Princess Diana

இளவரசி டயானா பிரபலமான முதல் நிகழ்வு தெரியுமா? #Diana

இங்கிலாந்து இளவரசி டயானாவின் பாப்புலாரிட்டி உலகம் அறிந்தது. இங்கிலாந்து அரச பரம்பரையில் மக்களின் இளவரசி என்ற கௌரவத்தை டயானாவுக்கு மட்டுமே அளித்து அழகுபார்த்தார்கள் மக்கள்.

இளவரசர் சார்லஸை 1981ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவரது குடும்பமே, அரச குடும்பத்தின் சேவையில் இருந்ததுதான். டயனாவின் பாட்டிகளான சிந்தியா ஸ்பென்சர், கவுண்டஸ் ஸ்பென்சர், ரூத் ரோஸ், பரோன்ஸ் பெர்மாய் ஆகியோர் மகாராணி எலிசபெத்திடம் பணியாற்றியவர்கள். 1961-ம் ஆண்டு தங்கள் குடும்பத்துக்கு ஆண் வாரிசு வரப்போகிறது என்ற ஆசையில் இருந்தனர் ஜான் ஸ்பென்சர் – விஸ்கவுண்ட் அல்த்ரோப் தம்பதியினர். குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவதென்று மிகப்பெரிய விவாதமே குடும்பத்தில் நடந்துகொண்டிருந்தது. ஆனால், அந்த ஆண்டின் ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தது பெண் குழந்தை. இதனால், அவருக்கு இளவரசியும் அத்தை முறை உறவும் கொண்ட லேடி டயானா ஸ்பென்சரைப் பின்பற்றி `டயானா ஸ்பென்சர்’ என்று ஸ்பென்சர் குடும்பத்தினர் பெயர் சூட்டினர்.

டயானா - இளவரசர் சார்லஸ்

அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சார்லஸைக் கரம்பிடித்த டயானா, இளவரசி டயானாவானார். சார்லஸ் – டயான தம்பதிக்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள். திருமணத்துக்கு வெளியிலான உறவுகளால் இவர்களது திருமண வாழ்க்கை சிதைந்தது. இளவசர் சார்லஸூக்கு முன்னாள் காதலி, கமீலாவோடு நெருக்கம் காட்டினார். டயானாவையும் இந்த சர்ச்சை சுற்றியது. அரண்மனையில் குதிரையேற்ற பயிற்சியாளராக இருந்த ஹெவிட் என்பவரோடு சேர்த்து டயானாவைப் பேசினார்கள். இந்த விவகாரம் அரச குடும்பத்தில் புயலைக் கிளப்பியது. இதனால் ஏற்பட்ட பல பிரச்னைகளின் தொடர்ச்சியாக இருவரும் 1996ல் விவாகரத்துப் பெற்றனர். விவாகரத்துக்குப் பின்னரும் அரச குடும்பத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள டயானாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் அனுமதி கொடுத்தார்.

உலக அளவில் பல்வேறு தொண்டுகளை மேற்கொண்டுவந்த இளவரசி டயானா, அப்போதைய சூழலில் அதிக அளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்ணாகக் கருதப்பட்டார். எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டாலே நோய் பரவும் என்று கருதப்பட்ட சூழலில், நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்குவது போன்று வெளியான புகைப்படம் அந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது. அதேபோல், டயானா எங்கு சென்றாலும் அவரை கேமராக்களும் பின் தொடர்ந்தனர். இளவரசர் சார்லஸுடனான விவாகரத்துக்குப் பிறகு எகிப்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் முகமது அல் ஃபயத்தின் மகன் டோடி ஃபயத்துடன் நெருங்கிப் பழகினார் டயானா. இது உலக மீடியாக்களுக்குத் தீனி போட்டது. 1997ம் ஆண்டு கோடை விடுமுறையைத் தனது மகன்களுடன் நியூயார்க்கின் லாங் தீவில் கழிக்க டயானா விரும்பினார். ஆனால், பாதுகாப்பு நடைமுறைகள் ஒத்து வராததால் அதைக் கைவிட்டார். பின்னர், தாய்லாந்தில் டோடியை சந்திக்க அவர் திட்டமிட்டதும் நடக்கவில்லை. அதையடுத்து, பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள ரிட்ஸ் ஹோட்டலில் இருவரும் சந்திக்கத் திட்டமிட்டனர். 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு உணவுக்காக அங்கு சென்ற அவர்களை கேமராக்களும் பின் தொடர்ந்தன. புகைப்படக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக டயானா – டோடி சென்ற கார் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பாரிஸ் சாலைகளில் பறந்தது. விளைவு, பாண்ட் டி அல்மா சுரங்கப்பாதையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் டயானா, டோடி இருவருமே உயிரிழந்தனர். டயானாவின் மறைவுக்கு உலக அளவில் மக்கள் துக்கம் அனுசரித்தனர். இங்கிலாந்து தேசியக்கொடியான யூனியன் ஜாக் அரைக்கம்பத்தில் பறந்தது.

டயானா

இப்படி உலக அளவில் பேமஸான டயானா உலக மக்களுக்கு முதன்முதலில் அறிமுகமான சம்பவம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. இளவரசர் சார்லஸ் – டயானா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் ஆன விவகாரம் அதிகாரப்பூர்வமாக 1981ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் நடந்த விவகாரம் இரண்டரை வாரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அப்போது டயானா லண்டனில் இருந்த ஒரு நர்சரிப் பள்ளியில் டீச்சராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஒருநாள் அந்தப் பள்ளி முகப்பில் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். கேமராக்கள் மொய்த்தன. திடீர் கூட்டத்தால் அந்த சிறிய நர்சரி பள்ளியின் பிரின்சிபால் கொஞ்சம் மிரண்டுதான் போனார். பயந்துகொண்டே வெளியேவந்த அவர், விஷயம் என்ன என பத்திரிகையாளர்களைக் கேட்கிறார். எங்கு பார்த்தாலும் கேமராக்கள்… கேமராக்கள் கேமராக்கள்.

டயானா

என்ன வேண்டும் உங்களுக்கு’ என்ற பிரின்சிபாலின் கேள்விக்கு,உங்கள் பள்ளியில் வேலைபார்க்கும் டயானா என்ற இளம்பெண்ணைப் பார்க்க வந்திருக்கிறோம். சீக்கிரம் வெளியே வரச்சொல்லுங்கள்’ என்று பதில் வந்தது. இதனால், பிரின்சிபாலின் திகைப்பு மேலும் அதிகரிக்கவே, `இங்கிலாந்து அரச குடும்பத்து ராணியாக டயானா ஆகவிருக்கிறார். அவரும் இளவரசர் சார்லஸும் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்…. அவர் முகத்தைப் பார்க்க வேண்டும். அவரை வெளியே வரச் சொல்லுங்கள்’’ என்று குரல் கொடுக்கிறார்கள். குழந்தை ஒன்றைத் தூக்கி கையில் வைத்தபடி உள்ளே இருந்த கதவோரம் நின்றிருந்த டயானா மிஸ் தயங்கியபடியே வெளியே வருகிறார். எளிமையான ஸ்கர்ட் போன்ற உடை, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்ட டயனாவை நூற்றுக்கணக்கான போட்டோகிராஃபர்கள் போட்டோ எடுக்கிறார்கள். அடுத்த நாள் உலகின் பல நாடுகளின் பத்திரிகைகளில் டயானாவின் புகைப்படம் முதல்முறையாக பிரசுரம் ஆனது. அதுதான் டயானா பாப்புலரான முதல் நிகழ்வு.

Also Read – விக்கிபீடியா பற்றிய சுவாரஸ்யமான 11 தகவல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top