’அக்னி நட்சத்திரம்’ என்றால் என்ன… வானியலும் ஜோதிடமும் என்ன சொல்கின்றன?

`அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது; கத்தரி வெயில் கொளுத்தும்’ போன்ற செய்திகளை நாம் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கடந்துபோகாமல் இருக்க முடியாது. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

அக்னி நட்சத்திரம்

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் குறிப்பாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்று குறிப்பிடப்படும் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விடக் கூடுதலாகவே இருக்கும். சரி அக்னி நட்சத்திரம்னா என்ன?

Agni natchathiram
Agni natchathiram

அக்னி நட்சத்திரம் என்ற பதத்தை வானியலாளர்கள் பயன்படுத்துவதில்லை. இது வானியலில் சொல்லப்படும் வார்த்தை இல்லை. ஜோதிட சாஸ்திரம் கொடுத்த வார்த்தை இது. ‘அக்னி நட்சத்திரம் என்றோ கத்திரி வெயில் என்றோ வானிலையில் இல்லை. அது மூட நம்பிக்கை என்றும் சொல்லவில்லை. அதுபற்றி பேச விரும்பவில்லை’ என சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் பாலச்சந்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21-ம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை ’அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வார்கள். இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை என 25 நாட்கள் அக்னி நட்சத்திர நாட்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஜோதிட சாஸ்திர கணிப்புப்படி பொதுவாக 21 நாட்கள் இருக்கும் அக்னி நட்சத்திர காலகட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் என்கிறார்கள்.

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்துக்கும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் இல்லை. ஆனாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் சொல்கிறது. இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்

கத்திரி வெயில்

பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமி, சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது. ஜோதிட அடிப்படையில் பார்க்கும்போது, உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார். இதன்படி, தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார். சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்து விடுகிறார். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் இதைக் கத்திரி வெயில் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

சுபகாரியங்கள்

அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள்.
ஆனால் சில சுபசெயல்களை நடத்தலாம் என்கின்றன நட்சத்திரங்கள். திருமணம், சீமந்தம், சத்திரங்கள் கட்டுதல், உபநயனம், பரிகார வேள்விகள் ஆகியவற்றைச் செய்யலாம். ஆனால், வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதைத் தவிர்க்கலாம். தோட்டம், மலர்ச் செடிகள், குளங்கள், குட்டைகள் வெட்டுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மரங்களை வெட்டுதல், நார் உரித்துக் கயிறு செய்தல், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாக்குதல் ஆகியவை வேண்டாம். அக்னி நட்சத்திரத்துக்கு முன்னர் தொடங்கிய பணிகளை இக்காலகட்டத்தில் செய்யலாம் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

Also Read – நீங்க இந்தியராவே இருந்தாலும்… இந்தியாவில் இருக்க இந்த இடங்களுக்கெல்லாம் போக பெர்மிஷன் வாங்கணும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top