ரேவதி வீரமணி

வெறும் காலால் ஓடிய ரேவதி.. இன்று ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக இந்தியாவில் இருந்து பல்வேறு வீரர்கள் தேர்வாகி வருகின்றனர். அவ்வகையில், மதுரையைச் சேர்ந்த ரேவதி வீரமணி என்பவரும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள இவர் தகுதிப் பெற்றுள்ளார். ரேவதி வீரமணியைத் தவிர தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகியோரும் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், ரேவதி வீரமணி. இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே அவரது தந்தையும் தாயும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டனர். இதனால், அவரது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது அவரது பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். அவரது திறமையைப் பார்த்து வியந்த தடகளப் பயிற்சியாளர் கண்ணன் இவருக்கு ஷூ வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றுள்ளார். மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் இளங்கலை தமிழ் படிக்க சேர்ந்துள்ளார். இதற்கும் கண்ணன் உதவியாக இருந்துள்ளார்.

ரேவதி வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை தனது வீட்டிலேயே தங்க வைத்து அவர் பயிற்சியும் அளித்துள்ளார். கல்லூரி படிக்கும்போது இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஜூனியர் மற்றும் ஜீனியர் பிரிவுகளில் கலந்துகொண்டு பரிசுப் பெற்றுள்ளார். பஞ்சாப்பில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறார். 2019-ம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 4ஆம் இடம் பெற்றார். தற்போது ஒலிம்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். போட்டியில் பங்கேற்க கடுமையாக பயிற்சி எடுத்தும் வருகிறார். ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தேர்வானதால் சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இவருக்கு உற்சாகம் அளித்துள்ளனர். இந்து தமிழுக்கு ரேவதி அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியா சார்பில் பங்கேற்பது குறித்து பெருமிதமாக உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் தற்போது ரயில்துறையில் பணியாற்றியும் வருகிறார். ரேவதி வீரமணி, ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு ரயில்வே துறையானது தங்களது ட்விட்டர் பக்கத்தின் வழியாக அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

Also Read : வில்லேஜ் குக்கிங் சேனல் ஆரம்பிக்கப்பட்ட கதை தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top