இளவரசு

தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் இளவரசுனு உங்களுக்குத் தெரியுமா!? – நடிகர் இளவரசு கதை!

‘கடலோரக் கவிதைகள்’ சின்னப்பதாஸ் கூட்டாளிகளில் இவரும் ஒருவர். ‘முதல் மரியாதை’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜியை மாட்டிவிடும் போட்டோகிராஃபர்.  ஸ்டில்ஸ் ரவியிடம் அசிஸ்டெண்ட், இயக்குநர் பாரதிராஜா பட்டறையில் உதவி ஒளிப்பதிவாளர், சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி, விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரபுதேவா நடித் ஏழையின் சிரிப்பில் படங்களுக்கு ஒளிப்பதிவாளர், 1999-ம் வருடம் தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வாங்கியிருக்கிறார், என இளவரசு பற்றி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க பிரமிப்பு அடங்கவே இல்லை. இவரைப் பற்றி ஒரு சின்ன சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. அதை கடைசியாக பார்ப்போம். 

பாரதிராஜா பட்டறை!

1980-களில் இயக்குநர் கனவுடன் மதுரையிலிருந்து புறப்பட்டவர்களில் இளவரசுவும் ஒருவர். ஆரம்பத்தில் ஸ்டில்ஸ் ரவியின் அசிஸ்டெண்ட்டாக தன்னோட கெரியரை துவக்கினார். அங்கிருந்தே சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தார். கடைசியாக இயக்குனர் பாரதிராஜாவின் பட்டறைக்கு முகவரி கிடைக்க அவரிடம் கேமராமேனாக இருந்த பி.கண்ணனிடம் உதவியாளராக சேர்கிறார், இளவரசு. அதற்குப் பின் மண்வாசனை படத்தில் முதன்முதலாக இவருடைய பெயர் இடம்பெறுகிறது. ஆனா அடுத்த இரண்டு வருடங்களில் இவருடைய  கெரியரே மாறப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

இளவரசு எனும் எமர்ஜென்சி நடிகர்!

எந்த சினிமா யூனிட்டிலும் இல்லாத ஒரு சிறப்பு, பாரதிராஜா பட்டறைக்கு உண்டு. அவருடைய யூனிட்டில் பெரும்பாலானவர்களுக்கு எமர்ஜென்சி நடிகராக ஒரு காட்சியிலாவது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படித்தான் கேமராமேன் உதவியாளராக இருந்தபோது சினிமாவில் தலைகாட்டினார் இளவரசு. ‘கடலோரக் கவிதைகள்’ சின்னப்பதாஸ் கூட்டாளிகளில் இவரும் ஒருவர். ‘முதல் மரியாதை’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜியை மாட்டிவிடும் போட்டோகிராஃபர் என ஆட்கள் வராத கேரக்டர்களில் நடித்தார், இளவரசு.1987-ம் வருடம் வெளியான ‘வேதம் புதிது’ படத்தில் பாலு தேவரை சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லும் கேரக்டர் இருந்தது. ஆனால், அன்றைக்கு பார்த்து நடிக்கும் நபர் வரவில்லை. பாரதிராஜா சுற்றிலும் பார்க்க, அங்கே கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்த இளவரசு நின்றிருக்கிறார். “தம்பி நீயே பண்ணிடுப்பா” எனக் கூப்பிட்டு அந்த கேரக்டரை நடிக்க வைத்திருக்கிறார், பாரதிராஜா. இரண்டு வசனங்களை பேசி நடித்தார், இளவரசு. பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்தார், பாரதிராஜா. ஆனால், சென்சார் பிரச்னைக்காக மாற்றப்பட்டபோது இளவரசுவின் காட்சிகள் மாறின. சின்ன வேடத்தில் ஆரம்பித்தாலும் அவர் கேமராமேன் என தன் இலக்கை குறிவைத்து பயணித்துக் கொண்டிருந்தார். 

தேடிவந்த தமிழக அரசு விருது!

அசிஸ்டெண்ட் கேமராமேனாக வேலை பார்த்துக்கொண்டே நடிக்கவும் செய்தார், இளவரசு. அடுத்ததாக பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய், இனியவளே, மனம் விரும்புதே உன்னை, ஏழையின் சிரிப்பில் என பல படங்களுக்கு கேமராமேனாக வேலை பார்த்தார். 1999-ம் வருடம் பல பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் மனம் விரும்புதே உன்னை படமும் ரிலீஸ் ஆச்சு. அதற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றார். அன்றைக்கு பெரிய பெரிய ஒளிப்பதிவு ஜாம்பவான்களுக்கு மத்தியில் தன்னுடைய இடத்தை ஆழமாக நிருபித்தார், இளவரசு. ஆனால் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் அமையாததால் நடிக்க வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். 

‘அண்டர்ப்ளே’ நடிகர் @ இளவரசு!

ஒளிப்பதிவு செய்த காலங்களிலேயே பசும்பொன், பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பூவெல்லாம் உன்வாசம், பாண்டவர்பூமி என வரிசையாக படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். அதனால், 2001-ம் வருடம் நடித்த தவசிக்குப் பின்னால் முழுநேர நடிகராக மாறினார், இளவரசு. படங்கள் வரிசை கட்ட ஆரம்பித்தது. ஆனால், இடையிடையே காமெடி, குணச்சித்திர கேரக்டர்கள் கிடைத்தது. ஆனால் ஒரு நடிப்புக் கொடுக்கும் படம் மட்டும் இவருக்கு சிக்கவே இல்லை. 

காத்திருந்தவருக்கு 2006-ம் வருடம் கிடைத்தது 23-ம் புலிகேசி சினிமா. மனுஷன் காமெடியில் பிச்சு உதறி இருப்பார். தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் திருவிளையாடல் ஆரம்பம், சென்னை 600028, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என நடித்துத் தீர்த்தார். அடுத்ததாக ‘குணச்சித்திரத்துக்கு ஒரு லேண்ட்மார்க் வேணுமே.. இது எனக்கு வராதுனு யார்ரா சொன்னா’ என்ற ரேஞ்சுக்கு களவாணி படத்தில் இறங்கி வெளுத்திருப்பார். இந்த படத்துல “ஓ, இப்ப காதல் ஒன்னுதான் கொறச்சலா போச்சோ, தாலிய கழட்டிக் கொடுக்காதடி, வித்துப்புடுவான்”னு காமெடியுடன் சேர்த்து, “என் ஊர்ல வந்து என் மகன்மேல யார்ரா கையை வச்சது” என க்ளைமேக்ஸில் மகனுக்காக அரிவாள் தூக்கிக்கொண்டு போகும் சீன்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். அதேமாதிரி கலகலப்பு படத்தில் அந்த கெட்டப் சேஞ்ச் அமிதாப்  மாமாவாக உதட்டில் விரல் வைத்து சிரிக்கும் கேரெக்டர் அட்ராசிட்டியின் உச்சம். 

அடுத்ததாக இவருடைய லேண்ட்மார்க்கை ஆழமாக முத்துக்கு முத்தாக சினிமாவில் பதிய வைத்தார் இளவரசு. வழக்கமான தமிழ் சினிமா அப்பாக்கள் போல இல்லாமல் இயல்பான அப்பா கதாபாத்திரத்தை கண்முன்னர் கொண்டு வந்திருந்தார், இளவரசு. அந்த அண்டர்ப்ளே நடிப்புதான் இன்று வரைக்கும் இளவரசுவின் லேண்ட்மார்க். வசனம் இல்லாமல் நடிப்பில் உணர்வுகளைக் கடத்தும் அப்பாவாக மாறியிருந்தார், இளவரசு. க்ளைமாக்ஸில் சாப்பாட்டில் அரளி விதையை அரைத்து சரண்யா கொடுப்பார். அந்த சாப்பாட்டை முதல் உருண்டையை சாப்பிடுகிறபோதே ருசியைத் தெரிந்து கொள்ளும் இளவரசு, ‘என்னைக்கும் இல்லாம இன்னைக்கு கொழம்பு ருசியா இருக்கு, இன்னும் கொஞ்சம் ஊத்தும்மா’ எனக் கேட்கும் சீனாகட்டும், சரண்யா மேல் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து, “இதுவரை வாழ்க்கைல உன்னைச் சந்தோஷமாத் தானம்மா வெச்சிருந்தேன்” எனக் கேட்கும் இடத்திலும் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார், இளவரசு. 

நையாண்டி பாடிலாங்குவேஜ்! 

   இவருடைய பலமே நையாண்டி கலந்த பாடிலாங்குவேஜூம், அதோட சேர்ந்த ஸ்லாங்கும்தான். இளவரசுவின் சொந்த ஊர் மதுரை பக்கம் மேலூர். அப்பாதான் இளவரசுவின் ரோல்மாடல். இவர் ஊரைவிட்டு வந்துவிட்டாலும், இவரது ஸ்லாங்கும், பாடிலாங்குவேஜூம் இன்னும் மாறவே இல்லை. புத்தக வாசிப்பு தன்னை நிலைப்படுத்திக்கும்னு நினைக்கிறவர். அதிகமான புத்தக வாசிப்பு இவரது பாடிலாங்குவேஜ்க்கு பலமா இருப்பதாக நம்புகிறார். இதைப் பல இடங்களில் அவரே சொல்லியிருக்கிறார். வில்லத்தனமான நையாண்டி பாடி லாங்குவேஜ் என்.ஜி.கே படத்தில் வேற லெவல்ல பின்னியிருப்பார். 

கடைசியாக ஒரு விஷயம்.. இவரது அப்பா பெயர் மலைச்சாமி, 1967- லிருந்து 1971 வரைக்கும் தி.மு.க மேலூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர். முன்னாள் எம்.எல்.ஏ மகன் என என்றைக்குமே அவர் வெளியில் சொன்னதே இல்லை.

Also Read : ரஜினி vs காமெடியன்ஸ்.. யார் பெஸ்ட் காம்போ!?

1 thought on “தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் இளவரசுனு உங்களுக்குத் தெரியுமா!? – நடிகர் இளவரசு கதை!”

  1. டிகர் திரு இளவரசுஅவர்கள் அருமையான இயல்பான கேரக்கடருக்கு தேவையான அதே நேரத்தில் முத்திரை பதிக்கக்கூடிய நடிப்பையும் கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்…தவசி படத்தில் கிண்டலாக யதார்த்தமாக நடித்தது…எனக்கு்மிகவும் பிடிக்கும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top