நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகள் ஒரே நேரத்தில், அதாவது 7.30 மணிக்குத் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. பின்னணி என்ன?
ஐபிஎல் 2021
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில், கடைசி இரண்டு லீக் போட்டிகள் இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தலாம் என ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வரும் ஸ்டார் நெட்வொர்க் வைத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், அக்டோபர் 8-ம் தேதி மதியம் 3.30-க்கு நடைபெறுவதாக இருந்த மும்பை Vs ஹைதராபாத் போட்டியும், பெங்களூரு Vs டெல்லி போட்டியும் ஒரே நேரத்தில், இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பின்னணி என்ன?
ஸ்டார் நெட்வொர்க்கின் கோரிக்கை ஒரு காரணம் என்றாலும், கடைசி லீக் போட்டிகளின்போது ஒரு அணிக்கு மட்டும் அட்வாண்டேஜ் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் இப்படி ஒரு முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு நிறுவனத்தின் கோரிக்கைக்குப் பின்னால் ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள். மதியம் நடக்கும் போட்டிகளுக்கான டி.ஆர்.பி இரவில் நடக்கும் போட்டிகளை விட ரொம்பவே குறைவு என்பதால், அந்த நிறுவனம் இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது. ஒருவேளை கடைசி நாள் லீக் போட்டிகளில் முதல் போட்டி முடிவில் பிளே ஆஃபுக்குச் செல்லும் அணிகள் முடிவாகிவிட்டால், இரண்டாவது போட்டி முக்கியத்துவமற்றதாகிவிடும். ஒரே நேரத்தில் நடந்தால், இரண்டு போட்டிகளின் முடிவும் ஒரே நேரத்தில் வரும் என்பதும் ஒரு காரணம்.
ரவுண்ட் ராபின்
ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் பற்றிய அறிவிப்பை பிசிசிஐ அக்டோபர் 25-ல் வெளியிட இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் 10 அணிகள் கொண்ட தொடராக இருக்கப் போகிறது. இதனால், தற்போதைய முறையில் அல்லாமல், ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிகிறது. கடந்த 2011-ல் 10 அணிகள் இருந்தபோது இதேமுறைதான் கடைபிடிக்கப்பட்டது. ரவுண்ட் ராபின் முறையில் மொத்த அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அணி, தனது குழுவில் இடம்பெற்றிருக்கும் அணிகளோடு தலா இரண்டு முறையும், மற்றொரு குழுவில் இடம்பிடித்திருக்கும் அணிகளோடு தலா ஒரு முறையும் மோத வேண்டும். இதன்படி, 74 போட்டிகள் கொண்டதாக ஐபிஎல் தொடரை நடத்த முடியும்.
ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளை சோதனை முறையில் நடத்தும்போது, அதன் டி.ஆர்.பி, ரசிகர்களின் வரவேற்பு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து தகவல்களைப் பெற முடியும். அதன்மூலம், அடுத்த ஆண்டில் குறைவான நாட்களிலேயே ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க முடியும் என்ற கணக்கும் பிசிசிஐ-யிடம் இருக்கிறது. இப்படி பல்வேறு காரணங்களை ஆய்வு செய்தே முதல்முறையாக ஐபிஎல் தொடரில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளை நடத்த பிசிசிஐ கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
Also Read – உலகக் கோப்பையோடு விடைபெறும் ரவிசாஸ்திரி… இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?