Edappadi Palanisamy

காபந்து முதல்வர் உத்தரவுகள் பிறப்பிக்க முடியுமா… என்ன சொல்கிறது விதி?

காபந்து அரசாங்கம் என்றால் என்ன?

முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பொறுப்பேற்கும் வரை தற்காலிகமாகப் பொறுப்பில் இருக்கும் அரசு காபந்து அரசு


தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் கொரோனா பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நடத்தியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் கொரோனா பரவல் கவலையளிக்கக் கூடிய விதத்தில் இருக்கும் பத்து மாநிலங்கள் பட்டியலிலும் தமிழகம் இருக்கிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது `காபந்து’ முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நடத்தியிருக்கும் கூட்டம் விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

Also Read : 1995 கொடியன்குளம் கலவரம் – வரலாறும் பின்னணியும்

`காபந்து’ முதல்வர்!

ஒரு மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டால், அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும். அந்த நேரத்தில் இருந்து தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை பதவியேற்பு வரையில் ஏற்கனவே முதல்வராக இருந்தவர் `காபந்து’ முதல்வராக மட்டுமே தொடர முடியும். இந்த இடைப்பட்ட காலத்தில் தினசரி அரசு நடமுறைகளுக்கான பணி மட்டுமே நடக்க வேண்டும். காபந்து முதல்வரால் கொள்கைரீதியான எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. முதல்வருக்கான அதிகாரங்களோடு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம்.

2019 ஜூன் வரையில் இருந்த தெலங்கானா மாநிலத்தின் முதல் சட்டப்பேரவையை முன்னதாகவே, 2018 செப்டம்பரிலேயே முதல்வர் சந்திரசேகர ராவ் கலைத்தார். அப்போது, அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், `சட்டப்பேரவை கலைக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இது மத்திய அரசுக்கும் பொருந்தும். எனவே, தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது.

காபந்து அரசு சார்பில் எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. 1994-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தினசரி அரசு நடைமுறைகள், நடவடிக்கைகள் மட்டுமே நடைபெற வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரம் கிடையாது’ என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் அரசு சார்பில் எந்தவித புதிய நலத்திட்டங்களும், அரசு சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளும் வெளியிடத் தடை விதிக்கப்படும்.

`காபந்து’ முதல்வர் உத்தரவுகள் பிறப்பிக்க முடியுமா... என்ன சொல்கிறது விதி?
எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்!

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட்டது. அப்போதே தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டன. கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்பிறகே புதிய அரசு பதவியேற்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் தினசரி அரசு நடமுறைகள் மட்டுமே நடக்க வேண்டும்.

இந்தசூழலில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தால் சுமார் 44 நாட்களுக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். பிரசாரத்தின்போது அவர் சென்னையில் இருந்தபோதும் தலைமைச்செயலகத்துக்கு வருவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வந்தார்.

முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல், மக்கள் அதிகம் கூடும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட கொரோனா குறித்த தகவல்கள் குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தடுப்பு மையங்களை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடந்திருக்கிறது.

`அரசு சார்ந்து சில முடிவுகளை எடுக்க காபந்து அரசின் தலைவராக இருப்பவர், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூட்டங்களை நடத்த முடியும். அப்படி தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை நடத்தினார்’ என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில். அதேநேரம், புதிய உத்தரவுகள் எதையும் காபந்து அரசின் தலைவராக இருப்பவரால் பிறப்பிக்க முடியாது.

ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2016 டிசம்பரில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தனது பதவியை 2017 பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்ட பிறகு, தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாகவும், ராஜினாமா கடிதத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை வைத்திருந்தார். அந்த சூழலில் ஆளுநரின் கோரிக்கைக்கு ஏற்ப காபந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை பணியிட மாற்றம் செய்வது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றம் செய்வது குறித்து ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார். காபந்து முதல்வரால் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட முடியுமா என்ற கேள்வி அப்போதே எழுந்தது.

இதுகுறித்து அப்போது கருத்துத் தெரிவித்த தி.மு.க எம்.பியும் வழக்கறிஞருமான வில்சன், “அரசின் கொள்கை முடிவுகளை மட்டுமே காபந்து முதல்வரால் எடுக்க முடியாது. மற்றபடி முதல்வருக்கான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு இருக்கிறது. அவர் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கும்போது, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அதை செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். காபந்து முதல்வர் என்று கூறி உதாசீனப்படுத்த முடியாது’’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

கருணாநிதிக்கு நடந்த சம்பவம்

கருணாநிதி

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசு சார்பில் அறிவித்த பரிசுத் தொகையைத் தாமதமாக வழங்க நேர்ந்ததாக கருணாநிதி குறிப்பிட்டார். 2011 ஏப்ரலில் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, `உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.3 கோடியும், தமிழக வீரர் அஷ்வினுக்கு ஒரு கோடி ரூபாயும் தமிழக அரசு சார்பில் கொடுக்க எண்ணினோம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து ஒப்புதல் பெற்றோம். ஆனால், முதல்வர் நிதியளிப்பது போன்று புகைப்படம் எடுக்கக் கூடாது என நிபந்தனை விதித்தனர். இதனால் பரிசு வழங்குவதை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறோம்’ என்று கருணாநிதி பேசினார்.

Also Read : அண்ணா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top