சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்திருக்கும் Gangubai Kathiawadi படம் வெளியாகியிருக்கிறது. பத்திரிகையாளர் ஹூசைன் ஜைதி எழுதிய Mafia Queens of Mumbai புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கங்குபாயின் கதையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
Gangubai Kathiawadi
குஜராத்தின் கத்தியவாடி பகுதியில் 1940-களில் பிறந்தவர் கங்குபாய். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கங்குபாய் ஹர்ஜீவன்தாஸ். செல்வச் செழிப்பான பின்னணியில் பிறந்த இவரது குடும்பத்தில் பலர் அந்த காலகட்டத்திலேயே மருத்துவர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சிறுவயது முதலே மும்பை மாநகரத்தின் மீது தீராத காதல் கொண்டவராக வளர்ந்த கங்குபாய், 16 வயதில் தனது தந்தையின் கணக்காளரான ராம்னிக் லால் என்பவர் மீது காதல் கொண்டிருக்கிறார். காதலனை முழுமையாக நம்பிய அவர் மும்பை குறித்தும் நடிகையாக வேண்டும் என்ற தனது கனவைப் பற்றியும் விவரித்திருக்கிறார். டீனேஜில் இருந்த கங்குபாயிடம் ஆசை வார்த்தைகள் கூறி மனதை மாற்றியிருக்கிறார் ராம்னிக்.
ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து கொஞ்சம் நகை, பணத்தோடு ராம்னிக்கோடு மும்பைக்குக் கிளம்பியிருக்கிறார் கங்குபாய். மும்பையில் இருவரும் திருமணம் செய்துகொண்டு லாட்ஜ் ஒன்றில் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். சினிமா கனவுகளோடும் மனது நிறைந்த நம்பிக்கையோடும் மும்பையில் வாழ்வைத் தொடங்கிய கங்குபாய்க்கு தனக்கு ஏற்படப்போகும் நிலை பற்றி கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை. கையில் இருந்த காசு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தவுடன், மும்பையில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கும் காமத்திபுரா பகுதியில் 500 ரூபாய்க்கு கங்குபாயை விற்றுவிட்டு எஸ்ஸாகிறார் ராம்னிக்.
காமத்திபுரா வாழ்வு
குஜராத்தின் கத்தியவாடி ஜமீன் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புடைய செல்வச் செழிப்பான குடும்பத்தின் செல்ல மகளாக வளர்ந்த கங்குபாயைக் காலம் மும்பையின் கிரைம் உலகில் கொண்டுவந்து நிறுத்தியது. பெரும்பாலான பெண்களைப் போலவே ஆரம்பத்தில் அழுது அடம்பிடித்து, சாப்பிடாமல் இருந்து எப்படியாவது இந்த நரகத்திலிருந்து தப்பிவிட மாட்டோமா என்ற எண்ணத்தில் கங்குபாய் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஒருகட்டத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார். காமத்திபுராவில் செயல்படும் பல்வேறு Brothel House-களில் ஒன்றில் தனது வாழ்வைக் கழிக்கும் நிலைக்கு ஆளாகிறார் கங்குபாய்.
அன்றைய காலகட்டத்தில் மும்பையின் நிழலுக தாதாக்கள் பலர் இருந்தனர். தமிழக பின்னணியைக் கொண்ட வரதராஜன் உள்ளிட்டோரோடு கரீம் லாலா என்பவர் முக்கியமான தாதாவாக கோலோச்சிக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் கரீம் லாலா குரூப்பைச் சேர்ந்த ஒரு ரவுடியால் கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாகிறார் கங்குபாய். இரண்டொரு முறை இந்த நிகழ்வு வாடிக்கையாகவே, கரீம் லாலாவிடம் இதுபற்றி நீதி கேட்கலாம் என்று முடிவு செய்கிறார். பொதுவாக பெண்களை உரிய முறையில் மதிக்கக் கூடியவர் என்று கரீம் லாலாவுக்கு அப்போது இருந்த பிம்பம், இந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கிறது.
பல்வேறு இடையூறுகளைத் தாண்டி கரீம் லாலாவைச் சந்திக்கும் கங்குபாய், தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சொல்லி நியாயம் கேட்கிறார். அத்தோடு, அந்த சந்திப்பின்போது கரீம் லாலாவின் கையில் கங்குபாய் ராக்கி ஒன்றைக் கட்டியதாகவும் சொல்கிறார்கள். கங்குபாய்க்கு ஏற்பட்ட நிலையைக் கண்ட கரீம் லாலா, அடுத்த முறை அந்த ரவுடி வந்தால் தனக்குத் தகவல் தெரிவிக்கும்படி சொல்லியதோடு நம்பிக்கை கொடுத்து கங்குபாயை அனுப்பி வைக்கிறார். அடுத்த சில நாட்களில் குறிப்பிட்ட ரவுடி வரவே, அதுகுறித்த தகவல் கரீம் லாலாவுக்கு சொல்லப்படுகிறது. இதைக்கேட்டு சம்பவ இடத்துக்கு நேரடியாகவே வந்த கரீம் லாலா, காமத்திபுராவாசிகள் முன்னிலையிலேயே அந்த ரவுடியின் கை, கால்களை உடைத்ததோடு, கங்குபாயைத் தனது சகோதரி என்று அறிவிக்கிறார். அவருக்கு ஏதாவது துன்பம் கொடுக்க நினைத்தால், அவர்களுக்கும் இதே கதிதான் என்ற எச்சரிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார் கரீம் லாலா.
கங்குபாய் கத்தியாவாடி
இந்த சம்பவம் காமத்திபுராவில் கங்குபாயின் செல்வாக்கை உயர்த்துகிறது. அவருக்கான மரியாதையும் அதிகரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கங்குபாய், தனது பெயரையும் கங்குபாய் கத்தியவாடி என்று மாற்றிக் கொள்கிறார். அந்த ஏரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் குழுக்களுக்கான தேர்தலிலும் வெற்றி பெறுகிறார். கரீம் லாலா வழியாக மும்பையின் நிழலுக காண்டாக்ட்களையும் அரசியல்வாதிகளின் குட்புக்கிலும் இடம்பெறுகிறார். மும்பை ஆசாத் மைதானத்தில் பெண்கள் வாழ்வியல் பற்றி இவர் பேசிய உரை, அன்றைய பத்திரிகைகளில் பெரிய அளவுக்கு வெளியாகவே மும்பை தாண்டி கங்குபாயின் புகழ் பரவத் தொடங்குகிறது. தன்னைப் போலவே வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட கங்குபாய், விருப்பமில்லாமல் விற்கப்படும் பெண்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப உதவி செய்கிறார்.
அத்தோடு காமத்திபுரா பகுதியில் வசிக்கும் பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்த அவர், தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிகளையும் கட்டியதாகச் சொல்கிறார். ஒடுக்கப்பட்ட அந்தத் தொழிலாளிகளின் நலன்களுக்காகப் போராடிய அவரை `அம்மா’ என்று அன்போடு அழைக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் காமத்திபுரா பகுதியை அகற்றிவிட்டு அங்கு பள்ளி ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிடுகிறது. இதனால், ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமே பறிபோகும் நிலை இருப்பதாகக் கூறி இவர் முன்னெடுத்த போராட்டத்தால், அரசு அந்தத் திட்டத்தில் இருந்து பின்வாங்கியது. பிரதமர் ஜவஹர்லால் நேருவை நேரில் சந்தித்து, காமத்திபுரா மக்களுக்கான கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார். கடைசிவரையில் திருமணம் செய்துகொள்ளாமல் காமத்திபுராவில் வசித்து வந்த கங்குபாய், 45 ஆண்டுகளுக்கு முன்னர் வயோதிகத்தால் உயிரிழந்தார். பத்திரிகையாளர் ஹூசைன் ஜைதி, கடந்த 2011-ல் எழுதிய Mafia Queens of Mumbai போன்ற மிகச்சில பதிவுகளைத் தவிர இவரைப் பற்றிய பதிவுகள் அதிகம் இல்லை. பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளுக்காகப் போராடிய இவரது பெயர், சில இடங்களில் போதைப்பொருள் கடத்தல், வன்முறை போன்ற சம்பவங்களிலும் அடிபட்டிருக்கிறது.
Also Read – வலிமை படத்தின் வில்லன் கேங் – ரியல் Satan’s Slaves பத்தி தெரியுமா?