தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான ராஜ்பாத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய கட்டுமானத் திட்டம்தான் சென்ட்ரல் விஸ்டா புராஜக்ட்.
சென்ட்ரல் விஸ்டா!
பிரிட்டிஷ் ஆட்சியில் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டபோது சென்ட்ரல் விஸ்டா எனும் பகுதி கட்டமைக்கப்பட்டது. இந்தியா கேட் தொடங்கி குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்திருக்கும் ரைசினா ஹில்ஸ் வரையில் 3 கி.மீ தூரத்தில் அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கான கட்டுமானம் எட்வர்டு லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் எனும் இரண்டு பிரிட்டிஷ் வடிவமைப்பாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. 1921ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கிய கட்டுமானப் பணிகள் முடிந்து, 1927ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி அப்போதைய வைசிராய் இர்வின் பிரபுவால் திறந்துவைக்கப்பட்டது. தற்போதைய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் மட்டும் ஆறு ஆண்டுகள் நடந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தப் பகுதி மத்திய அரசு நிர்வாகத்தின் மையப்புள்ளியாக மாறியது.
சென்ட்ரல் விஸ்டா புனரமைப்புத் திட்டம்
சென்ட்ரல் விஸ்டா புனரமைப்புத் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போதைய நார்த் பிளாக், சவுத் பிளாக் பகுதிகளை அருங்காட்சியங்களாக மாற்றுதல், அனைத்து அமைச்சகங்களுக்குமான நிர்வாக அலுவலகங்கள் கட்டுதல், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகங்கள், வீடுகளை மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கியது. 2026-ல் மக்களவை உறுப்பினர்களை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப கூடுதல் உறுப்பினர்களுக்கு இருக்கைகளுடன் கூடிய புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.
இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.22,000 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்காக மட்டும் ரூ.861.90 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் மேற்கொள்ள இருக்கிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம்
மக்களவை உறுப்பினர்கள் 888 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 384 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டும் வகையில் மக்களவை ஹாலில் 1,127 எம்.பிக்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட இருக்கின்றன. நான்கு மாடிகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பகுதி மட்டும் 6,94,270 சதுர அடி அளவு கொண்டது. டிஜிட்டல் இன்டர்ஃபேஸ், தற்போதைய கட்டடத்தை விட குறைந்த அளவு மின்சார பயன்பாட்டுடன் பணிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. டாடா நிறுவனத்தின் கட்டுமானத் துறை கைவண்ணத்தில் உருவாகும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் 2025-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ட்ரல் விஸ்டா அவென்யூ
இந்தியா கேட் தொடங்கி ரைசினா ஹில்ஸ் வரையிலான 3 கி.மீ தூரம் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என்றழைக்கப்படுகிறது. இதில், கால்வாய்கள், பாலங்கள், அகலமான நடைபாதைகள், பார்க்கிங் வசதி, பசுமையான பகுதிகள் போன்றவை கட்டமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்கான டெண்டரை புகழ்பெற்ற ஷபூர்ஜி பலூஞ்ஜி நிறுவனம் எடுத்திருக்கிறது. 2021 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டு 300 நாட்களில் அவர்கள் பணிகளை முடிக்க வேண்டும். அதன்பின்னர், ஐந்தாண்டுகளுக்கு பராமரிப்புப் பணிகளையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளும்.
இதுதவிர ராஜ்பாத்தின் இருபுறமும் பத்து டாக்நட் வடிவ கட்டடங்கள் கட்டப்பட இருக்கின்றன. இந்தியா கேட்டின் உயரத்தைவிட அதிக உயரத்தில் கட்டடங்கள் கட்டப்படக் கூடாது என்ற விதிக்கேற்ப இந்தக் கட்டடங்களி உயரம் 42 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். அந்த 10 கட்டடங்கள் 7 மாடிகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய அமைச்சரவைக் கட்டடங்களில் 22 அமைச்சகங்களுக்கான அலுவலகங்களும் 41,000 பணியாளர்களும் இருக்கிறார்கள். புதிதாக கட்டப்படும் இந்தக் கட்டடங்களில் 51 அமைச்சகங்களுக்கான அலுவலகங்கள் அமைய இருக்கின்றன. அதேபோல், டெல்லி மெட்ரோவோடு இணைக்கும் பணிகள், எலெக்ட்ரிக் மூவர்ஸ் போன்றவை தரைக்கு அடியிலும், சாலைக்கும் மேல் பகுதியிலும் பாலங்கள் போல் அமைக்கப்பட இருக்கின்றன. தற்போதைய விஞ்ஞான் பவன் கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கான்ஃப்ரன்ஸ் மையம் கட்டப்படுகிறது.
Also Read – யார் இந்த தேஜஸ்வி சூர்யா… அவரைச் சுற்றும் சர்ச்சைகள் என்னென்ன?
துணைக் குடியரசுத் தலைவர், பிரதமரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் போன்றவை சென்ட்ரல் விஸ்டா அவென்யூவுக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம், போக்குவரத்துக்கான நேரம், அதற்கான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முடியும் என்கிறது மத்திய அரசு. நார்த் பிளாக்கின் வடக்குப் பகுதியில் துணைக் குடியரசுத் தலைவரின் வீடு அமைய இருக்கிறது. அதேபோல், சவுத் பிளாக்கின் தெற்குப் பகுதியில் பிரதமரின் வீடு கட்டப்பட இருக்கிறது. துணைக் குடியரசுத் தலைவரின் வீடு, அலுவலகங்கள் ஆகியவை 15 ஏக்கரிலும் பிரதமர் வீடு, அலுவலகங்கள் ஆகியவை 12 ஏக்கர் இடத்திலும் நிர்மாணிக்கப்படுகிறது.
சர்ச்சை
சென்ட்ரல் விஸ்டா திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டபோதே, நாடு பெருந்தொற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்தத் திட்டம் தேவைதானா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அதேபோல், பெருந்தொற்று காலத்தில் மக்கள் குறைதீர்ப்பதை விடுத்து அரசு இதற்காக பெரிய அளவிலான நிதியைச் செலவிடுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதேபோல், டெல்லியின் பாரம்பரிய வரலாற்றை மாற்றும் முயற்சி என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் முதலில் இடைக்காலத் தடை விதித்தது. பின்னர், அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளரான பிமால் படேல் கூறுகையில், “அந்தப் பகுதியில் இருக்கும் பாரம்பரிய கட்டடங்கள் அனைத்தையும் உள்ளடக்கியே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம், புதிய கட்டடங்கள் அழகு சேர்க்கும் வகையில் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது’’ என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
Also Read – கார்கள் இனி சங்கீதம் பாடும், அதுவும் ‘ஹன்ஸ் ஸிம்மர்’ இசையில்… #BMWi4