கான்பூர் ஐ.டி ரெய்டு

IT Raids: ஐ.டி ரெய்டில் சிக்கும் பணம் என்னவாகும்… சோதனையிட அங்கீகரிக்கப்பட்டவர்கள் யாரெல்லாம்?

ஐ.டி ரெய்டு என்றால் என்ன… எப்போதெல்லாம் நடத்தலாம்… வருமான வரித் துறையில் யாருக்கெல்லாம் ரெய்டு நடத்த அதிகாரம் இருக்கிறது?

ஐ.டி ரெய்டு

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

வருமான வரித்துறையினரால் நடத்தப்படும் `Search and survey operations’ பொதுவாக ரெய்டு என்று அழைக்கப்படுகிறது. சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தை ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நேரத்தில் வருமான வரித்துறையினர், அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவர். சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துகள், பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சட்டரீதியான நடவடிக்கையை அந்த குறிப்பிட்ட நபர் மீது எடுப்பர்.

கறுப்புப் பணம்

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் வருமான உச்ச வரம்புக்கு ஏற்ப அரசுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என்கிறது சட்டம். அந்தவகையில், தனது வருமானத்தைக் குறைத்தோ அல்லது மறைத்தோ சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்டிருக்கும் பணம் கறுப்புப் பணம் என்று வரையறுக்கப்படுகிறது. அதேபோல், அரசு அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாகக் கையூட்டு போன்ற வகைகளிலும் சேர்க்கும் பணமோ, சொத்த சட்டவிரோத வருமானமாகவே பார்க்கப்படும். தங்கள் வருமானம் குறித்த தகவல்களை வருமான வரித்துறையிடம் முறையாக சமர்ப்பிக்க வேண்டும்.

ரெய்டு எப்போது நடத்தப்படும்?

கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்த பிறகு, வருமான வரித்துறை அதுபற்றி விசாரணையைத் தொடங்கும். கறுப்புப் பண விவகாரத்தில் ஐ.டி ரெய்டு என்பது கடைசி அஸ்திரமாகவே பயன்படுத்தப்படும்.

 • வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவில் இருந்து நம்பகத்தன்மையான தகவல் கிடைத்தால்
 • வரி ஏய்ப்பு பற்றி அரசு துறைகளில் இருந்து தகவல் கிடைக்கும்பட்சத்தில்
 • வரி செலுத்துவோரின் தகவல்களை ஆய்வு செய்தபின்னர் கிடைக்கும் உறுதியான தகவல்
 • வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தது குறித்த தகவல் கிடைத்தால்…
 • சட்டவிரோத முதலீடுகள், கணக்கு, வழக்குகளில் முறைகேடு, வங்கிக் கணக்குகளில் திடீரென அதிகப்படியான பண வரவு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ரெய்டு நடத்தப்படலாம்.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை

யாரெல்லாம் ரெய்டு நடத்தலாம்?

வருமான வரித்துறை சட்டம் 132 (1)-ன் படி கீழ்க்காணும் பதவி வகிக்கும் அதிகாரிகள் ரெய்டு நடத்தலாம்,

 • முதன்மை பொது இயக்குநர் – பொது இயக்குநர்
 • முதன்மை இயக்குநர் – இயக்குநர்
 • முதன்மை தலைமை ஆணையர் – தலைமை ஆணையர்
 • முதன்மை ஆணையர் – ஆணையர்

அதேபோல், கீழ்க்காணும் அதிகாரிகள் ரெய்டுக்கு ஒப்புதல் அளிக்கலாம்.

 • கூடுதல் இயக்குநர்
 • கூடுதல் கமிஷனர்
 • இணை இயக்குநர்
 • இணை ஆணையர்
 • உதவி ஆணையர்
 • துணை இயக்குநர்
 • உதவி ஆணையர்
 • துணை ஆணையர்
 • வருமான வரித்துறை அதிகாரி

வருமான வரி தொடர்பாக ஒரு இடத்தில் ரெய்டு நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரி, குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக நம்பும்படியான காரணம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

அவை,

 • வருமான வரி முறைகேடு தொடர்பாக துறை சார்பில் அனுப்பப்பட்ட சம்மன் அல்லது நோட்டீஸ்களைத் தவிர்த்திருந்தால்,
 • குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திடம் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணம் அல்லது வருமானத்தை மறைத்து, அதன் மூலம் சேர்க்கப்பட்ட பணம் இருப்பதாக நம்பப்படும் பட்சத்தில்,
வருமான வரித்துறை அலுவலகம்
வருமான வரித்துறை அலுவலகம்

ரெய்டில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான அதிகாரங்கள்

 • சட்டவிரோதப் பணம் மூலம் பெறப்பட்ட நகை, சொத்து ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் அல்லது அது தொடர்பான பொருட்கள் வைத்திருப்பதாக நம்பப்படும் வீடு, அலுவலகங்கள் அல்லது சொத்துகளில் நுழைந்து, சோதனையிடலாம்.
 • சாவிகள் கிடைக்காதபட்சத்தில் பூட்டுகளை உடைக்கலாம்.
 • முதல் பாயிண்டில் குறிப்பிட்டபடி தனி நபர் எவைற்றையாவது மறைத்து வைத்திருந்தால், அவரை சோதனையிடலாம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களை பறிமுதல் செய்யலாம்.
 • சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் குறித்து குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.

Also Read:

Tax Benefit: வரிச் சலுகைக்காக இப்படியெல்லாமா பண்றாங்க… சில காமெடி உதாரணங்கள்!

எவற்றையெல்லாம் பறிமுதல் செய்யலாம்?

 • கணக்கில் காட்டப்படாத பணம், நகை
 • கணக்கு எழுதப்பட்டிருக்கும் நோட்டு புத்தகங்கள், காசோலைகள், டைரிகள் உள்ளிட்டவை.
 • கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள்.

பறிமுதல் செய்யக் கூடாத சொத்துகள்

 • வணிகரீதியிலான ஸ்டாக்-இன்- டிரேடு தொடர்புடைய ஆவணங்கள் (பணம் தவிர)
 • வருமான வரித்துறையிடம் கணக்குக் காட்டப்பட்டிருக்கும் பணம், நகை, சொத்துகள் குறித்த ஆவணங்கள்
 • வரவு குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்ட பணம்
 • திருமணமான ஒரு பெண், தன்னிடம் 500 கிராம் அளவுக்குத் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். மணமாகாத பெண்ணிடம் 250 கிராமும், ஆண்கள், தங்களிடம் 100 கிராம் அளவுக்கும் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம்.

ரெய்டில் கைப்பற்றப்படும் பணம் என்னவாகும்?

கான்பூர் ஐ.டி ரெய்டு
கான்பூர் ஐ.டி ரெய்டு

ஐ.டி ரெய்டின்போது கைப்பற்றப்படும் பணம் குறித்து குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திடம் சம்மன் அனுப்பி வருமான வரித்துறை விசாரிக்கும். சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட பணத்துக்கு, மொத்த மதிப்பில் 60% அபராதமாக விதிக்கப்படும். மீதமிருக்கும் பணம் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே சம்பாதித்ததாக விளக்கம் கொடுக்கும் பட்சத்தில், திரும்ப அளிக்கப்படும். சட்ட விதிகளை மீறி பணம் சம்பாதிக்கப்பட்டது தெரிந்தால், சட்டத்தின் மற்ற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

உதாரணமாக, கான்பூரில் வாசனை திரவியத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் பியூஷ் ஜெயினிடமிருந்து ரூ.257 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மொத்த பணத்தில் 60% அதாவது ரூ.154.2 கோடி அபராதமாக விதிக்கப்படும். மீதமிருக்கும் ரூ.102.8 கோடி பணத்துக்கு அவர் கணக்குக் காட்டும்பட்சத்தில், அது அவரிடமே ஒப்படைக்கப்படும்.

Also Read – Indian Currency: இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது… 5 காரணிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top