத்தில் மரத்தில் குவியும் குரங்குகள் போல குவிகிறீர்களே என்றும் பத்திரிகையாளர்களைப் பார்த்து பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இவர்கள் தவிர வைகோ, துரைமுருகன், திருமாவளவன், முத்தரசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழகத்தில் தற்போது ஆக்டிவ்வாக இருக்கும் அரசியல் தலைவர்கள் பலரின் பிரஸ்மீட்டுகளிலும் சுவாரஸ்ய சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன. நேரம் கருதி அவற்றைத் தவிர்த்திருக்கிறோம். இவை தவிர வேறு எதாவது சுவாரஸ்யமான பிரஸ்மீட் சம்பவங்கள் உங்களுக்குத் தெரிந்தால், அதை மறக்காமல் கமெண்டில் குறிப்பிடுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top