ஷிவ் நாடார்

`Magus’ நிக் நேம்… முதல் முதலீடு – ஷிவ் நாடார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழர்கள் உலகமே வியக்கும் வண்ணம் சாதனைகளைப் புரிவது புதிதல்ல. அதற்கு எடுத்துக்காட்டாக பல துறைகளிலும் சாதித்த பலரையும் குறிப்பிடலாம். அதற்கு மற்றொரு முக்கியமான எடுத்துக்காட்டாக இருப்பவர் ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி பகுதியில் உள்ள மூலைமொழி கிராமத்தில் 1945-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி பிறந்தவர், ஷிவ் நாடார். தமிழ்வழி கல்வி பயின்று பின்னர் கோவையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். சிறிய அளவில் ஐ.டி துறையில் தடம் பதித்த இவர் இன்று ஐ.டி துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். இவரைப் பற்றி சில தகவல்களை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ஷிவ் நாடார்
ஷிவ் நாடார்

* ஷிவ் நாடாரின் தந்தை சுப்பிரமணிய நாடார் நீதிபதியாகப் பணியாற்றியவர். பொருளாதார அளவில் பலமுள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய ஆரம்ப கால பள்ளிக் கல்வியை அரசுப் பள்ளியிலேயே படித்தவர். 

* ஷிவ் நாடார் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் நிறுவனம் ஒன்றில் சுமார் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், வேலையில் இருந்து வெளியேறி ‘மைக்ரோகாம்ப்’ என்ற பெயரில் கால்குலேட்டர்கள் விற்கும் சிறிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இதனுடைய வெற்றியைத் தொடர்ந்து 1976-ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தைத் தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். இந்த நிறுவனத்தை தொடங்கும்போது ரூபாய் 1,87,000 முதலீடு செய்துள்ளார்.

* ஹெச்.சி.எல் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் ஆனதும் தனது அம்மாவிடம் `பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா, `வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு நன்மை செய்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து பல்வேறு உதவிகளை செய்ய முன் வந்துள்ளார். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும் கோடிக்கணக்கான ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஷிவ் நாடார் தமிழகத்தில் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியையும் உத்தரப்பிரதேசத்தில் வித்யாஞான் பள்ளியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

* ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் சிறந்த ஊழியர்களுக்கு பரிசாக மெர்சிடஸ் பென்ஸ் கார், சம்பளத்துடன் விடுமுறை என பல சலுகைகளை ஷிவ் நாடார் வழங்குவாராம். 

* ஷிவ் நாடாருக்கு `Magus’ என்ற நிக்நேமும் உள்ளது. இதற்கு `Wizard’ அதாவது வழிகாட்டி என்று அர்த்தம். 

* ஒன்றிய அரசானது ஷிவ் நாடாருக்கு கடந்த 2008-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. 

* ஷிவ் நாடார் தமிழின் பிரபல நாவலாசிரியரான ரமணிச்சந்திரனின் சகோதரர் ஆவார் . தமிழில் `பெஸ்ட் செல்லிங் ஆதர்’ என ரமணிச்சந்திரன் பெயர் வாங்கியுள்ளார்.

* ஷிவ் நாடார் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் என்ற சொகுசு கார் உட்பட பல கார்களை வைத்துள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 2 லட்சம் டாலர்கள். டெல்லியில் சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 115 கோடி என்று கூறப்படுகிறது. சில அரிய பழங்காலப் பொருள்கள் மற்றும் ஆர்ட் கலெக்‌ஷன்களையும் சேமித்து வைத்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி ஷிவ் நாடாரின் நெட் வொர்த் சுமார் 22.7 பில்லியன் அமெரிக்க டாலர். 

Also Read : Kodak: கோடாக்கின் கேமரா சாம்ராஜ்யம் ஏன் சரிந்தது… உலகின் டாப் 5 பிராண்ட் திவாலான கதை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top