ஐம்பது ஆண்டுகளில் முதல்முறை; திடீர் உச்சத்தில் எலுமிச்சை விலை – 4 காரணங்கள்!

கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் நிலையில் எலுமிச்சை விலை வரலாறு காணாத உச்சம் தொட்டிருக்கிறது. இதற்கு முக்கியமாக நான்கு காரணங்களைச் சொல்கிறார்கள் வியாபாரிகள்… அவை என்னென்ன?

எலுமிச்சை விலை

பொதுவாக எலுமிச்சை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் 120 ரூபாய் வரை இருப்பது வழக்கம். ஆண்டு தோறும் மூன்று சீசன்களில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சையின் விலை கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதைத் தாண்டி எகிறியதில்லை. மார்ச் கடைசி வாரத்தில் 120 ரூபாயாக இருந்த எலுமிச்சையின் விலை ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது, நாட்டின் பல பகுதிகளில் எலுமிச்சை கிலோ ஒன்றுக்கு ரூ.300-350 என்கிற விலையில் விற்கப்படுகிறது. மீடியம் சைஸில் இருக்கும் ஒரு எலுமிச்சை பழத்தின் விலையே ரூ.10-15 என்ற நிலை வந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

எலுமிச்சை
எலுமிச்சை

தேவை அதிகரிப்பு Vs விளைச்சல் குறைவு

கோடைகாலங்களில் எலுமிச்சையின் தேவை மற்ற நாட்களை விட அதிகமாகவே இருக்கும். அதேபோன்ற நிலையில், எலுமிச்சையின் விளைச்சல் குறைவாக இருந்ததே விலையேற்றத்துக்கு அடிப்படையான காரணமாக வியாபாரிகளால் சொல்லப்படுகிறது.

போக்குவரத்து செலவு

பெட்ரோல், டீசல் விலையேற்றம் எலுமிச்சை என்றில்லை அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலையை ஏற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. டீசல் விலையேற்றம் காரணமாக விளைவிக்கப்பட்ட இடத்தில் இருந்து சந்தைகளுக்கு எலுமிச்சையைக் கொண்டு வர ஆகும் செலவு அதிகரித்திருக்கிறது. இதை சரிக்கட்ட கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் ஆளாகியிருக்கிறார்கள்.

அரிதனும் அரிதான நிகழ்வு

வழக்கமாக, ஜனவரி – பிப்ரவரி, ஜூன் – ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் என மூன்று சீசன்களில் எலுமிச்சை அறுவடை செய்யப்படும். இதில், முதல் சீசனில் எலுமிச்சை அறுவடை அதிகமாக இருந்தால் மட்டுமே கோடை காலத்தில் அதன் விலை சீராக இருக்கும். ஆனால், மிகவும் அரிதான நிகழ்வாக இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் எலுமிச்சை விளைச்சல் வழக்கத்தை விட மிகவும் குறைந்தது விலையேற்றத்தில் முக்கியப் பங்காற்றியது. அதற்கு முந்தைய சீசன் காலை வாரியதும் இந்த விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

எலுமிச்சை
எலுமிச்சை

Empty Cold Storage

எலுமிச்சையை குளிர்பதன கிடங்களில் ஸ்டோர் செய்து வைத்து, நாடு முழுவதும் எல்லா சீசன்களிலும் கிடைக்கும் வகையில் விநியோகிப்பது அந்த வியாபாரத்தில் நடக்கும் இயல்பான நிகழ்வு. ஆனால், இரண்டு சீசன்களாக விளைச்சல் குறைந்த நிலையில், நாட்டின் பெரும்பாலான எலுமிச்சை குடோன்கள் காலியாகவே கிடக்கின்றன. அவற்றால் தேவையான அளவு எலுமிச்சையை சந்தைகளுக்கு அனுப்ப முடியாத நிலை இருக்கிறது.

விலை எப்போது குறையும்?

எலுமிச்சையின் அடுத்த அறுவடை சீசன் ஜூன் – ஜூலைதான். அதேபோல், பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்ற நிலை இல்லை. அப்படியிருக்கையில், எலுமிச்சை விலை குறையும் நாள் அருகில் இல்லை என்பதே களநிலவரம் என்கிறார்கள் வியாபாரிகள்.

Also Read – உலகின் விலை உயர்ந்த ’Miyazaki’ மாம்பழம் தெரியுமா… ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top