ரீமேக்

பழசுதான்.. ஆனால், தூசி தட்டி எடுத்தா.. யார் இந்த படங்களோட ரீமேக்ல நடிக்கலாம்?

‘பில்லா’ தொடங்கி ‘தில்லு முல்லு’ வரைக்கும் நிறைய அட்டகாசமான படங்கள் தமிழ்ல ரீமேக் ஆகியிருக்கு. ஆனா, ரீசன்ட் இயர்ஸா அப்படி எந்த முயற்சிகளும் யாரும் எடுத்த மாதிரி தெரியலை. தமிழ்ல ஜாம்பவான் இயக்குநர்களின் சில கிளாஸிக் படங்களை ரீமேக் செய்தால், அதில் இப்ப இருக்குற நடிகர்களில் யாரெல்லாம் நடிச்சா பொருத்தமா இருக்கும்-னு ஒரு சின்ன கற்பனையை நோக்கியதுதான் இந்த வீடியோ ஸ்டோரி.

அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்

இயக்குநர் ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978-ல் வெளிவந்த மாஸ்டர் பீஸ்தான் ‘அவள் அப்படித்தான்’. ஆணாதிக்கம், ஃபெமினிசம், சமூகத்தில் நிரம்பி வழியும் முரண்கள்னு அந்தப் படம் பேசின விஷயங்கள் இப்போதும் அப்படியே ஃப்ரெஷ்ஷான டாப்பிக்காதான் இருக்கும். ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா மூணு பேருமே பிஸியா இருந்த காலக்கட்டத்துல, அவங்க ஃப்ரீ டைம்ல நடிச்சுக் கொடுத்த படம்.

மஞ்சுவாக நடித்த ஸ்ரீபிரியாதான் ப்ரொட்டாகனிஸ்ட். ரஜினியும் கமலும் கொள்கை – கோட்பாட்டு அளவில் இருவேறு துருவங்களா இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள். இவர்களைச் சுற்றிதான் திரைக்கதையே இருக்கும். செம்ம கெத்தான கதாபாத்திரமா வரும் ஸ்ரீப்ரியாவின் மஞ்சு கதாபாத்திரத்துக்கு இப்போதைக்கு நயன்தாராதான் பக்காவா செட் ஆவாங்க. அந்த போல்ட்னஸ், பார்வை, தெனாவட்டுன்னு அந்த மிரட்டலான அழகுக்கு நயன்தாரா கச்சிதமாக இருப்பாங்கனு தோணுது.

ஆணாத்திக்கத்தின் முழு உருவமாக, நெகட்டிவ் அண்ட் கிரே ஷேட்ஸ் மிகுந்த ரஜினியின் தியாகு கதாபாத்திரத்துக்கு அப்படியே உட்கார்ந்துடுவாரு அஜித். ‘மங்காத்தா’ ஆக்டிங்கும் பாடி லேங்குவேஜும் போதும், இந்த ரோலுக்கு அப்படியே செட் ஆவாரு. விஜய்க்கு அதிரடியா மட்டும் இல்லாம, அண்டர்ப்ளே – அமைதியான ஆக்டிங்கும் செம்மயா வரும். தெறி, மாஸ்டர்ல இதுக்கான ரெஃபரன்ஸ் பார்க்கலாம். சமகால போராளி மாதிரியான கமல்ஹாசனின் அருண் கேரக்டருக்கு நிச்சயம் செட் ஆவாரு. ரஜினி – கமல் – ஸ்ரீப்ரியா காம்போவுக்கு இணையா அஜித் – விஜய் – நயன்தாரா காம்போவோட ஸ்கிரீன் பிரசன்ஸை யோசிச்சுப் பார்த்தாலே செம்மயா இருக்குல்ல..?

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும்

அண்ணன் – தங்கை பாசக் கதைகளில் அமரகாவியமாகத் திகழும் படம்தான் இயக்குநர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’. அதே 1978-ல் வெளிவந்த இந்தப் படத்துல ரஜினியும் சரத்பாபுவும் முழுக்க முழுக்க மோதிகிட்டே இருப்பாங்க. இவங்களுக்கு இடையில் பூ மாதிரி இதமாக இருப்பாங்க ஷோபா. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி எல்லாம்… மூணு பேரு போட்டி போட்டுட்டு இயல்பான நடிப்பில் ரசிகர்களை உறைய வெச்சிருப்பாங்க. இந்தப் படத்துல ரஜினி ரோலில் தனுஷ், சரத்பாபு ரோலில் சிம்பு, ஷோபா ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சா எப்படி இருக்கும்?

மித மிஞ்சிய தன்மான உணர்வுடன் கெத்தா சுத்தும் பாசக்கார அண்ணன் காளி என்னும் காத்திரமான கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் தனுஷ். ‘கெட்டப்பய சார் இந்த காளி…’-ன்னு கெத்துக் காட்டவும், தங்கையிடம் ஒரு குழந்தையாக குழைவதும் தனுஷுக்கு ரொம்ப ஈஸியா வரும்.

கெட்டவன்னாலே சிம்புதானே செட் ஆவாருன்னு நீங்க கேட்கலாம். இங்க சரத்பாபு சாஃப்ட் கேரக்டரா இருந்தாலும், காளின்னு வந்துட்டா ட்ரர் பீஸ் ஆகிடுவாரு. அதுவும் இல்லாம, நாம இந்த கேரட்கருக்கு சிம்புவை யோசிச்சதுக்கது காரணம், ‘விடிவி’ சிம்புவை பேஸ் பண்ணிதான். விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவைதான் இங்கே ரெஃபரன்ஸா எடுத்துக்கணும். தனுஷும் சிம்புவும் காளி – எஞ்சினியரா மோதுற சீன் எல்லாம் செம்ம மாஸா இருக்கும்ல.

தனுஷின் தங்கையாவும், சரத்பாபுவின் காதலியாகவும் வரும் பாசமும் நேசமும் பரிதவிப்பும் கொண்ட ஷோபா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமா பொருந்துறது மட்டும் இல்லாம, நிச்சயமா ஷோபாவுக்கு இணையான பக்காவான பெர்ஃபார்மன்ஸை கொடுப்பாங்கன்னு நம்பலாம்.

மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை

சீனு, விஜி, சுப்பிரமணி, ஊட்டி க்ளைமேட், உருக்கமான க்ளைமாக்ஸ்-ன்னு என்றைக்குமே நம் நெஞ்சை விட்டு அகலாத காவியத்தன்மை கொண்ட கிளாஸிக் படம்னா, அது பாலு மகேந்திரா இயக்கி 1982-ல் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ படம்தான். கமல்ஹாசனுக்கும் ஸ்ரீதேவிக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேரும் சீனுவாகவும் விஜியாகவும் வாழ்ந்துருப்பாங்க.

மூன்றாம் பிறைய தற்காலத்துக்கு ஏத்தமாதிரி சரியா பட்டி-டிங்கரிங் பார்த்தா சீனு கதாபத்திரத்துக்கு ஜெயம் ரவி கச்சிதாகப் பொருந்திப் போவாரு. ‘பொன்னியன் செல்வன்’ல அவரோட சர்ட்டிலான பெர்ஃபார்மன்ஸா இருக்கட்டும், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ கேரக்டர்ல கலக்குனதா இருக்கட்டும், சீனுவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் திறமைகளும் ஜெயம் ரவி கிட்ட நிறையவே இருக்கு.

மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவி ரோலுக்கும், அவரது சேட்டைகளுக்கும் அப்படியே பொருந்தக் கூடியவர், சந்தேகமே இல்லாம கீர்த்தி சுரேஷை டிக் பண்ணலாம். நிச்சயம் விஜி கேரக்டருக்கும், ஸ்ரீதேவியின் நடிப்புக்கும் நியாயம் செய்வார்னு நம்பலாம்.

சரி, மூன்றாம் பிறைல வர்ற சில்க் ஸ்மிதா கேரக்டருக்கு?

எதுக்குங்க உங்களுக்கு இந்த டவுட்டு, அதுக்குதான் ஸ்மிதாவை அச்சில் வார்த்த பிந்து மாதவி இருக்காங்களே!

நாயகன்

நாயகன்

மும்பை தாதா வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘நாயகன்’, தமிழ் சினிமாவின் இன்னொரு கிளாஸிக். வேலு நாயக்கரா கமல் மிரட்டிய மணிரத்னத்தின் இந்தப் படம் 1987-ல் வெளிவந்தது.

மார்னல் பிராண்டோ பாடி லேங்குவேஜை வேலு நாயக்கருக்குள்ள புகுத்தி கமல்ஹாசன் பின்னியெடுத்த இந்தப் படத்தில், அவருக்கு இணையாக எழுதப்பட்டிருக்கும் இன்னொரு கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடிச்சிருப்பார். கமல்ஹாசன் ஜோடியாக சரண்யா தன்னோட பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பாங்க.

Also Read – என்னடா கண்ணு கலங்குது.. இந்த சீன்ஸ்லாம் பார்த்தா அழுகை வராமல் இருக்குமா?!

இளைஞன், நடுத்தர வயது, முதியவர்னு ஏஜுக்கும் சரி, தாதாவுக்கான பாடி லேங்குவேஜுக்கும் சரி, கமலுக்கு இணையா இப்போ கச்சிதமா பொருந்திப் போகக் கூடியவர்களில் சூர்யாவுக்கே முதலிடம் தரலாம். ஜனகராஜின் செல்வம் கதாபாத்திரத்தை இன்னும் கூட கொஞ்சம் மெருகேத்தினா அதுல விஜய் சேதுபதியை இறக்கிவிட்டா, சூர்யா – விஜய் சேதுபதி காம்போ பட்டையக் கிளப்பும். சரண்யா நடிச்ச நீலா ரோலுக்கு சாய் பல்லவியைத் தவிர வேற யாரையும் சட்டுனு யோசிக்கவே முடியலை. அந்தக் கேரக்டருக்கு பெர்ஃபக்டா அவங்க பொருந்துவாங்கன்னு நம்புறேன்.

16 வயதினிலே

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் 1977-ல் வெளிவந்த படம் ‘16 வயதினிலே’. அந்தக் காலக்கட்டத்து அச்சு அசலான கிராமத்துப் பின்புலத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதையை இன்றைய காலக்கட்டத்தில் ஏதாவது ஒரு மலைக்கிராமத்தை களமா வெச்சு அப்கிரேடு பண்ணி எடுத்தா எப்படி இருக்கும்?

சப்பாணியா நடிச்ச கமல் கேரக்டருக்கு அதர்வா அசலா செட் ஆக அதிக வாய்ப்பு இருக்கு. அதுக்கு, அவரோட ஃபர்ஸ்ட் படமான ‘பரதேசி’யே ரெஃபரன்ஸா எடுத்துக்கலாம். சப்பாணிக்கு இணையானதான் பரதேசி கேரக்டர்ல அதர்வா பின்னியெடுத்துருப்பாரு. அப்போ, பரட்டை? – வேற யாரு கார்த்திதான். பரட்டைகிட்ட இருக்குற பத்து பொருத்தங்களும் கார்த்தியோட முதல் படமான பருத்திவீரன்லயே பார்க்க முடியும். ‘இது எப்படி இருக்கு?’-ன்னு ரஜினியோட ஈர்ப்பு குறையாம பாத்துக்குற பக்குவமான நடிப்பாற்றலும் கார்த்திகிட்ட நிச்சயம் இருக்கும்.

சரி, அந்த 16 வயசு ஸ்ரீதேவிக்கு?

தமிழில் ஜான்வியின் முதல் படமாவே இது அமையும் விதத்தில் அவருக்கே இந்த ரோல கொடுத்துடலாமே!

அவள் ஒரு தொடர்கதை

அவள் ஒரு தொடர்கதை

பெங்காலி கிளாஸிக்கான ‘மேக தக்க தாரா’ன்ற ரித்விக் கட்டக் படத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட படம்தான் ‘அவள் ஒரு தொடர்கதை’. கே.பாலச்சந்தர் இயக்கத்தில், சுஜாதாவின் அட்டகாசமான நடிப்பில் 1974-ல் வெளிவந்த இந்த உமன் சென்ட்ரிக் படத்தை இன்றைய நடுத்தர வர்க்க பொருளாதாரச் சிக்கல் பின்னணியுடன் அப்படியே படமா எடுக்கத்தக்க ஸ்கோப் நிறைந்திருக்குற படைப்பு இது.

மிடுக்கான அழகு, துடுக்கான பேச்சு, நொடிக்கு நொடி முக பாவனைகளை மாற்றக் கூடிய கேரக்டரில் சுஜாதா அவ்ளோ அழகா நடிச்சிருப்பாங்க. அந்தக் கவிதாவை அப்படியே அச்சு அசலா மீண்டும் நம் கண்முன்னே காட்டக் கூடிய வல்லைமை மிக்கவர் த்ரிஷா. ஒருவேளை த்ரிஷா இல்லைன்னா..?

நயன்தாரா!

சரி, நயன்தாராவும் இல்லைன்னா…

வேற அல்டர்நேட்டீவே இல்லை… நம்ம சமந்தா தான்!

ரைட்டு… இங்கே நான் சொன்ன க்ளாஸிக் படங்களின் கேரக்டர்களுக்கு உங்கள் பார்வையில் பொருத்தமானவங்க யாரு? இவை தவிர மற்ற க்ளாசிக் படங்களை எதையெல்லாம் யாரை வெச்சு ரீமேக் பண்ணலாம்னு உங்கள் விருப்பங்களையும் கமெண்ட் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top