அனிருத்

அனிருத்தை ராக்கிங் ஸ்டார் ஆக்கிய 5 காரணங்கள்

இன்றைக்கு தமிழின் நம்பர் #1 இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் எந்த சந்தேகமும் இன்றி அனிருத்தை கைகாட்டலாம். வெறும் 10 ஆண்டுகளில் தமிழ் இசை உலகின் தவிர்க்க முடியாத ராக்கிங் ஸ்டார் ஆகியிருக்கிறார் அனிருத். இவ்வளவு குறைவான வருடங்களில் எப்படி இந்த உயரம் சாத்தியமானது? அனிருத்தின் ஹிட் ஃபார்முலா என்ன என்பதை 5 காரணங்களில்  பார்க்கலாம். 

* அசாத்தியமான அறிமுகம்

தமிழ் சினிமால யாருக்கும் கிடைக்காத ஒரு மெகா அறிமுகம் மூலமா இவருக்கு கிடைச்சது. ஜியோவெல்லாம் வருவதற்கு முன்பாக ஒரு தமிழ் பாடல் யூ-டியூபில் மில்லியன்களில் வியூஸ் குவித்தது என்றால் அது ‘கொலைவெறி’ பாடல்தான். அதுவும் உங்க வீட்டு எங்க வீட்டு ஹிட் இல்லை. உலகமகா ஹிட்டு. வெளிநாட்டினர்கூட பாடியும் ஆடியும் இந்தப் பாடலை வைரலாக்கினர். ‘Indians can’t stop listening to this gibberish song’ என்று பிபிசி, டைம்ஸ் போன்ற இண்டர்நேசனல் மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. இந்தப் பாடல் எப்படி இந்தளவு வைரல் ஆனது என்பது பற்றி IIM-ல் ரிசர்ச் செய்யப்பட்டது. இதையெல்லாம் விட ஹைலைட் ஆக, அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்தப் பாடலுக்காக தனுஷை இரவு விருந்துக்கு அழைத்துப் பாராட்டினார். இப்படி ஒரு அறிமுகம் தமிழில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத ஒன்று.  

* அனி வழி.. தனி வழி..

இளையராஜா அறிமுகமான முதல் 10 வருடங்களில் 300 படங்களுக்கு இசையமைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் முதல் 10 வருடங்களில் 59 படங்கள் இசையமைத்திருந்தார். ஆனால் அனிருத் இந்த 10 வருடங்களில் 30 படங்கள்தான் செய்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 3 படங்களைத் தாண்டாமல் ஃபோகஸாக இசையமைப்பது ஒவ்வொரு ஆல்பமும் ஹிட் ஆக பெரியளவில் உதவுகிறது. இதன் பலன் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ ஹிப்ஹாப்பில் தொடங்கி, வெஸ்டர்ன் க்ளாசிக், அரபிக் குத்து என எக்ஸ்பெரிமெண்ட்களில் விளையாட முடிகிறது. ஒரே ஆல்பத்தில் மெய்மறந்து குத்தாட்டம் போடச் செய்யும் ஒரு தடாலடி பாடல், இரவில் தனிமையில் கேட்டு ரசிக்க ஒரு மெலடி பாடல் என கலந்துகட்டி முழு பேக்காஜாக கொடுக்க முடிகிறது. அது இளசுகளின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும் அள்ளுகிறது.  

Also Read : “ஏ.ஆர்.ரஹ்மான் முதல் விவேக் மெர்வின் வரை…” பாடகர் அனிருத் ஹிட்ஸ்

* மெகா கூட்டணி.. 

அஜித்துக்கு விவேகம், விஜய்க்கு மாஸ்டர், ரஜினிக்கு பேட்ட, கமலுக்கு விக்ரம் இப்படி எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் செம மாஸ் பாடல்கள் கொடுத்தவர். அதுவும் அவர்களுடைய ஃபேன்ஸ்க்கு முழு திருப்தி கொடுக்கும்படியான பாடல்கள். அதிலும் கில்லி, அண்ணாமலை, விக்ரம் என அவர்களுடைய பழைய மாஸ் டியூன்களை எடுத்து புதுவடிவம் கொடுத்த விதத்தில் தனித்துத் தெரிந்தார் அனிருத். ஒரு பக்கம் அந்தந்த ரசிகர்களை உற்சாகமாக்கியது என்றால் இன்னொரு பக்கம் அவர்களை அனிருத் ரசிகர்களாகவும் மாற்றியது. ஒரு கட்டத்திற்கு பிறகு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பெரிய ஹீரோ படம் அனிருத்திடம் நம்பி கொடுக்கலாம் என்ற நிலைக்கு வந்தனர். 

* மயக்கும் இளமைக்குரல்

இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் மட்டுமல்லாமல் பாடகர்கள் மத்தியிலும் மயக்கும் இளமைக்குரல் அனிருத்துக்கு இருக்கிறது. ‘கண்கள் ரெண்டும் நீரிலே’ என்று அனிருத் பாடத்துவங்கினால் காலேஜ் கேர்ள்ஸ் அத்தனைபேரும் கண்களை மூடி ரசிக்கிறார்கள். ‘வேலையில்லா பட்டதாரி’ துவங்கி ‘ஹலமதி ஹபிபோ’ வரை அநிருத்தின் குரல்தான் 2கே கிட்ஸ்களின் ஆதர்சம். ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா தொடங்கி சாம் சி.எஸ், ஜஸ்டின் பிரபாகரன் வரை எல்லா இசையமைப்பாளர்களுக்கும் பிடித்த குரலாக இருக்கிறார். பிற இசையமைப்பாளர்களின் இசையில் மட்டும் 150க்கும் மேலான பாடல்கள் பாடியிருக்கிறார் அனிருத். 

* ட்ரெண்டிங் ‘கிங்’

பத்து வருடங்களுக்கு முன்பு இண்டர்நெட் சென்சேஷனாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் இன்றும் ட்ரெண்டிங் நாயகனாக இருக்கிறார்.  அரபிக் குத்து, ஜலபுலஜங்கு, டூ டூ டூ என அநிருத் தொட்டாலே இன்ஸ்டாகிராம்களில் மில்லியன்களில் ரீல்ஸ் பறக்கிறது.  அரபிக் குத்து பாடல் வெறும் 12 நாட்களில் 100 மில்லியன் வியூஸ் குவித்தது தமிழ் சினிமா இதுவரை பார்த்திடாத சாதனை. இன்ஸ்டா ரீல்ஸ்ஸை னதில் வைத்தே திரும்ப திரும்ப ஒலித்து வைரலாகும்படியான ஒரு வார்த்தை, ஈசியாக எல்லாருமே டான்ஸ் ஆட ஒரு பீட், குழந்தைகளும் எளிதாக பாடும்படி ஒரு டியூன் என எல்லாப் பாடல்களிலும் சேர்த்துவிடுகிறார். சொல்லிவைத்தார் போல அந்தப் பாடல் வைரலாகிறது.  ஒரு பாடலை எப்படி வைரலாக்க வேண்டும் என்பதில் அனிருத்தை வைத்து பி.ஹெச்.டியே செய்யலாம். 

Subscribe Tamilnadu Now Trends Youtube channel for more evergreen videos

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top