சில காரணங்களால், துல்கர் சல்மான் தான் இந்தியாவின் இப்போதைய “Pan India Star”. அது என்ன காரணங்கள்? நீங்கதான் Pan India Star-னு துல்கர் கிட்ட சொன்னப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா?
தற்போது இந்திய சினிமாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது. பாகுபலியாய் மிரட்டிய பிரபாஸை சாகோவிலும் ராதே ஷ்யாமிலும் மண்ணைக் கவ்வ வைத்தது அந்தப் பூதம் தான். ஒற்றை ஈயை மையமாக வைத்து தென்னிந்தியாவை பிரமிக்க வைத்த எஸ்.எஸ்.ராஜமௌலியை பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோவைப் போல, இந்தியா முழுக்க ஊர் ஊராக புரமோஷனுக்கு சுத்த வைத்ததும் அந்த பூதம் தான். அர்ஜூன் ரெட்டியை ஒவ்வொரு மாநில மொழியிலும் ரீமேக்க வைத்ததும் அந்த பூதம் தான். விஜய் தேவரகொண்டாவை லைகராக்கி இந்தியா முழுக்க அடி வாங்க வைத்ததும் அந்தப் பூதம் தான்.
அது Pan Indian Cinema எனும் பூதம்.
இந்திய சினிமாவை இந்தப் பூதம் ஆட்டுவிக்கும் சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார்களெல்லாம் கொஞ்சம் அவுட்டேட்டட் ஆகிவிட்டார்கள். அந்த இடத்தை இப்போது Pan India Star எனும் பட்டம் பிடித்திருக்கிறது. கோலிவுட், டோலிவுட், மாலுவுட் என ஒவ்வொரு உட்டிலும் கொஞ்சம் பேரை pan India star என உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அலங்கார உருட்டையெல்லாம் கொஞ்சம் ஓரம் ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையாகவே எந்த நடிகர் இந்தியா முழுமைக்கும் தேர்ந்தெடுக்கும் கதைகளிலும் நடிப்பிலும் தெளிவிலும் Pan India Star ஆக இருக்கிறார் என தேடினால் ஒருவர் கிடைப்பார். அவர் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மான் ஏன் Pan India Star என பார்ப்போம். நீங்கதான் Pan India Star-னு துல்கர் கிட்ட சொன்னப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா? கடைசியில் பார்ப்போம்.
ஏன் துல்கர் சல்மானை Pan India Star-னு சொல்றேன்னா, நடிக்க ஆரம்பித்த கடந்த பத்துவருடத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் முக்கிய சினிமா இன்டஸ்ட்ரிகள் அத்தனையிலும் கதையின் முக்கிய கதபாத்திரமாகவே துல்கர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் துல்கர் கலக்கிய படங்களை விடுவோம்.
தமிழில் ‘ஓகே கண்மனி’, ‘வாயை மூடிப் பேசவும்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஹே சினாமிகா’ என தமிழிலும் குறிப்பிடத்தக்க படங்கள் நடித்திருக்கிறார். ‘மகாநடி’, ‘சீதாரமம்’ என தெலுங்கிலும் விருதுகளையும் மக்களின் மனங்களையும் கொள்ளையடித்த படங்களிலும் நடித்திருக்கிறார். ஹிந்தியில் ‘ஸோயா ஃபேக்டர்’, ‘கர்வான்’, ‘சுப்’ என சில படங்களிலும் நடித்துள்ளார். இவை போக மலையாளம்+தமிழ், தமிழ்+தெலுங்கு, தமிழ்+ஹிந்தி என இரு மொழிகளில் வெளியான திரைப்படங்களுமே கனிசமான அளவுக்கு நடித்திருக்கிறார். இவைபோக குரூப், சீதாராமம் போன்ற படங்கள் அத்தனை மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரசிக்கப்பட்டது.
எல்லா மொழிகளிலும் நடித்திருப்பதாலேயே ஒரு நடிகரை Pan India Actor-ஆக ஏற்றுக்கொள்ளலாமா? எல்லா மொழிகளிலும் நடித்திருப்பதே ஒரு தகுதியா?
Cheenikum, Paa, Shamitabh, Chup படங்களின் இயக்குநரான பால்கி, ஒரு முறை ஒரு பேட்டியில், “துல்கர் அவர் நடிக்கும் எல்லா மொழிகளுக்கும் சொந்தக்காரர். பிறப்பால் மலையாளியாக இருந்தாலும், ஒரு தமிழனைப் போலவே தமிழைப் பேசுவார், ஒரு தெலுங்கரைப் போல தெலுங்கில் பேசுவார், வட இந்தியரைப் போலவே இந்தியில் பேசுவார். மக்கள் ஒன்றும் யாரையும் சும்மா கொண்டாடிவிடமாட்டார்கள்.” என சொல்லி இருப்பார். பால்கி சொல்லியதைப் போலவே, அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் மக்களிடம் வரவேற்பையே பெற்றிருக்கின்றன. மக்களால் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
ஆதியைப் போல் தன் காதலன் தன்னை கண்மணியாகக் கொண்டாட வேண்டும் என விரும்பாத பெண்கள் உண்டா? வாயை மூடிப்பேசவும் அரவிந்தைப் போல ஒரு துறு துறு கதாபாத்திரம் கொஞ்சம் பிசகி இருந்தாலும் எரிச்சல் ஏகாம்பரமாகி இருக்கும் அது நடக்காமல் காப்பாற்றியது துல்கரின் திறமைதான். சீதா ராமத்தில் கதை என்னவோ பழசாக இருந்தாலும் துல்கரின் காதலை 2கே கிட்ஸ்கள் ரீல்ஸ்களில் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் நடிப்புத்திறனால், அது எந்த மொழியாக இருந்தாலும், அந்த மண்ணின் தன்மைக்கும் அதன் கலாச்சாரத்துக்கும் ஏற்றபடி அந்தக் கதாபாத்திரத்தை அவர் மெருகேற்றுகிறார் என்பதால் தான் அவரை Pan Indian Star என்கிறோம்.
துல்கர் முதல் முதலில் நடிக்க ஆசைப்பட்டு அவர் அப்பா மம்முட்டியிடம் கேட்டபோது, அவர் ரொம்பவே தயங்கி இருக்கிறார். “ஏதும் சொதப்பிட்டா உணக்கான விமர்சனங்கள் அதிகமாகவே வரும், அதையெல்லாம் தாங்க தயாரா இருக்கனும்.” அப்படின்னெல்லாம் பயமுறுத்தி இருக்கார். அந்த வார்த்தைகள் தான் இன்னைக்கு வரைக்கும் அவரை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பா செய்ய வச்சிகிட்டிருக்குனு ஒரு பேட்டியில் துல்கரே சொல்லியிருப்பார்.
ஆமா, நீங்க ஏன் இந்த Pan India Syndrome-னால பாதிக்கப்படாம இருக்கீங்களே, நீங்க ஏன் பேன் இந்தியா படம் நடிக்கக்கூடாதுன்னு ஒரு கேள்விக்கு, “ஒரு புத்தகம் படிக்கும் போது இது போர் அடிக்குதுன்னு தெரியும்ல, அந்த மாதிரி ஸ்க்ரிப்ட் கேக்கும்போதே எனக்கு போர் அடிக்குற கதைகளைத் தவிர்த்துடுவேன். கதை தான் முக்கியம், அந்த மாதிரியான கதைகளைத் தான் தேர்ந்தெடுப்பேன். நான் ஒரு தயாரிப்பாளராவும் இருக்குறதால அந்தக் கணக்குகளும் எனக்குப் புரியும். சில கதைகள் மலையாளம், தமிழுக்கு மட்டும் தான் செட்டாகும், சில கதைகள் ஹிந்திக்கு மட்டுமே செட்டாகும், சில கதைகள் தெலுங்குக்கு மட்டுமே செட்டாகும். அந்த மாதிரி அமையாம ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரு கதை கிடைச்சா நடிக்கலாம்” அப்படின்னு தான் தேர்ந்தெடுக்குற சினிமாக்கள் கதயம்சம் கொண்டதா தான் இருக்கனும், நான் அப்படி Pan India Syndrome-ல் சிக்க விரும்பலைன்னு தெளிவாவே சொல்லி இருப்பார்.
“Think globally, act locally”னு ஒரு வாசகம் இருக்குல்ல அதுல தெளிவா திட்டமிட்டு நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மக்களுக்கு ஒரு சிறப்பான திரைப்படத்தை தந்தால் போதும்னு அவர் நினைக்கிறார். அதுதான் அவரை இந்தியா முழுமைக்குக்குமான Pan Indian Starஆக மாற்றி வைத்திருக்கிறது.
Also Read – மலையாள சினிமாவின் மகாராணி… மஞ்சு வாரியரின் கதை!
இன்னொரு பேட்டியில் துல்கர் சொல்லியிருப்பார், “பான் இந்தியா என்ற வார்த்தை உண்மையிலேயே என்னை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்த வார்த்தையைக் கேட்பதற்குக் கூட நான் விரும்பவில்லை. சினிமாவில் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொரு மொழியிலும் சென்று தங்களது திறமைகளை பரிமாறிக் கொள்ளட்டும். அது வரவேற்கத்தக்கது”.
அப்படித்தான் துல்கர் ஒவ்வொரு மொழிக்கும் போய் தன்னோட திறமையை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஏத்துகிட்டாலும் ஏத்துக்கலைனாலும் துல்கர் தான் இப்போ உண்மையாவே Pan India Star. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.