தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 69-வது வயதை நிறைவு செய்து, 70-வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார். அதைக் கொண்டாடும் விதமாக நேற்று அவருடைய சுயசரிதையான உங்களில் ஒருவன் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பிறந்தநாளில் அவருடைய உணர்வுகளை ஒரு பத்திரிகையாளராக பக்கத்தில் இருந்து பார்த்து அவருடைய உணர்வுகளை அவதானித்த வகையில், சில முக்கிய நிகழ்வுகளையும் ஸ்டாலின் நவரசம் என்ற தொகுப்பாக பார்க்கலாம்.
புன்னகை அல்லது மகிழ்ச்சியான தருணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை மறந்து மகிழ்ச்சியாக இருந்த பல தருணங்கள் அவருடைய வீட்டிற்குள், குடும்ப நிகழ்வுகளின் போது இருந்திருக்கலாம். ஆனால், பொதுவெளியில் தான் ஒரு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர், கட்சியின் தலைவர் என்று எந்தவிதமான கான்ஷியஸும் இல்லாமல் இயல்பாக மகிழ்ச்சியையும் கொஞ்சம் வெட்கத்தையும் வெளிப்படுத்திய தருணங்கள் என்றால் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடலாம்.
2010-ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது, மாநாட்டின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் ஐ.லியோனியின் பேச்சை ரசித்துக் கேட்ட மு.க.ஸ்டாலின், தன்னை மறந்து குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்தார். ஒரு இடத்தில், மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டு பேசிய லியோனி, துணை முதலமைச்சர் கூட இந்த மாநாட்டிற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு டேக்கை எப்போதும் கழுத்தில் அணிந்துள்ளார். அதை அவர் அணிவதற்கு எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால், போலீஸ்கார்கள் என்னையே சல்யூட் அடித்து உள்ளே அனுப்புகிறார்கள். அவரை அந்த டேக் இல்லையென்றால் தடுத்து நிறுத்திவிடுவார்களா? என்று குறிப்பிட்ட நகைச்சுவை செய்தபோது, கொஞ்சம் வெட்கத்தோடு முகத்தை மறைத்துக் கொண்டு சிரித்தார்.
அதேபோல், தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் பெரியராக நடித்த சிறுவன் உள்பட அந்த நிகழ்ச்சியில் நடித்த சிறுவர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அவர் விடைபெற்றுச் செல்லும்போது, அதில் ஒரு சிறுவன் பாதி தூரம் போய்விட்டு மீண்டும் திரும்பிப் பார்த்து, மு.க.ஸ்டாலினுக்கு டாடா காட்டினார். அந்தச் சிறுவன் அப்படிச் செய்ததும், தன்னை மற்ந்து அனிச்சை செயலாக அந்த சிறுவனுக்கு மீண்டும் மு.க.ஸ்டாலின் டாடா காட்டியபோது, அவர் முகத்தில் அப்படி ஒரு வெட்கமும், புன்னகையும் வெளிப்பட்டது.
இன்பம்
`Stalin is most dangerous than Karunanidhi’ என்று பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா சொன்ன தகவலை மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் சொன்னபோதும், 2022-க்குப் பிறகு மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்கும் வலிமை இந்தியாவில் மு.க.ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது என்று பரவலாக பத்திரிகைகளும், அகில இந்தியத் தலைவர்களும் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை ஊட்டியபோதும், அதை மிக பெருமிதமாகவும், சந்தோஷமாகவும் ஆமோதித்துக் கொண்டார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களே ஊர்ஜிதப்படுத்தும் தகவல்கள்.
கோபம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயல்பில் சற்று முன்கோபமும் எரிச்சல் அடையும் சுபாவமும் உள்ளவராகத்தான் இருந்தார். அது பத்திரிகையாளர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். குறிப்பாக 2006-11 காலகட்டத்தில் அவர். துணை முதலமைச்சராக இருந்தபோது, பலமுறை பத்திரிகையாளர்களிடமும், பொதுவெளியிலும் தன் முன் கோபத்தையும் எரிச்சல் முகத்தையும் வெளிப்படையாகவே காட்டியுள்ளார். குறிப்பாக அவர் துணை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஒருமுறை லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றுவிட்டுத் திரும்பினார். ஆனால், அவர் மருத்துவ சிகிச்சைக்குச் சென்றுள்ளார் என்ற தகவல் அந்த நேரத்தில் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. அது தெரியாத பத்திரிகையாளர்கள், மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து இரவு 2 மணிக்குச் சென்னை திரும்பிய போது, அந்த நேரத்திலும் அவரை வழிமறித்து விமான நிலையத்தில் வைத்து பேட்டி காண முயற்சித்தனர். அதில் கடும் கோபமடைந்த மு.க.ஸ்டாலின்…. “நான் ட்ரிட்மெண்டுக்காக வெளிநாடு போய்ட்டு வர்ரேன்.. வேற ஒன்னுமில்ல… ” என்று கடும் ஆத்திரத்துடன் பதிலளித்தார். அதன்பிறகு மெட்ரோ ரயிலில் செல்பி எடுக்க முயன்றவரை அறைந்தது என பல சம்பவங்கள். ஆனால், 2016 காலகட்டத்திற்கு பிறகு முன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள பழகியதோடு, மிகுந்த பக்குவம் வாய்ந்தவராக பத்திரிகையாளர்களை டீல் செய்யப் பழகினார். ஆனால், அதன்பிறகு அரசியலில் நடைபெற்ற ஒரு சம்பவம் மு.க.ஸ்டாலினின் கோபத்தை அதிகப்படுத்தியது.
2021 ஏப்ரல் 6 /ம் தேதி சட்டமன்றத் தேர்தல். அதற்கான பிரசாரம் உச்சத்தில் இருந்த நேரம். மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றி சூறாவளிப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவருடைய பிரச்சாரத்தை முடக்கவும், உளவியல் ரீதியாக தி.மு.க-வினரை நிலைகுலையச் செய்யும் நோக்கத்தோடு, எதிர் முகாமில் இருந்த அ.தி.மு.க-வும், பி.ஜே.பி-யும் மத்திய அரசின் உதவியோடு, மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, சபரீசன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அந்த நேரத்தில்தான் தன் இயல்புக்கு மாறாக, மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திலேயே தன்னுடைய கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அதுவரையிலும் ஸ்டாலின் காட்டிய முகம் என்பது வேறு. ஆனால், அந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் காட்டிய முகம் வேறு. அதுபோல், நேரடியாக போய் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கேட்டும், அவர் அளிக்கவில்லை. அந்தக் கோபம் மு.க.ஸ்டாலின் மனதில் இன்றும் ஆறாமல் அப்படியே உள்ளது.
சோகம்
தேர்தல் தோல்விகள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உயிரிழப்பு, குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பிரச்சினைகளின் போதுகூட மு.க.ஸ்டாலின் சோகத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஆனால், அவர்களுடைய குடும்பத்திற்கும், தி.மு.க என்ற பேரியக்கத்திற்கும் ஆலமரமாக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இறந்த போது, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவருடைய வாழ்நாள் சோகமும், அவர் உணர்வில் இருந்த உருக்கமும் நிரம்பி வழிந்தது. அந்த அறிக்கையில், ஒருமுறை அப்பா என்று அழைத்துக் கொள்ளவா தலைவரே என்று மு.க.ஸ்டாலின் வினவியிருந்தது, தி.மு.க தொண்டர்களை மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழகத்தையும் உருக்கமான, சோகமான ஒரு உணர்வுக்கு உந்தித் தள்ளியது.
பெருமிதம்
2006-11 காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோதோ, 2019-ல் அவர் தி.மு.க-வின் செயல் தலைவராகவும், அதன்பிறகு தி.மு.க தலைவராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்திலோ… குடும்ப நிகழ்வுகளின் போதோ… அவர் முகத்தில் எந்தவிதப் பெருமிதமும் அப்பட்டமாக வெளிப்பட்டதில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் முதலமைச்சராக கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, முதன் முறையாக முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்… என்று சொல்லிவிட்டு மொத்த சபையையும் சில நிமிடங்கள் பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தார். அந்த நொடியில்தான் அவர் முகத்தில் 1000 வாட்ஸ் பெருமிதம் காணப்பட்டது.
பயம், அழுகை
எமர்ஜென்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்களோ… அவர் சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டபோது அருகில் இருந்தவர்கள் கூட மு.க.ஸ்டாலின் பயந்து நடுங்கிவிட்டார் என்று எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. ஆனால், உண்மையில் அவர் அதிகம் உள்ளூற அஞ்சிய நேரம் என்றால், மெரீனா கடற்கரையில் கலைஞருக்கு இடம் மறுக்கப்பட்டபோதுதான்.
2018 ஆகஸ்ட் 7-ம் தேதி தி.மு.க தலைவரும், மு.க.ஸ்டாலின் தந்தையுமான கருணாநிதி மரணமடைந்தார். அவருக்கு மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் விரும்பினர். ஆனால், அதற்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் முழுமையான ஒத்துழைப்புக் கொடுக்கப்படவில்லை.
டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க எம்.பி-க்கள் மத்திய அரசோடு பேச்சு வார்த்தை நடத்தியபோதும், மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தபோதும்கூட அவருக்கு பாசிட்டிவ்வான பதில் கிடைக்கவில்லை. அதையடுத்து, தி.மு.க-வினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், அவரது வீட்டிலேயே, செவ்வாய்க் கிழமை இரவு அந்த மனுவை நள்ளிரவில் விசாரித்தார். ஆனால், அதில் முடிவுக்கு வர முடியாத நீதிபதி, மறுநாளுக்கு அந்த வழக்கை ஒத்தி வைத்தார். அதையடுத்து, மறுநாள் காலையில் தொடங்கிய வழக்கு, முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போனது. அப்போது கலைஞரின் உடல் கோபாலபுரம் வீட்டிலிருந்து, ராஜாஜி ஹாலுக்கு மாற்றப்பட்டு இருந்தது. ராஜாஜி ஹாலில் கூடியிருந்த லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வருமோ என்ன எண்ணத்தில் ஒவ்வொரு நொடியும் திக் திக் நொடிகளாக துடித்துக் கொண்டிருந்தன. அப்போது மு.க.ஸ்டாலின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வருமோ? என்ற அச்சமும், தீர்ப்பு தீர்ப்பு நெகட்டிவ்வாக வந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற குழப்பமும் தந்தை இறந்த சோகத்தைத் தாண்டியும் அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு வழியாக மதியத்திற்கு மேல் அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சி.எஸ். சுந்தர் அமர்வு, மெரீனாவில் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பின் விபரம் ஸ்டாலினுக்குச் சொல்லப்பட்ட போது, அவர் குமுறி வெடித்து அழுத காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது.
அவமானம்
2016 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க கலைஞர் தலைமையில் சந்திக்கவில்லை. அந்த நேரத்தில் கலைஞரின் உடல்நலம் பெரிதும் நலிவடையத் தொடங்கிவிட்டது. அதனால், நமக்கு நாமே என்ற கோஷத்தோடு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை உருவானது. ஆனால், அந்த த் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க-வே ஆட்சி அமைத்த து. அ.தி.மு.க-வின் தலைமையை ஜெயலலிதா ஏற்ற பிறகு, தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றதும், தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க தோற்றதும் அதுதான் முதல்முறை. அது, மு.க.ஸ்டாலின் அவர்களை கொஞ்சம் அவமானமாக உணரவைத்திருந்தது. அதோடு, 2016-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக உட்கார இருக்கை ஒதுக்கப்பட்டது. அதையும் தனக்கு நேர்ந்த அவமானமாகத்தான் மு.க.ஸ்டாலின் கருதினார். அந்த முகவாட்டம் அதில் தெளிவாகத் தெரியும்.
கருணாநிதி மறைந்த பிறகு, கட்சியில் சில பிரச்னைகள். அதே நேரத்தில் குடும்பத்துக்குள்ளும் மு.க.அழகிரியால் சில பிரச்னைகள் எழுந்தன. அது அந்த நேரத்தில் பத்திரிகைகளில் பூதாகரமான செய்திகளாக வெளியானபோதும், ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தபோதும், அது தொடர்பாக வெளியான விமர்சனங்களையும் அவமானத்தின் சின்னமாகவே மு.க.ஸ்டாலின் கருதினார்.
ஜென்டில்மேன்
தமிழக அரசியலில் பல்வேறு தருணங்களிலும் தனது அரசியல் முதிர்ச்சியான செயல்பாடுகளால் எதிர்க்கட்சியினரால் கூட ஸ்டாலின் பாராட்டப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரை நேரடியாக சந்தித்து வர்தா புயல் நிவாரண நிதியுதவி அளித்தது அன்றைய அரசியல் சூழலில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஸ்டாலினை வரவேற்று அவரிடம் கருணாநிதி குறித்தும் அன்று ஜெயலலிதா நலம் விசாரித்தார். அதேபோல், கருணாநிதி சமாதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கே சென்று கோரிக்கை வைத்ததும், அதை அவர் நிராகரித்ததும் நாம் அறிந்ததே. இந்தநிலையில், கடந்த 2020-ல் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைந்ததும், தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார் ஸ்டாலின். அதுவே, அவர் சென்னை திரும்பியதும் நேரில் சென்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் சொன்னார். எந்த வீட்டில் கருணாநிதிக்கு மெரினாவில் சமாதி அமைக்க எடப்பாடி மறுப்புத் தெரிவித்தாரோ, அதே வீட்டில் அதை மறந்து தாயார் மறைவுக்கு ஆறுதல் சொன்னது அரசியல் உலகில் பரவலாகக் கவனம் ஈர்த்தது.
2016 ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது பற்றி நமக்குத் தெரியும். ஆனால், 2021-ல் முதல்முறையாக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கும் விழாவுக்கு அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் என இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நிகழ்வில் எடப்பாடி கலந்துகொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு புரோட்டோகால்படி இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, நிகழ்ச்சி முடிந்தபின்னர் ஒரே மேசையில் ஓ.பி.எஸ்ஸோடு அமர்ந்து ஸ்டாலின் சிற்றுண்டி சாப்பிட்டது தமிழகத்தின் அரசியல் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது.
ஆக்ரோஷம்
2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சியில் இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தல் தி.மு.க வரலாற்றில், குறிப்பாக மு.க.ஸ்டாலினின் அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகத்தான் பார்க்கப்படுகிறது. அப்போது தி.மு.க-வினர் பூத்களில் ஏற்பட்ட சில குளறுபடிகளால், தி.மு.க-அ.தி.மு.க-வினருக்கு இடையில் ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டது. அதைக் கேள்விபட்டு சம்பவ இடத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின் அவரே ஸ்டன்ட் மாஸ்டராக செயல்படும் ஒரு சூழலும் ஏற்பட்டது. கொடிக் கம்பை கையில் வைத்துக் கொண்டு, ரகளையில் ஈடுபட்டவர்களை மு.க.ஸ்டாலின் அடித்து விரட்டிய காடசியை அவருடைய ஆக்ரோஷமான தருணமாக பதிவு செய்துள்ளது காலம். மற்றபடி, பி.ஜே.பியோடு எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் அவர் பதிவு செய்வது அவரது கொள்கை ஆக்ரோஷத்துக்கு உதாரணம்.