ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பழுதான நிலையில், வாடிக்கையாளர் சேவை மையத்தாலும் அலைக்கழிக்கப்பட்டதால் ஆம்பூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், அந்த ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார். என்ன நடந்தது?
Ola S1 Pro
எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. அந்தவகையில், வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்குவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில், ஆம்பூர் அருகே உள்ள சவுராஷ்டிரபுரத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜூம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆர்வம் காட்டியிருக்கிறார். நாற்பது வயதான பிரித்திவிராஜ் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பிசியோதெரபிக் கிளீனிக் நடத்தி வருகிறார்.
இவர் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஓலா எஸ் ஒன் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆன்லைனில் புக் செய்து மூன்று மாதங்களுக்கு முன்பு வாங்கியிருக்கிறார். ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ தூரம் பயணிக்கலாம் என்று அந்த நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. வண்டியை வாங்கிய பின்பு, வாகனத்தைப் பதிவு செய்து கொடுப்பதில் சேவை மையம் அலைக்கழித்ததாகத் தெரிகிறது. அதேநேரம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாகி சாலையில் நின்றதாகவும் கூறப்படுகிறது. 120 கி.மீ ரேஞ்ச் சொல்லப்பட்ட நிலையில், 40 கி.மீ கூட பயணிக்க முடியாத நிலை இருந்ததாகவும் பிரித்திவிராஜ் தரப்பில் சொல்கிறார்கள்.
வாடிக்கையாளர் சேவை மைய அலைக்கழிப்பு
இதுகுறித்து பலமுறை வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் புகார் தெரிவித்தும், அவர்கள் முறையாகப் பதில் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு வழியாக வண்டியைப் பதிவு செய்வதற்காக வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். இவரும், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோடு குடியாத்தம் சென்றபோது, உரிமையாளர் ஆம்பூரில் வசிப்பதால், அங்கிருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி அதிகாரிகள் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். சொந்த ஊர் திரும்பும் வழியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பழுதாகி நடுவழியில் நின்றிருக்கிறது. அப்போது, இதுபற்றி ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு பிரித்திவிராஜ் புகார் சொன்னதாகத் தெரிகிறது. அவர்களும், மெக்கானிக் சம்பவ இடத்துக்கு வருவார் என்று உறுதியளித்ததாகச் சொல்கிறார்கள்.
காலை 11 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை சம்பவ இடத்தில் பிரித்திவிராஜ் காத்திருந்தும், நிறுவனம் தரப்பில் பழுதுபார்க்க யாரும் வரவில்லை. இதனால், மன உளைச்சலடைந்த பிரித்திவிராஜ், தனது நண்பர்களுக்கு போன் செய்து வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். அவர்கள் வாங்கி வந்த பெட்ரோலை, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேல் ஊற்றி தீ பற்ற வைக்க முயற்சித்திருக்கிறார். நண்பர்கள் தடுத்தும் பிரித்திவிராஜ் தீ வைத்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது. இதை வீடியோ எடுத்த அவர்கள், ஃபேஸ்புக்கில் பதிவிடவே அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read – தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் 11 பேர் பலியான சோகம் – அதிகாலை 3 மணிக்கு என்ன நடந்தது?