நாடுவிட்டு நாடு செல்லும் கப்பல் பயணங்கள் என்றாலே, நமக்கெல்லாம் Cruise Ship-கள் எனப்படும் சொகுசுக் கப்பல்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், சமீபகாலமாக சரக்குக் கப்பல்களில் பயணம் செய்யும் Freighter Travel டிரெண்டாகி வருகிறது… எப்படியிருக்கும் அந்தப் பயணம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்.
Freighter Travel
சரக்குக் கப்பல்கள் என்பவை மிகப்பெரிய கண்டெய்னர்களில் சரக்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டவை. இதனால், பயணிகளுக்காக வடிவமைக்கப்படும் சொகுசுக் கப்பல்களைப் போல ஆடம்பரமான அறைகள், ரெஸ்டாரெண்ட், நீச்சல் குளம், பார்கள் போன்ற எந்த வசதிகளையும் நீங்கள் இதில் எதிர்பார்க்க முடியாது. அதேபோல், வைஃபை, நைட் கிளப்புகள் போன்றவைகளையும் பார்க்க முடியாது. பல இடங்களில் உங்கள் செல்போனில் சிக்னலும் இருக்காது.
யோசித்துப் பாருங்கள் இப்படியான வசதிகள் எதுவும் இல்லாத சரக்குக் கப்பலில் வாரக்கணக்கில் உங்களால் பயணிக்க முடியுமா?… `நோ ப்ரோ என்னால இன்டர்நெட் இல்லாம ரெண்டு நிமிஷம் கூட இருக்க முடியாது’னு சொல்ற ஆளா நீங்க… இப்படி, நிஜ உலகில் நாம் அனுபவிக்கும் வசதிகள் எதுவும் இல்லாமல், சில வாரங்கள் பயணிக்கும்போது Freighter Travel நமக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் சரக்குக் கப்பல்களில் பயணிக்க விரும்பும் மக்கள்.
இந்த புதிய அனுபவத்துக்காகவே இவர்கள் இந்தப் பயணத்தைத் தேர்வு செய்கிறார்கள். இதற்காகக் குறிப்பிட்ட சரக்குக் கப்பல் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, கப்பலின் கேப்டன் உள்ளிட்ட மற்ற குழுவினரோடு முன்னரே பேசியும் வைத்து விடுகிறார்கள். ஒருமுறை பயணம் என்பது குறைந்தது இரண்டு முதல் 3 வாரங்களாவது நீளும். அப்படியான கப்பல்களில் ஊழியர்கள் உள்பட சிலபேர் மட்டுமே இருப்பார்கள். இந்தப் பயணங்களுக்காக நாளொன்றுக்கு 100 முதல் 150 அமெரிக்க டாலர்கள் வரைகூட கட்டணமாகக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் சரக்குக் கப்பல் பயணத்தை விரும்புபவர்கள்.
கப்பல் ஊழியர்களைப் போலவே உங்கள் ஆடைகளை நீங்களே துவைத்துக் கொள்ள வேண்டும். உணவு, கடல் காற்றின் வாசம் என பயணம் கொடுக்கும் அனுபவம் அலாதியானது. பொதுவான சொகுசுக் கப்பல் பயணத்தில் நீங்கள் பார்ப்பது போல், சன்பாத் எடுக்கும் பயணிகள், நீச்சல் குளத்தில் குளிக்கும் குழந்தைகள் என இப்படியான காட்சிகள் எதையும் பார்க்க முடியாது. மாறாக, ரொம்பவே அமைதியான பயண அனுபவமாக Freighter Travel இருக்கும்.
நண்பர்கள் சிலரின் கம்பெனியோடு நீங்கள் பயணத்தை மேற்கொள்ளும்போது, அவர்களோடு விளையாடி, பேசி பொழுதைக் கழிக்கலாம். தனியாகச் செல்ல நினைக்கும் பயணிகள், கப்பல் குழுவோடு அவர்களின் அனுபவங்களைக் கேட்டபடியே பயணிப்பதாகச் சொல்கிறார்கள். ஆக்டிவிட்டீஸைப் பொறுத்தவரை சரக்குக் கப்பல்களில் பெரிதாக ஸ்கோப் இல்லை என்றாலும், சிலவற்றை கப்பல் கேப்டனின் அனுமதியோடு செய்யலாம். சரக்குக் கப்பல்தான் என்றாலும், ஹோட்டல்களில் இருப்பது போல தனி பெட், பாத்ரூம், சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகள் கொண்ட தனி அறை உங்களுக்காக ஒதுக்கப்படும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் பயணிக்கும் சரக்குக் கப்பலில் நூலகம், ஜிம் போன்ற வசதிகள் இருக்கலாம்.
சொகுசுக் கப்பல்களில் நீங்கள் பயணிக்கும்போது, குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர மற்ற இடங்களைப் பார்க்க நினைத்தால், அதற்கென தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டி வரும். ஆனால், சரக்குக் கப்பல்களில் அப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. கப்பலின் என்ஜின் ரூம், கமாண்ட் சென்டர் என எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் எக்ஸ்ட்ரா கட்டணம் இல்லாமல் நீங்கள் விசிட் அடிக்கலாம். கப்பல் ஊழியர்கள் உங்களுக்கு கம்ஃபோர்ட்டான ஹாஸ்பிடாலிட்டியை அளிக்க மாட்டார்கள் என்றாலும், கடல் நடுவில் சரக்குக் கப்பல் பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தங்களது அனுபவங்கள், இன்சைட்ஸ் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள். இப்படியான பயணங்களின்போது கூடவே புத்தகங்களை எடுத்துச் செல்வதும், படங்கள் பார்த்து பொழுதுபோக்கவும் பிளான் செய்து கொள்வது நல்லது.
பொதுவாக, ஒரு நபருக்கு 100 கிலோ அளவுக்கான லக்கேஜூக்கு மட்டும்தான் அனுமதி கொடுப்பதாகச் சொல்கிறார்கள். முடிந்தவரை தேவையில்லாத பொருட்களோடு உங்கள் பயணத்தைத் திட்டமிடாதீர்கள். அதேபோல், ஒரு பையில் 25 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிப்பார்களாம். அதேபோல், சரக்குக் கப்பல் பயணம் என்பது திட்டமிட்டபடி சரியாக எப்போதுமே உங்களை சேருமிடத்துக்குக் கொண்டு சேர்த்துவிடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பல்வேறு காரணங்களால் பயணத்தில் தாமதங்களும் ஏற்படலாம். கொரோனா சூழலால் இந்த வகைப் பயணங்களுக்கு இப்போது தடை இருக்கிறதாம். இந்த ஆண்டு இறுதி அல்லது 2023-ல் இதற்கு அனுமதி கொடுக்கப்படலாம்.
Also Read – தமிழ்நாட்டின் பெஸ்ட் ரோட் ட்ரிப் பிளேசஸ்… இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க ரைடர்ஸ்!