பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் – ’பழுவூர் இளையராணி’ நந்தினி

பொன்னியின் செல்வன் கேரக்டர்கள் பத்தின பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் சீரிஸ்ல நாம அடுத்ததா பார்க்கப்போறது ரொம்பவே முக்கியமான கேரக்டர். நாவல்ல வர்ற கேரக்டர்கள்லயே ரொம்ப சிக்கலான நந்தினி கேரக்டரைப் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

யார் இந்த நந்தினி… சோழர் குலத்தையே பூண்டோட அழிப்பேன்னு அவர் ஏன் சபதம் போட்டார்… சோழ சாம்ராஜ்யத்துல பெரும் அதிகாரத்தோட வலம்வந்த பெரிய பழுவேட்டரையரை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க… ஆதித்த கரிகாலன் மரணத்துக்குப் பிறகு நந்தினி எங்க போனார்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Ponniyin selvan
Ponniyin selvan

டிஸ்கிளைமர் – நண்பர்களே இது கல்கியோட பொன்னியின் செல்வன் நாவலை விமர்சிக்குற அல்லது எடைபோடுற முயற்சி கிடையாது. அந்த நாவலைப் படிக்கிறப்போ நான் உணர்ந்த அல்லது என்னால் புரிந்துகொண்ட அளவில் அதிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களைப் பத்தியான ஒரு சின்ன உரையாடல்தான். அதேமாதிரி, மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் இந்த நாவலை அடிப்படையாக வைச்சுதான் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால, இந்த ஸ்டோரில அந்தப் படத்தோட சில ஸ்பாய்லர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்றவங்க Skip பண்ணிடுங்க.

யார் இந்த நந்தினி?

சோழ அமைச்சர் அநிருத்த பிரம்மராயரோட முதன்மை ஒற்றனாக இருக்கும் ஆழ்வார்க்கடியானோட உடன்பிறவா சகோதரிதான் நந்தினி. பாண்டிய நாட்டுல பிறந்த ஆழ்வார்க்கடியனோட தந்தை நந்தவனத்துக்குப் போனப்ப, அங்கே ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுக்குறார். நந்தவனத்துல கண்டெடுக்குறதுனால நந்தினினு பேர் வைச்சு, அவங்க வீட்லயே வளர்க்கவும் ஆரம்பிக்குறார். சர்வ லட்சணங்கள் பொருந்திய அந்தக் குழந்தையைக் குடும்பமே பாராட்டி, சீராட்டி வளர்க்கிறது. தந்தையின் இறப்புக்குப் பிறகு பரம வைஷ்ணவரான ஆழ்வார்க்கடியன், நந்தினியைத் தனது சகோதரியாகவே கருதி வளர்க்கிறார். துளசி மாலை அணிந்து அவருடன் நந்தினி வைணவ தலங்களுக்குப் பயணித்து, பாசுரங்கள் பாடித் திரிகிறார்.

நந்தினி
நந்தினி

நந்தினிக்கு 12 வயதாக இருந்தபோது, அவள் தஞ்சாவூருக்கு வருகிறாள். அப்போது, சிறுபிராயத்தில் இருக்கும் சுந்தர சோழரின் மகன்களாகிய ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மர் மற்றும் மகளான குந்தவை ஆகியோருடன் சிறிதுகாலத்தைக் கழிக்கிறார். இதில், பட்டத்து இளவரசாக பின்னாட்களின் முடிசூடப்பட இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு நந்தினி மீது காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் பிரிய நேரிடுகிறது. நந்தினி பாண்டிய நாட்டுக்குத் திரும்பும் நிலையில், ஆதித்த கரிகாலன் போர்களத்துக்குச் செல்கிறார். ஆழ்வார்க்கடியான் திருப்பதி சென்றிருக்கும் நிலையில், சோழர்கள் – பாண்டியர்கள் இடையிலான போர் உச்சமடைந்து, வீரபாண்டியன் சோழர்களிடம் இருந்து தப்புகிறார். அவர் தஞ்சமடைந்தது நந்தினியின் வீட்டில்… இதைக் கண்டுபிடித்து ஆதித்த கரிகாலன் அவள் வீட்டுக்குள் செல்கிறார். ஆனால், வீரபாண்டியனைக் கொல்ல வேண்டாம் என கரிகாலனிடம் கெஞ்சுகிறாள். அதையும் மீறி பாண்டியனின் தலையை வெட்டும் ஆதித்த கரிகாலன், பின்னாட்களில் அதற்காக வருத்தப்படுகிறான்.

வீரபாண்டியன் மரணத்துக்குப் பிறகு அவரின் உடலுக்கு எரியூட்டும் ரவிதாஸன் முதலான பாண்டிய ஆபத்துதவிகள், நந்தினியையும் அந்த சிதையில் போட விரும்புகிறார்கள். ஆனால், பாண்டியனின் தலைகொண்ட ஆதித்த கரிகாலனையும் சோழ குலத்தையும் வேரறுக்க அவர்களைப் போன்றே தாமும் சபதம் எடுத்திருப்பதாகக் கூறி அதிலிருந்து தப்பும் நந்தினி, பழுவேட்டரையர்களின் பரிவாரங்களிடம் சிக்குகிறார். முதிய பிராயத்தில் இருக்கும் பெரிய பழுவேட்டரையர், நந்தினியை மணக்கிறார். இப்படித்தான், நந்தினி பழுவூர் இளையராணியாவார். அதேநேரம், சோழ குலத்துக்கு எதிரான சதியில் ஈடுபடுவார்.

பார்ப்பவர்கள் மெய்மறந்து போகும் அளவுக்கு அழகுடையவர் நந்தினி தேவி. இதைப் பொன்னியின் செல்வன் நாவலின் பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும். தஞ்சாவூர் சாலையில் வந்தியத்தேவன் அவரை முதன்முதலில் பார்த்த சீனில், `பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண்! பார்த்தவர்களைப் பைத்தியமாக அடிக்கக் கூடிய இத்தகைய பெண்ணழகு இவ்வுலகில் இருக்கக்கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணியதே இல்லை!’ என்று கல்கி வர்ணித்திருப்பார். அதேபோல், நந்தினி பேசத்தொடங்கியதும், ‘காசிப்பட்டின் மென்மையும் கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா?… அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே!’ என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டதாக எழுதியிருப்பார். அறிவிலும் நந்தினி சிறந்தே விளங்குவார். ஆனால், அவரை ஒரு பாம்போடு ஒப்பிடுவதில் இருந்து, நஞ்சான எண்ணங்கொண்டவர் என்பதை கல்கி விளங்கச் செய்திருப்பார்.

நந்தினி
நந்தினி

பெரிய பழுவேட்டரையர் தொடங்கி கந்தன்மாறன், பார்த்திபேந்திர பல்லவன் வரையில் நந்தினி காலால் இட்ட காரியத்தைத் தலையால் முடிக்கக் காத்திருப்பவர்கள் பட்டியல் கொஞ்சம் நீளம். சின்ன பழுவேட்டரையரிடம் பேசிவிட்டு அரண்மனைக்குத் திரும்பும் பெரிய பழுவேட்டரையர் மனதில் நந்தினியின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் வரும். அதை எப்படியும் கேட்டுத் தெரிந்துகொள்வது என்ற எண்ணத்தோடு அரண்மனைத் தோட்டத்துக்கு வரும் அவர் நந்தினியைப் பார்த்தவுடன் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். தனது கோபத்தையே மறைத்து நந்தினியை சமாதானப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார். அதேபோல், சோழ அரியணை மீது எந்தவொரு பற்றும் இல்லாமல் சிவபக்தியே கதி என்று கிடக்கும் மதுராந்தகரின் மனதும் இரண்டு முறை நந்தினியைச் சந்தித்தபிறகு மாறும். தன் எதிரில் இருக்கும் ஆண்களை மயக்கி, தான் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்ளும் வலிமையும் வல்லமையும் நந்தினிக்கு உண்டு. இதிலிருந்து தப்பிய ஒரே ஆள் வந்தியத்தேவனாகத்தான் இருக்கும். கோபத்தைக் கக்கும், பயங்கரமான கேரக்டராக வடிவமைக்கப்பட்டிருக்கும் மந்திரவாதி ரவிதாஸன் கேரக்டரும் நந்தினி பேச்சைக்கேட்டதும் அடங்கிவிடுவான். நந்தினி, தன்னுடைய பரம வைரியாக நினைப்பது சோழ இளவரசி குந்தவையைத்தான். அழகிலும் அறிவிலும் நந்தினிக்குப் போட்டிபோடும் குந்தவை – நந்தினி இடையிலான பகைமை ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கும். இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளும் சீன் நாவலோட ஹைலைட்டான சீன்களுள் ஒன்று. ஒரே நேரத்தில் சுந்தர சோழர், அருள்மொழி வர்மர், ஆதித்த கரிகாலன் என மூன்று பேரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டுவார். இதில், சுந்தர சோழரும் அருள்மொழிவர்மரும் தப்புவார்கள். சுந்தர சோழரைக் காப்பாற்றும் ஊமை ஸ்திரீ மந்தாகினியும் நந்தினியும் உருவத்தில் ஒரேபோல் இருப்பவர்கள். இதைப் பயன்படுத்தியே நந்தினி சில நேரங்களில் சுந்தர சோழரை அச்சுறுத்த முயற்சி செய்திருப்பார்.

நந்தினி - குந்தவை
நந்தினி – குந்தவை

ஆதித்த கரிகாலனைப் பழிவாங்க மீன் சின்னம் பொறித்த வாளைத் தன்னுடனே வைத்திருப்பவர். கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு ஆதித்த கரிகாலனை நினைத்தபடியே வரவழைப்பார். அவருக்கு துர்மரணம் நேர்கையில் சம்பவ இடத்தில் இருப்பார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று பாண்டிய ஆபத்துதவிகளோடு சேர்வார். ஆதித்த கரிகாலனைக் காப்பாற்ற முயன்று, அந்த முயற்சியில் தோற்று மயக்கமடையும் பெரிய பழுவேட்டரையரைக் காப்பாற்றுவார் நந்தினி. ஆனால், அவரோ நந்தினியோடு இருப்பதை வெறுத்து நாடு திரும்புவார். தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நந்தினி பின்னாட்களில் தன்னைச் சந்திக்கும் அருள்மொழிவர்மரிடம் தனது பிறப்பின் ரகசியத்தைச் சொல்வார். பொன்னியின் செல்வன் நாவலில் மிகவும் சிக்கலான கேரக்டர் நந்தினியுடையது. அவர் தோன்றும் ஒவ்வொரு இடத்திலும் நமக்குப் புதுப்புது தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கும். ஆச்சர்யமும் அபாயமும் நிறைந்த நந்தினி, தமிழ் நாவல் வரலாற்றில் படைக்கப்பட்ட முக்கியமான கேரக்டர்களுள் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

பொன்னியின் செல்வன் நந்தினி கேரக்டரைப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க… மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க!    

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top