கள்ளக்குறிச்சி மாணவி மரணம், அதைத் தொடர்ந்து நடந்த கலவரம் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கு. இதைப்போல, எத்தனையோ கலவரங்களைத் தமிழக வரலாறு தனக்குள் பதித்து வைத்திருக்கிறது. நாம இந்த வீடியோல பார்க்கப்போறது 1990 – 2000 இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தை உலுக்கிய 5 கலவரங்களைப் பற்றிதான்..!
1991 மாணவர்கள் போராட்ட வன்முறை
1991 அக்டோபர் 25-ல் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சுரேஷை மாநகரப் பேருந்து நடத்துனர் ஒருவர் அவமதித்ததாகத் தெரிகிறது. அத்தோடு மாணவரை தரக்குறைவாகப் பேசியதோடு, அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நடத்துனரைக் கண்டித்து சென்னையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், போலீஸார் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டங்களைக் கட்டுப்படுத்தினர். இதில், 40 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
1992 வாச்சாத்தி வன்முறை
1992 ஜூன் 20-ல் கடத்தப்பட்ட சந்தன மரங்களைத் தேடி வாச்சாத்தி கிராமத்துக்கு வனத்துறை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர், விவசாயி ஒருவரின் தோட்டத்துக்கு அருகில் சில சந்தன மரங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த விவசாயியிடம் விசாரிக்கையில், வனத்துறை அதிகாரி செல்வராஜ் அவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதையடுத்து, ஊர் மக்கள் திரளவே கைகலப்பாகியிருக்கிறது. உடனே செல்வராஜை வாச்சாத்தி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அன்றைய தினம் மதிய அளவில் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை என அரசு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் குவிந்திருக்கிறார்கள்.
வீடுகளைச் சூறையாடியதோடு, கால்நடைகள், விவசாய நிலங்களையும் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கிறது இந்த கும்பல். இவர்களின் வருகை குறித்து ஓரளவுக்குத் தகவல் தெரிந்த நிலையில், பெரும்பாலான ஆண்கள் காடுகளில் மறைந்திருந்திருந்தனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்த மக்களை எல்லாம் ஊர் நடுவே இருந்த ஆலமரத்தில் கூட்டியவர்கள், பழங்குடியின பெண்களை மட்டும் தனிமைப்படுத்தி 16 பேரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அத்தோடு, மக்களை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று கொடுமையான சித்திரவதைகளைச் செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் வெளியே தெரியவே ஒரு மாதம் கடந்த நிலையில், வழக்குப் பதிவதிலும் விசாரணையிலுமே தாமதம் ஆகியிருக்கிறது. மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பழங்குடியினர் சங்கம் ஆகியோரின் தொடர் முயற்சியால் 19 ஆண்டுகளுக்குப் பின்னர், தீர்ப்பு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, அவர்களில் 54 பேர் இறந்து போயிருந்தனர். இதுகுறித்து,
‘வாச்சாத்தி – உண்மையின் போர்க்குரல்’ என்ற பெயரில் ஆவணப்படமாக வெளிவந்தது.
1995 – கொடியன்குளம் கலவரம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள கொடியன்குளம் கிராமத்தில் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி புகுந்த காவலர்கள், மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை ஏவினர். அத்தோடு வீடுகளையும் அதிலிருந்த பொருட்களையும் சூறையாடினர். போலீஸ் வருகை குறித்த தகவலை முன்னரே அறிந்ததால், பெரும்பாலான ஆண்கள் ஊரைக் காலி செய்ததாகச் சொல்கிறது கே.ஏ.மணிக்குமார் எழுதிய ஆய்வுக் கட்டுரை. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிக அளவில் போலீஸ் தாக்குதல்களை எதிர்க்கொண்டதாகவும் சொல்கிறார் மணிக்குமார். ஆபரேஷசன் வீனஸ் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரம் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் இருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தனர். மேலும் பலர் தாக்குதலில் காயமடைந்தனர்.
இந்தக் கலவரத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது இருவேறு சாதிகளைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான். 1995ம் ஆண்டு ஜூலை 26-ல் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தை தங்கவேலு என்பவர் ஓட்டியிருக்கிறார். வீரசிகாமணிபுரம் என்ற கிராமத்தைக் கடந்து பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர்களை ஒதுங்கிப் போகுமாறு சொல்லியிருக்கிறார். ஆனால், இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மீது ஆதிக்க சாதியினர் சாதிரீதியாகத் தாக்குதல் நடத்தினர். நடத்துநரும் தாக்கப்படவே, இது சாதி ரீதியான மோதலாக உருவெடுத்ததாகவும் சொல்கிறது அந்த ஆய்வுக் கட்டுரை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோமதி நாயகம் தலைமையில் ஒருநபர் ஆணையமும் 1995ம் ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1996ம் ஆண்டு மார்ச்சில் விசாரணை அறிக்கையை அரசிடம் அளித்தது.
1999 தாமிரபரணி படுகொலை
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், தங்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 1999 ஜூன் 8-ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட 650-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் மனைவிகள், புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு ஐக்கிய ஜமாஅத் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் 1999 ஜூலை 23-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட அந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய போலீஸார் அனுமதிக்கவில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்கும்படி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அதையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. அப்போது போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒரு பகுதியினர், தாமிரபரணி ஆற்றின் வழியாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதைத் தடுக்க போலீஸார் தடியடி நடத்தியதோடு, கற்களாலும் தாக்கினர். இதிலிருந்து தப்புவதற்காக ஆற்றுக்குள் போராட்டக்காரர்கள் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில், 2 வயதுக் குழந்தை விக்னேஷ், இரண்டு பெண்கள் உள்பட 17 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நீதிபதி மோகன் தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தெரிவித்தது. மீதமிருந்தவர்கள் காயத்தால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
2000 – தருமபுரி பேருந்து எரிப்பு
1991 – 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு முறைகேடாக 7 தளங்கள் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைதண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியான பின்னர், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். பல இடங்களில் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் தீவைக்கவும் செய்தனர்.
அப்போது, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்று இரண்டு பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை தருமபுரி மாவட்டத்தில் வழிமறித்த அ.தி.மு.க-வினர் மாணவிகள் அனைவரும் பேருந்துக்குள் இருந்து இறங்கும் முன்னரே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, விருதாசலத்தைச் சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி ஆகிய மூன்று மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 மாணவிகள் காயமடைந்தனர். இந்த வழக்கில் 3 பேருக்குத் தூக்கு தண்டனையும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து உயர் நீதிமன்றம் கடந்த 2005 டிசம்பர் 7-ல் தீர்ப்பளித்தது.
கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க அரசுகள் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க.. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!