நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு ரயிலான சூப்பர் வாசுகி ரயிலின் சோதனை ஓட்டத்தை ரயில்வே வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறது. சூப்பர் வாசுகி பற்றிய முக்கிய அம்சங்கள் பற்றித்தான் நாம பார்க்க போகிறோம்.
சூப்பர் வாசுகி
ரயில்வே துறை நாட்டின் நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு ரயிலை சூப்பர் வாசுகி என்ற பெயரில் இயக்கத் திட்டமிட்டது. இந்த சூப்பர் வாசுகி சரக்கு ரயிலானது 5 ரயில்களின் பெட்டிகளை ஒன்றிணைத்து 295 பெட்டிகளை உடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயிலான சூப்பர் வாசுகி, 27,000 டன் நிலக்கரியை சோதனை ஓட்டத்தில் சுமந்து சென்றது. இந்திய ரயில்வே இதுவரை இயக்கிய அதிக எடையுள்ள சரக்கு ரயில் இதுதான். ரயிலின் ஒவ்வொரு பயணத்திலும் 100 டன் கொண்ட 90 கார்கள் அல்லது சுமார் 9,000 டன் நிலக்கரியைக் கொண்டு செல்ல முடியும் என்கிறது ரயில்வேத் துறை. கடந்த 15-ம் தேதி நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 224 கி.மீ தொலைவை 7 மணி நேரத்தில் கடந்து அசத்தியிருக்கிறது.
ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயால் சூப்பர் வாசுகி இயக்கப்படுகிறது. மின் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நிலக்கரியை கொண்டு செல்ல சூப்பர் வாசுகி அல்லது நீண்ட சரக்கு ரயில்களை அடிக்கடி பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் பற்றாக்குறை ஏற்பட்டது. இது பல பகுதிகளில் கடுமையான மின் நெருக்கடிக்குத் தள்ளியது. நிலக்கரியை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதில் ரயில்வேயின் பங்கு முக்கியமானது.
நீண்ட தூரத்துக்கு அதிக சுமைகளை ஏற்றிச் செல்ல நீண்ட சரக்கு ரயில்களை சோதனை செய்து வரும் ரயில்வே, போக்குவரத்து நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும் சூப்பர் வாசுகியை வடிவமைத்தது. சோதனை ஓட்டத்திலும் கெத்து காட்டியிருக்கும் சூப்பர் வாசுகி, கிட்டத்தட்ட 3.5 கி.மீ நீளம் கொண்டது.