டெல்டா பிளஸ்

டெல்டா பிளஸ் வைரஸ் என்றால் என்ன.. மூன்றாவது அலையை ஏற்படுத்துமா?

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸின் உருமாறிய நிலை தற்போது அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்டா பிளஸ் வைரஸின் முந்தைய நிலையான டெல்டா வைரஸ் இதுவரை சுமார் 85 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இந்த தொற்று அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவிலும் டெல்டா பிளஸ் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டெல்டா பிளஸ்
டெல்டா பிளஸ்

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸை எதிர்த்து போராட முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என ரஷ்யாவின் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மெலிடா வுஜ்னோவிக் தெரிவித்துள்ளார். “குறுகிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் ஊரடங்குகளை ஏற்படுத்த வேண்டிய நிலை வரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது டெல்டா பிளஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்டா பிளஸ் மாறுபாடு என்பது டெல்டா வைரஸின் உருமாறிய வடிவமாகும். இந்த வைரஸ் டெல்டா வைரஸைவிட வேகமாக பரவக்கூடியது. டெல்டா வகை கொரோனாவின் வெளிப்புறத்தில் உள்ள புரதம் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் கொரோனாவாக மாறியுள்ளது.

கொரோனா வைரஸின் இந்த புதிய மாறுபாட்டை AY.1 என்றும் அழைக்கின்றனர். இதன் முன்னாடி உள்ள வடிவமான டெல்டா வைரஸைவிட இந்த வைரஸ் 60 சதவீதம் அதிக வேகமாகப் பரவக் கூடியது. நுரையீரலில் உள்ள செல்களுடன் இந்த வைரஸ் எளிதில் இணைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர்-ஐச் சேர்ந்த தொற்று நோய்களின் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் ராமன் ஆர் கங்காகேத்கர் பேசும்போது, “குறிப்பிட்ட உருமாறிய வைரஸ்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவில் பரவும் தன்மை பெற்றவை” என்று குறிப்பிடுகிறார். இதுதொடர்பாக கூடுதல் ஆய்வுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. டெல்டா பிளஸ் வைரஸ்கள் ஏற்கெனவே, கொரோனாவால் பாதிப்படைந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தங்களது கவலைகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவைச் சேர்ந்த டாப் வைராலஜிஸ்ட்கள் தெரிவித்துள்ளதன்படி, டெல்டா பிளஸ் வைரஸ்கள் டெல்டா வைரஸின் அறிகுறிகளையும் பீட்டா வகை மாறுபாட்டின் அறிகுறிகளையும் கொண்டுள்ளன. அதாவது டெல்டா வைரஸால் பாதிப்படைந்தவர்களுக்கு இருமல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி, தோல்களில் பாதிப்பு, கை விரல்கள் மற்றும் கால் விரல்களின் நிறமாற்றம், நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அறிகுறிகளுடன் கூடுதலாக வயிற்று வலி, பசியின்மை மற்றும் குமட்டல் ஆகியவை இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மூன்று பேர் டெல்டா பிளஸ் வகை வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் பாதிப்பால் மத்தியப் பிரதேசத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வைரஸ்கள் கொரோனா தடுப்பூசியை பலவீனமாக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா மூன்றாவது அலையை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Also Read : வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top