‘அட, இவங்கள்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல பாடியிருக்காங்களா’ என நம்மை ஆச்சர்யப்படவைக்கும் சில பிரபலங்களின் பட்டியல் இங்கே.
பாரதிராஜா
தமிழ் சினிமாவின் பெருமிதங்களில் ஒருவரான பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார். இது நடந்தது ‘கருத்தம்மா’ படத்தில். அந்த படத்தில் இடம்பெற்ற ‘காடு பொட்ட காடு’ எனும் பாடலை பாடகர் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடி அசத்தியிருப்பார் பாரதிராஜா.
பிரபு
பிரபுவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு நடித்த ‘டூயட்’ படத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அந்தப் படத்தில் வரும் ‘கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா’ என்னும்… ஒரு பாடல் என்று முழுமையாக சொல்லமுடியாத கவிதை வாசிப்பில் பிரபுவை ஒரு தேர்ந்தெடுத்த பாடகர்போல சரியான ரிதத்தில் அந்த கவிதையை வாசிக்கவைத்திருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மனோரமா
பழம்பெரும் நடிகையான மனோரமா இயல்பிலேயே பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவர் நம்ம ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் தெரியுமா? வினித் நடித்த ‘மே மாதம்’ படத்தில் வரும், ‘மெட்ராஸ சுத்திப் பார்க்கப்போறேன்’ பாடலில் பெரும்பாலான வரிகளை மனோரமாதான் பாடி அசத்தியிருப்பார்.
மனோஜ் கே பாரதி
தன் தந்தை பாரதிராஜா போலவே, மனோஜ்.கே.பாரதிராஜாவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று பாடும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதுவும் அவரது அறிமுகப் படமான ‘தாஜ்மகால்’ படத்திலேயே. அந்தப் படத்தில் வரும் ‘ஈச்சி.. எலுமிச்சி’ பாடல் மனோஜின் வெர்சனிலும் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும்.
அர்விந்த்சாமி
இவரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார். அதுவும் தான் நடித்திடாத படத்தில், மணி ரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘இருவர்’ படத்தில் பிரகாஷ் ராஜ் கேரக்டர் எழுதியிருக்கும் கவிதைகளின் இசை வடிவத்திற்கு குரல் கொடுத்தவர் அர்விந்த்சாமிதான்.
வினித் ஸ்ரீனிவாசன்
‘ஹிருதயம்’ போன்ற சூப்பர்ஹிட் மலையாளப் படங்களை தந்த மலையாள இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன், அடிப்படையில் ஒரு பாடகரும்கூட. தமிழில் ஏற்கெனவே, ‘அங்காடித் தெரு’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற படங்களில் பாடல்களை பாடியிருக்கும் இவர், ‘குரு; படத்தில் வரும் ‘ஆருயிரே மன்னிப்பாயா..’ பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானுடனே சேர்ந்து சில வரிகள் பாடியுள்ளார்.
வெங்கட் பிரபு
இசைக்குடும்பத்தில் பிறந்த இயக்குநர் வெங்கட்பிரபுவும் அடிப்படையில் ஒரு பாடகர் என்பது நமக்குத் தெரிந்ததுதான். இவரும் ரஹ்மான் இசையில் உருவான, ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் வரும் ‘ஒரு நண்பன் இருந்தால்’ பாடலை இன்னும் இரண்டு பாடகர்களுடன் சேர்ந்து பாடியுள்ளார்.
அனிருத்
தொட்டதையெல்லாம் ஹிட்டாக்கிவரும் இசையமைப்பாளர் அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் உருவான ‘ஐ’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மெரசலாயிட்டேன்’ பாடல் அனிருத்தின் குரலில் உருவானதுதான்.
லதா ரஜினிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினியின் அனிமேஷன் உருவத்தைக்கொண்டு உருவான ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ‘மணப்பெண்ணின் சத்தியம்’ எனும் பாடியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா
ஏ.ஆர்.ரஹ்மானின் தொழில்முறை ஒப்பீட்டாளர் இளையராஜாவின் வாரிசான யுவன் ஷங்கர் ராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடியிருக்கிறார். தனுஷின் ‘மரியான்’ படத்தில் வரும் ‘கடல் ராசா’ பாடல் யுவன் பாடியதுதான்.
Also Read –
bncxgj