உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் Kurup மலையாளப் படம் திரையரங்களில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் சுகுமார குரூப்பின் கதை என்ன?
Kurup
உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது குறித்த எந்தவொரு தகவலும் இல்லாத சுகுமார குரூப் என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு Kurup படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார். இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் சுகுமாரன் குரூப் 1984-ம் ஆண்டு முதல் 37 ஆண்டுகள் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். கேரளாவில் வாய்மொழிக் கதைகளில் குரூப்பின் கதைக்கு முக்கிய இடம் உண்டு. படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகினும், தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழு காத்திருந்து படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது. இந்தக் கட்டுரையில் உண்மையான குரூப் என்பவர் யார்… அவர் ஏன் தேடப்படும் குற்றவாளியானார் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
சுகுமார குரூப்
கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த மாவேலிக்கரா அருகே 1984-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி காலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறார். குன்னம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வயல் பகுதியில் எரிந்த நிலையில் இருந்த கார் குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் அரபு நாடுகளில் இருந்து திரும்பிய சுகுமார குரூப் என்ற பணக்காரர் என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவுகிறது. கொலை வழக்குப் பதிந்த மாவேலிக்கரா போலீஸார் விசாரணையைத் தொடங்கிய பிறகுதான் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. வழக்கை மாவேலிக்கரா டிஎஸ்பி ஹரிதாஸ் விசாரித்தார்.
KLQ 7813 என்ற பதிவெண் கொண்ட அம்பாசிடர் கார் அருகிலிருக்கும் செரியநாடு பகுதியைச் சேர்ந்த சுகுமார குரூப் என்ற வெளிநாடு வாழ் இந்தியருக்கு சொந்தமானது. இதனால், அபுதாபியிலிருந்து சில நாட்களுக்கு முன்னரே தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த குரூப்தான் என்று முதலில் நம்பப்பட்டது. காரின் அருகே ஒரு கிளவுஸும், பெட்ரோல் கேன் ஒன்றும் மட்டுமே சம்பவ இடத்தில் கிடைத்திருக்கின்றன. உயிரிழந்தவர் சுகுமார குரூப்தான் என்பதை முடிவு செய்ய எந்தவொரு உறுதியான ஆதாரங்களுமே போலீஸுக்குக் கிடைக்கவில்லை. அதேபோல், இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர் உமடாதன், உயிரிழந்தவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.
அதேபோல், குரூப்பின் உறவினரான பாஸ்கர பிள்ளையிடம் டிஎஸ்பி ஹரிதாஸ் விசாரணை நடத்தினார். அப்போது, பாஸ்கர பிள்ளையின் உடலில் தீக்காயங்கள் இருப்பதும், சம்பவ இடத்தில் இருந்த கிளவுஸ்கள் அவர் பயன்படுத்தியதுதான் என்பதையும் கண்டுபிடித்தனர். இந்த சூழலில், குரூப்பைக் கொலை செய்ததாக பாஸ்கர பிள்ளை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். குரூப்பிடம் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத சூழலில், அவரை காரில் வைத்து எரித்துக் கொன்றதாக வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தநேரத்தில், போலீஸாருக்கு முக்கியமான ஒரு தகவல் கிடைத்தது. சுகுமார குரூப் இந்தியா வந்தால் பொன்னப்பன் என்பவரின் டாக்ஸியையே பயன்படுத்துவார், சொந்த காரைப் பெரும்பாலும் பயன்படுத்தவே மாட்டார் என்பதுதான் அந்தத் தகவல். பொன்னப்பனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, குரூப்புடன் தான் காரில் பயணித்தபோது தவறுதலாக ஒருவர் மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டதாகவும் அவரையே காரில் வைத்து எரித்ததாகவும் சொல்லியிருக்கிறார். இறந்தவர் குறித்து குரூப்பின் உறவினர், டாக்ஸி டிரைவர் என இருவரும் இறுவேறு கதைகள் சொன்னது போலீஸாரை உஷாராக்கியது. பாஸ்கர பிள்ளையிடம் போலீஸ் நடத்திய தொடர் விசாரணையில் உண்மையில் என்ன நடந்தது என்பது வெளிவந்தது.
உண்மையில் என்ன நடந்தது?
அரபு நாடுகளில் இருந்து 1984-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி கேரளா வந்த குரூப், ஒரு விநோதமான யோசனையை முன்வைத்திருக்கிறார். அபுதாபியில் 50 லட்ச ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்திருப்பதாகவும் அதற்காகத் தான் இறந்துவிட்டது போல் போலியாக ஒரு சம்பவத்தை நிகழ்த்த வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருக்கிறார். சாவக்காடு பகுதியைச் சேர்ந்த சாஹூ, உறவினர் பாஸ்கர பிள்ளை மற்றும் டாக்ஸி டிரைவர் பொன்னப்பன் ஆகியோரோடு இதற்காகத் திட்டமிட்டிருக்கிறார் குரூப். இவர்கள் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தியேட்டர் ஒன்றில் பணிபுரிந்த சாக்கோ என்பவர் லிஃப்ட் கேட்டிருக்கிறார். அவரை காரில் ஏற்றிய குரூப் உள்ளிட்டோர், மதுபானத்தில் விஷம் கொடுத்து அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். பின்னர், அவரை காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். இதையடுத்து, பாஸ்கர பிள்ளை, சாஹூ, பொன்னப்பன் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், குரூப்பைத் தேடத் தொடங்கினர். இறுதியாக, ஆலுவாவில் ஒரு லாட்ஜில் இருந்து வெளியேறிய குரூப்பை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தேடுதல் வேட்டை நடத்தியும் அவர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை உயிரிழந்து விட்டாரா என்பது குறித்த உறுதியான எந்தவொரு முடிவுக்கும் கேரள போலீஸால் வர முடியவில்லை. இந்த வழக்கு குறித்து மறைந்த அரசு மருத்துவர் உமடாதன், தனது Dead Men Tell Tales என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
படத்தின் டிரெய்லர் ரிலீஸானபோது, உயிரிழந்த சாக்கோவின் மனைவி சாந்தம்மா மற்றும் மகன் ஜிதின் ஆகியோர் படத்துக்கு எதிராக போலீஸில் புகாரளித்தனர். கொலைக் குற்றவாளியை மிகைப்படுத்தி சித்திரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், படக்குழுவினர் அவர்களுக்கு பிரத்யேகமாகப் படத்தைத் திரையிட்டுக் காட்டினர். பின்னர், தங்கள் புகாரை அவர்கள் வாபஸ் பெற்றனர். படம் ரிலீஸாகியிருக்கும் நிலையில், படத்துக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.