பி.டி.எஸ்

`உலகையே கலக்கும் பி.டி.எஸ் இசைக்குழு!’ – யார் சாமி இவங்க?

வாழ்க்கையில் டி மோட்டிவேட் ஆகும்போதெல்லாம் எதாவது ஒரு விஷயம் நம்மை மோட்டிவேட் பண்ணும். அதில் இசைக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இசை மட்டுமல்ல அந்த இசையை உருவாக்குறவங்களும் பல நேரங்களில் நம்மை மோட்டிவேட் செய்வது உண்டு. அப்படி இசையாலும் தனிப்பட்ட வாழ்க்கை முறையாலும் நம்மை மோட்டிவேட் செய்யக்கூடிய ஒரு இசைக்குழு தான் பி.டி.எஸ். ஒவ்வொரு ஆல்பமும் வெளியாகும்போது உலக அளவில் பேசுபொருளாக மாறும். அமெரிக்க அதிபர் முதல் சாதாரண மக்கள் வரை பி.டி.எஸ் குழுவின் ரசிகர்களாக உள்ளனர். சரி… யாரு சாமி இவங்க? அப்டினு நீங்க கேக்கலாம். இவங்கள பத்திதான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம். வாங்க…

பி.டி.எஸ் என்றால் என்ன?

தென்கொரியாவைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட இசைக்குழுதான் பி.டி.எஸ். பாங்டன் சோனியாண்டன் (Bangtan Sonyeondan) என்றால் புல்லட்ப்ரூஃப் பாய் ஸ்கௌட்ஸ் என்று பொருள். இதிலிருந்து பி.டி.எஸ் என்ற பெயரை எடுத்து 2013-ம் ஆண்டு பி.டி.எஸ் இசைக்குழு உருவானது. 2017-ம் ஆண்டு தங்களுடைய உலக ரசிகர்களைக் கருத்தில் கொண்டு `Beyond the Scene’ என்று தங்களது பி.டி.எஸ் பெயரின் விரிவாக்கத்தை மாற்றியது. பிக்ஹிட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் இசையுலகில் அடியெடுத்து வைத்த பி.டி.எஸ் பாய்ஸ் இன்று உலகையே தங்களது இசையால் ஆட்டிப் படைத்து வருகிறார்கள். சமூக அழுத்தங்களைத் தாங்கும் இளைய தலைமுறையின் குரலாக இந்தக் குழு இருக்க வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைவர் பேங் சி ஹியூகின் விரும்பினார். அதன்படியே இன்றும் செயல்பட்டு வருகிறது.

பி.டி.எஸ்
பி.டி.எஸ்

பி.டி.எஸ் குழு உறுப்பினர்கள்..

ஆர்.எம், ஜின், சுகா, ஜே-ஹோப், ஜி மின், வி மற்றும் ஜங்க் கூக் ஆகிய ஏழு பேரும்தான் பி.டி.எஸ் குழுவின் உறுப்பினர்கள். ஆர்.எம் தான் இந்த இசைக்குழுவின் தலைவராக இருந்து வருகிறார். 1994-ம் ஆண்டு பிறந்த இவரின் முழு பெயர் கிம் நாம் ஜூன். பிபிசி, சி.என்.என் மற்றும் டிவி ஷோக்களின் வழியாக ஆங்கிலம் கற்ற இவர் ஆங்கிலம் மற்றும் கொரிய மொழியை சரளமாகப் பேசக்கூடியவர். முதலில் மேடைக்காக இவரது பெயர் `ராப் மான்ஸ்டர்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர், 2017-ம் ஆண்டு முதல் ஆர்.எம் என்று ரசிகர்களால் சுருக்கி அழைக்கப்பட்டார்.

பி.டி.எஸ்
பி.டி.எஸ்

கிம் சியோக் ஜின் என்ற பெயருடைய ஜின் குழுவின் மிகவும் அதிக வயதுடைய நபர். 1992-ல் பிறந்த இவர் சிறந்த பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். ஆரம்பத்தில் நடிகராக வளர்ந்து வந்த இவர் பின்னாளில் பி.டி.எஸ் குழுவுடன் இணைந்து செயல்பட தொடங்கினார். ஆர்.எம்-ஐப் போலவே பி.சி.எஸ் குழுவின் ராப்பர்களில் சுகாவும் ஒருவர். இவர் 1993-ம் ஆண்டு பிறந்தவர். குழுவின் அதிகளவில் சிந்தித்து செயல்படும் நபர்களில் ஒருவராக இவரைக் குறிப்பிடுகின்றனர். ராப் இசையில் இவர் சிறப்பாக இருப்பதைப் போலவே சிறந்த பாடலாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சோலோவாகவும் பல பாடல்களை இவர் இயக்கியுள்ளார்.

ஜங் ஹோ சியோக் தான் ஜே-ஹோப் என்று அழைக்கப்படுகிறார். இவர் 1994-ம் ஆண்டு பிறந்தார். பி.டி.எஸ் இசைக்குழுவின் மூன்றாவது ராப்பராக அறியப்படுகிறார். குழுவில் நடனத் திறமைக்காக அதிகளவில் கவனம் பெற்றுள்ளார். மற்ற உறுப்பினர்களுக்கும் நடனங்களை கோரியோகிராப் செய்து உதவுகிறார். பாடகராகவும் நடனக் கலைஞராகவும் அறியப்படும் ஜி மின் 1995-ம் ஆண்டு பிறந்தார். பள்ளி காலங்களில் இருந்தே நடனம் ஆடி வருகிறார். கிம் டே ஹ்யூங் என்பதுதான் வி-யின் உண்மையான பெயர். இவருக்கும் அதிகளவில் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இவருடைய குரல் வளத்துக்காகவே அவர் தனியாக அறியப்படுகிறார்.

பி.டி.எஸ்
பி.டி.எஸ்

குழுவில் மிகவும் இளமையானவர் ஜியோன் ஜங் கூக். பி.டி.எஸ் குழுவில் அவர் சேர்ந்த போது அவருடைய வயது வெறும் 15 தான். பி.டி.எஸ் குழுவில் இணைந்து நான்கு ஆண்டுகள் கழித்துதான் தன்னுடைய உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தார். பல சோலா பாடல்களையும் பாடியுள்ளார். ஆரம்ப நாள்களில் மிகவும் கஷ்டப்பட்ட இவர்கள் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்த பின்னரே இன்றைக்கு இருக்கும் உயரத்தை அடைந்துள்ளனர். ஆரம்ப நாள்களில் டிவி ஷோக்களில் இவர்களை களங்கப்படுத்தும் சம்பவங்களும் மேடைகளில் அவர்களை கடுமையாக விமர்சிக்கும் சம்பவங்களும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் கடந்த பின்னரே இன்றைக்கு இருக்கும் நிலையை பி.டி.எஸ் குழுவினர் அடைந்துள்ளனர்.

பி.டி.எஸ்-ன் பாடல்கள்..

`2 கூல் 4 ஸ்கூல்’ என்பதுதான் பி.டி.எஸ் குழுவின் முதல் பாடல். யூ டியூப், சவுண்ட் கிளவுட் ஆகிய தளங்களில் இதனை பதிவிட்டனர். இந்தப் பாடல் மில்லியன் கணக்கான வியூஸ்களை பெற்றது மட்டுமல்லாமல் அதிகளவு லைக்ஸையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான டைனமைட், ப்ளட் ஸ்வட் அண்ட் டியர்ஸ், ஃபேக் லவ், பாய் வித் லவ், டி.என்.ஏ, ஐடால் போன்ற பல பாடல்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது. கொரியன் மட்டும் இல்லாமல் ஜப்பானிய மொழி, ஆங்கில மொழி போன்றவற்றிலும் பாடல்களை இயக்கி வெளியிட்டுள்ளனர்.

சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பற்றிதான் இவர்களின் பெரும்பான்மையான பாடல்கள் இருக்கும். 2018-ல் வெளியான இவர்களுடைய லவ் யுவர்செல்ஃப்: ஆன்சர்’ மற்றும் லவ் யுவர் செல்ஃப்: டியர்’ இரண்டு பாடல்களும் பில்போர்டில் டாப் 100-ல் முதல் இடம் பிடித்தது. 2019-ம் ஆண்டு வெளியான ஆல்பமான மேப் ஆஃப் தி சோல் : பெர்சோனா’ மற்றும் 2020-ல் வெளியான மேப் ஆஃப் தி சோல் : 7’ ஆகிய பாடல்களும் பில்போர்டு சார்ட்டில் முதலிடம் பிடித்தது. வெளியிட்ட பாடல்கள் அனைத்துமே உலக அளவில் மிகப்பெரிய ஹிட். அவ்வகையில் தற்போது வெளியாகியிருக்கும் `பட்டர்’ என்ற பாடலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. மே 21 அன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்தப் பாடல் வெளியான 13 நிமிடங்களில் 10 மில்லியன் வியூஸ்களைப் பெற்றது. இதுவரை இந்தப் பாடல் 200 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களைப் பெற்று பல சாதனைகளை முறியடித்து வருகிறது. யூ டியூபில் மட்டுமல்லாது மற்ற ஆடியோ பாட்காஸ்ட் தளங்களிலும் இவர்களது பாடல்கள் செம ஹிட். இவர்களால் தென்கொரிய அரசுக்கும் வருவாய் வருவதால் அரசும் இவர்களை அதிகளவில் ஊக்குவித்து வருகிறது.

பி.டி.எஸ் ஆர்மி..

பி.டி.எஸ் ரசிகர்கள் தங்களை பி.டி.எஸ் ஆர்மி என்றே அழைக்கின்றனர். ட்விட்டரில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். யூ டியூபில் 50 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் அவர்களின் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவர்களை பின்தொடர்கிறார்கள். பி.டி.எஸ் குழுவினர் ஆன்லைனில் தங்களது ரசிகர்களுடன் அதிகமாக உரையாடி வருகின்றனர். ட்விட்டரின் வழியாக அதிகமாக என்கேஜ்மெண்ட் பெற்றதற்காக 2018-ம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனையும் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட யூ டியூப் வீடியோ போன்ற சாதனைகளையும் இவர்கள் படைத்துள்ளனர்.

பி.டி.எஸ்
பி.டி.எஸ்

2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அதிகம் ட்வீட் செய்த பிரபலங்களின் பட்டியலிலும் அவர்கள் இடம்பிடித்துள்ளதாக பில்போர்டு தெரிவித்துள்ளது. `டாப் சோஷியல் ஆர்டிஸ்ட் ஆஃப் 2017’ என்ற விருதை ஜஸ்டின் பீபர் மற்றும் செலினா கோம்ஸ் ஆகியோரை முறியடித்து பி.டி.எஸ் குழுவினர் வென்றனர். இவ்விருதை வென்ற முதல் கொரிய கலைஞர்களாகவும் அறியப்படுகின்றனர். 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியது இந்தக் குழு. பின்னர் யூனிசெஃப் அமைப்புடன் இணைந்து இளைஞர்களின் மீதான வன்முறை மற்றும் கல்வியை தடுப்பதற்கு எதிரான `லவ் மைசெல்ஃப்’ பிரசாரத்தில் இணைந்து செயல்பட்டது. அமெரிக்கன் மியூசிக் அவார்ட், பில்போர்ட் அவார்ட், சியோல் மியூசிக் அவார்ட் என்று நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கி குவித்துள்ளனர். பல நாடுகளுக்கு சென்று தங்களுடைய நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளனர். மாஸ்ல!

Also Read : கேட்ஜெட் பிரியரா நீங்க.. அப்போ இந்த கியூட் கேட்ஜெட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top