தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநரான இரா.நாகசாமி, உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91. புகழ்பெற்ற பத்தூர் நடராஜர் சிலையை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர லண்டன் நீதிமன்றத்தில் அவர் நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வழக்கின் பின்னணி என்ன… கும்பகோணம் சிலை எப்படி லண்டன் போனது.. தெரிஞ்சுக்கலாம் வாங்க…
இரா.நாகசாமி
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சமஸ்கிருத பண்டிட் ராமச்சந்திர சாஸ்திரிகளின் மகனாகக் கடந்த 1930 ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தவர் இரா.நாகசாமி. மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், பூனே பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 1959-ல் சென்னை அருங்காட்சியகத்தின் கியூரேட்டாகப் பொறுப்பேற்றார். 1966-ல் தமிழக அரசு, தமிழ்நாடு அரசு தொல்லியல் பாதுகாப்புத் துறை நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. அதன்பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்ற அவர், 1988-ல் பணி ஓய்வுபெற்றார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருந்த அவர், கவிஞர், சொற்பொழிவாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பணியில் இருந்தபோது தமிழகத் தொல்லியல் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.
தமிழகத்தில் தொல்லியல் துறை புகழ்பெற்றதாகவும் மக்கள் மத்தியில் அந்தத் துறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படவும் அரும்பாடுபட்டவர். தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரான இரா.நாகசாமிக்கு மத்திய அரசு, கடந்த 2018-ல் பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவித்தது. இவரது கட்டுரைகளை 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து யுனெஸ்கோ வெளியிட்டிருக்கிறது. புகளூர் சேர மன்னர் கால கல்வெட்டுகள், புகழ்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் மகால், வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, எட்டயபுரத்தில் இருக்கும் பாரதியார் பிறந்த வீடு என தமிழகத்தின் முக்கியமான வரலாற்றுப் பொங்கிஷங்களைப் பாதுகாத்து புதுப்பித்ததில் முக்கியமான பங்காற்றியவர். இவரது, ‘Master pieces of South Indian Bronzes’, ‘Mahabalipuram (Monumental Legacy) ஆகிய நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கும்பகோணம் பத்தூர் நடராஜர் சிலையை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றத்தில் இவர் அளித்த சாட்சியமும் வரலாற்று ஆவணங்களோடு முன்வைத்த வாதமும் ரொம்பவே முக்கியமானது.
Also Read: Amar Jawan Jyoti: 50 ஆண்டுகள் அணையாமல் இருந்த அமர் ஜவான் ஜோதியின் வரலாறு தெரியுமா?
பத்தூர் நடராஜர் சிலை
1976-ல் கும்பகோணம் அருகே உள்ள பத்தூர் கிராமத்தில் விவசாயப் பணிகளுக்காகத் தனது நிலத்தில் குழிதோண்டிய விவசாயி ஒருவருக்கு 10 வெண்கலச் சிலைகள் கிடைத்தன. அவற்றைப் பரிசோதித்ததில், சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்த வெண்கல நடராஜர் சிலை ஒன்றை வியாபாரி ஒருவரிடம் கொடுத்து 200 ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த வியாபாரி சென்னையைச் சேர்ந்த கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் ஒருவரின் ரூ.10,000-த்துக்கு விற்கவே, அவரிடமிருந்து மும்பை வியாபாரிக்கு ரூ.2 லட்சம் விலையில் அந்த சிலை கைமாற்றப்படுகிறது. அதன்பிறகு அந்த சிலை எங்கிருக்கிறது என்ற தகவலே இல்லாமல் போயிருக்கிறது. அந்த நடராஜர் சிலை தனியார் ஒருவர் மூலம் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு 1982-ல் தகவல் கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி, தடயவியல் நிபுணர் சந்திரசேகர் மற்றும் காவல்துறை அதிகாரி ராஜசேகரன் நாயர் ஆகியோர் முயற்சியால் 1990-ல் இந்தியா கொண்டுவரப்பட்டது.
இரா.நாகசாமி முன்வைத்த வாதங்கள்
லண்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியபோது இந்திய வரலாறு குறித்தும் தொல்லியல் தொன்மை குறித்தும் நீதிபதி, தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். 41 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவில் இவைகள் குறித்த தெளிவான புரிதல் தனக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முக்கியமான காரணம் இரா.நாகசாமி முன்வைத்த வாதங்கள். லண்டனில் இருந்த நடராஜர் சிலை மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் மண் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் மூலம் உறுதியானது. ஆனால், குறிப்பிட்ட இடத்தில்தான் அது புதைக்கப்பட்டிருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது. இந்த வழக்கில் நான்கு நாட்கள் சாட்சியம் அளித்த இரா.நாகசாமியை ஸ்காட்லாந்து யார்டு வழக்கறிஞர் துருவித் துருவி குறுக்கு விசாரணை செய்தார்.
வேதங்களில் குறிப்பிட்டுள்ள வரிகளை மேற்கோள் காட்டி பேசிய அவர், அன்னியர் படையெடுப்பால் கோயில் ஒன்று பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அங்கிருக்கும் சிலைகளை எப்படி மண்ணில் புதைக்க வேண்டும், ஆற்றுப் படுகையில் எத்தனை அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் எல்லாம் எப்படி விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நாகசாமி எடுத்துரைக்க எதிர்த்தரப்பு திகைத்தது. ஆகம விதிகளின்படி ஒரு இடத்தில் கோயிலின் ஒரு கல் இருந்தாலே, அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்; அதற்கு அதுவே உறுதியான சான்று என்பதையும் குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார். குறிப்பிட்ட அடி ஆழத்தில் சிலைகள் புதைக்கப்பட்டிருக்கும் நிலையில், தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்தி நடத்தப்படும் பூஜைகள் குறித்த விளக்கத்தையும் அவர் லண்டன் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
சோழர் கால வெண்கலச் சிலைகள் குறித்த புகைப்பட ஆதாரங்களோடும் அதன் எடையமைப்பு குறித்தும் இரா.நாகசாமி வைத்த அறிவியல் பூர்வமான வாதங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த சிலை பத்தூர் கோயிலுக்கே சொந்தமானது என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட நடராஜர் சிலையை தமிழ்நாடு தொல்லியல் துறை மீட்டு, 1990-ல் தமிழகத்துக்கு வெற்றிகரமாக மீட்டுக் கொண்டுவந்தது.
Also Read: IAS Cadre Rules: சர்ச்சையாகும் ஐஏஎஸ் விதிமாற்றம்… மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் – பின்னணி என்ன?