Ever Given கப்பல் மீட்கப்பட்டது எப்படி…? மீட்புப் பணி சுவாரஸ்யங்கள்!

எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற எவர் கிவன் எனும் பிரமாண்ட சரக்குக் கப்பல் 6 நாட்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. கப்பல் தரை தட்டி நிற்க என்ன காரணம்… எப்படி மீட்கப்பட்டது.

எவர் கிவன் கப்பல்

400 மீ நீளமுள்ள எவர் கிவன் கப்பல் உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களுள் ஒன்று. தைவான் நாட்டைச் சேர்ந்த எவர் கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் ஈபில் கோபுரத்தை (324 மீ) விட நீளமானது. 2 லட்சம் டன்னுக்கு மேலான மொத்த எடைகொண்ட எவர் கிவன் கப்பலில் ஒரே நேரத்தில் 20,000-த்துக்கும் மேலான கண்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும்.

எவர் கிவன் கப்பல்

எப்படி சிக்கியது?

சீனாவின் யாண்டியன் மாவட்டத்தில் இருந்து நெதர்லாந்து துறைமுக நகரான ரோட்டர்டாமுக்குச் சென்றுகொண்டிருந்த எவர் கிவன், சூயஸ் கால்வாயில் கடந்த மார்ச் 23ல் தரைதட்டி நின்றது. தரைதட்டி நின்றபோது எவர் கிவன் கப்பலில் 18,300-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் இருந்தன. ஆட்டோமொபைல் சாதனங்கள், உயிருள்ள விலங்குகள், தோல் பொருட்கள், கச்சா எண்ணெய் என அந்தக் கப்பலில் பலவகையான பொருட்கள் இருந்தன.

உலகின் கடல் வணிகத்தில் 12 சதவிகிதம் அளவுக்கு சூயஸ் கால்வாயை நம்பியே நடக்கும் நிலையில், முக்கியமான அந்த வழித்தடத்தை பிரமாண்ட எவர் கிவன் கப்பல் அடைத்து நின்றது. வேகமாக வீசிய காற்றாலேயே வழித்தடம் மாறி கப்பல் தரைதட்டியது என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், சூயஸ் கால்வாய் போக்குவரத்தை நிர்வகிக்கும் எஸ்.சி.ஏ நிறுவனத்தின் சேர்மன் ஒசாமா ராபி, இயந்திரக் கோளாறு அல்லது மனிதத் தவறால் இது நிகழ்ந்திருக்கலாம்’ என்றார். பனாமாவில் பதிவு செய்யப்பட்ட எவர் கிவன் கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 23 பணியாளர்களுமே இந்தியர்கள். கப்பல் கரைதட்டி நின்ற பின்னர், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தைவான் நிறுவனம் அறிவித்தது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப்பல்

சிக்கலான மீட்புப் பணி…

2 லட்சம் டன்னுக்கும் மேலான எடை கொண்ட கப்பலை 30 டிகிரி அளவுக்குத் திருப்புவதை இலக்காகக் கொண்டு மீட்புப் பணி தொடங்கப்பட்டது. சூயஸ் கால்வாயின் தெற்குப் பகுதி கரையில் சேறு, சகதியில் சிக்கியிருந்தது எவர் கிவன். இதனால், கால்வாயின் இருபுறமும் 400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் வெயிட்டிங்கில் இருந்தன.

2 லட்சம் டன்னுக்கும் மேலான எடை கொண்ட கப்பலை 30 டிகிரி அளவுக்குத் திருப்புவதை இலக்காகக் கொண்டு மீட்புப் பணி தொடங்கப்பட்டது. சூயஸ் கால்வாயின் தெற்குப் பகுதி கரையில் சேறு, சகதியில் சிக்கியிருந்தது எவர் கிவன். இதனால், கால்வாயின் இருபுறமும் 400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் வெயிட்டிங்கில் இருந்தன.

கப்பல் கரைதட்டி நின்றிருந்த பகுதியில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தி கப்பலை மீண்டும் மிதக்கவைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேநேரம், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் டக் போட்டுகள் எனப்படும் மீட்புப் படகுகள் ஒருபுறம் எவர் கிவன் கப்பலை முன்புறமிருந்து இழுக்கவும், பின்னால் இருந்து தள்ளவும் முயற்சித்தன. ஆனால், இரண்டு நாட்கள் இந்த முயற்சியில் எந்தப் பலனும் கிட்டவில்லை.

சூயஸ் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட கப்பல்

மீட்புப் பணியின்போது கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டால், டன் கணக்கான கச்சா எண்ணெய் கால்வாயில் கலக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், சூயஸ் கால்வாய் மாதக்கணக்கில் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம். அதேபோல், கப்பல் இரண்டாக உடைந்து மூழ்க நேரிட்டால், நிலைமை இன்னும் மோசமாகலாம் என்பதால், மிகக் கவனமாகவே மீட்புப் பணியைத் தொடர்ந்தனர்.

இதுபோன்ற சூழலில் சிக்கியிருக்கும் கப்பலை மீட்க இரண்டே இரண்டு விஷயங்கள் மிகவும் அடிப்படையானவை என்கிறார்கள் வல்லுநர்கள். முதலில் கப்பலின் செங்குத்து மிதப்பு சக்தியை (vertical buoyancy force) அதிகரிக்க வேண்டும். அதாவது முழு கப்பலும் தண்ணீருக்கு மேல் மிதப்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது, கப்பலின் மொத்த எடையும் எதில் சிக்கியிருக்கிறதோ, அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு மீட்புப் படகுகுகள் மூலம் கிடைமட்டமாக விசையை அதிகரிக்க வேண்டும். இதனால், கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கும்.

கப்பலின் முன் அடிப்பகுதியில் இருக்கும் சேறு, மண் ஆகியவற்றை அகற்றும் பணி தொடரும் என கப்பலின் உரிமையாளரான எவர் கிரீன் நிறுவனம் மார்ச் 26-ம் தேதி அறிவித்தது. ஒரு மணி நேரத்துக்கு 2,000 கன அடி மண்ணை வெளியேற்றும் மற்றொரு இயந்திரமும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டது. எவர் கிவன் கப்பல் சேற்றில் சிக்கி 5 நாட்கள் ஆன நிலையில், மார்ச் 28ம் தேதி வரை கப்பலின் அடியில் இருந்து 18,000 டன் சேறு, மண் அகற்றப்பட்டிருந்தது. இதனால், கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கத்தை விட வேகமாக வீசிய காற்று அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கியது. கப்பலின் புரப்பெல்லர் மற்றும் திசை திருப்ப உதவும் ரட்டர் ஆகியவை முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்ன எவர்கிரீன் நிறுவனம் விரைவில் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கிவிடும் என்றது. கால்வாயில் குறுக்குவடிவில் சிக்கியிருந்த கப்பலை 30 டிகிரி அளவுக்கு நேராக்கி கால்வாய்க்கு இணையாக்க வேண்டி இருந்தது.

சூயஸ் கால்வாய்

கடுமையான காற்றுக்கு எதிர்த்திசையில் கப்பலைத் திருப்பும் பணியில் 11 மீட்புப் படகுகள், 2 அதிநவீன சீகோயிங் மீட்புப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. பின்புறமிருந்து கப்பலை முன்னோக்கித் தள்ளும் வேலையும், கப்பலை நேராக்கும் பணியும் ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதனால், எவர் கிவன் கப்பல் சேற்றில் சிக்கிய 6 நாட்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக மார்ச் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கரைக்கு அருகில் 4 மீ தொலைவில் சிக்கியிருந்த கப்பலின் முன்பகுதி திருப்பப்பட்டு 102 மீ அளவுக்கு கால்வாய்க்குள் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கப்பல் சிக்கியிருந்த பகுதியில் இருந்து 30,000 கன மீட்டர் அளவுக்கு மண் வெளியேற்றப்பட்டிருந்தது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பாலைவனத்துக்கு மத்தியில் அமைந்திருப்பதால், இருபுறமும் மணல் சூழ்ந்து காணப்படும். இதுவும் மீட்புப் பணியில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்கப்பட்ட எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயை ஒட்டிய பிட்டர் ஏரி எனப்படும் துறைமுகப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இயந்திரங்களின் திறன் உள்ளிட்டவை சோதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கும் எவர் கிவன் கப்பல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top