ரோஜா - குஷ்பு

ரோஜா அளவுக்கு குஷ்பு-வால் அரசியலில் சாதிக்க முடியாமல் போனது ஏன்?

சினிமா டூ அரசியல் ஜர்னி, டாப் ஹீரோயின்ஸ், டைரக்டர் கணவர்கள்னு குஷ்புவுக்கும் ரோஜாவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கு. அதேநேரத்துல சினிமாவிலும் சரி, வெகுஜன மக்களை ஈர்த்த விதத்துலயும் சரி, ரோஜாவுக்கு ஒருபடி மேலதான் குஷ்பு இருந்தாங்க. ஆனாலும், அரசியல் கரியர்னு பார்த்தா, ரோஜா அடைந்த உயரத்தை, குஷ்புவால அடைய முடியலை. அரசியலில் குஷ்பு ‘நிகழ மறுத்த அற்புதமா’ ஆனது எப்படி?-ன்றதை பார்த்துட்டு, வீடியோ ஸ்டோரியின் முடிவில் ரோஜாவின் அரசியல் வளர்ச்சிக்குப் பின்னாடி இருந்த இன்ஸ்பையரிங் சம்பவங்களையும் பார்ப்போம்.

குஷ்பு தமிழில் 1988-ல் தர்மத்தின் தலைவன் படம் மூலமா அறிமுகம் ஆகுறாங்க. அடுத்த ஆண்டு வருஷம் 16, வெற்றி விழா மூலமாக பிரபலம் ஆகுறாங்க. 1990-ல் இருந்தே முன்னணி நடிகையா ஆகுறாங்க. அதுக்கப்புறம் பல ஆண்டுகளா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினா வலம் வர்றாங்க. அப்புறம் சுந்தர்.சி உடன் திருமணம் ஆகுது. கேரக்டர் ரோல்ல தொடர்ந்து முத்திரைப் பதிக்கிறாங்க. அதே மாதிரி 1992-ல் செம்பருத்தி மூலமா ரோஜா அறிமுகம் ஆகுறாங்க. அப்புறம் சூரியன். ரெண்டு படமும் செம்ம ஹிட். அப்புறம் சில ஆண்டுகள் டாப் ஹீரோயினா ஆகுறாங்க. இடையில், தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வராங்க. அப்புறம் செல்வமணியின் கரம் பிடிக்கிறாங்க. பின்னர், ஆந்திராவில் அரசியல். அதேபோல, குஷ்புவும் தமிழக அரசியலில் என்ட்ரி ஆகுறாங்க.

குஷ்பு
குஷ்பு

ஆக்ச்சுவலி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த கரீஷ்மா… ரோஜாவைவிட குஷ்புவுக்கு அதிகமா இருந்தது. தமிழ் சினிமாவில் பேரழகியாக கொண்டாடப்பட்டு கோயில் எல்லாம் கட்டப்பட்ட சரித்திரம், ஒரு தடவ முடிவெடுத்துட்டா தன் பேச்சை தானே கேக்காத குணம், மல்டி லேங்குவேஜ்ல வெளுத்து கட்டுற ஆளுமைத் திறன், மக்கள் அபிமானம்… இப்படி குஷ்புவுக்கு நிறைய நிறைய ப்ளஸ் பாயின்ட் இருந்ததை மறுக்க முடியாது. ஆனாலும், அவங்களால அரசியலில் உரிய இடத்தைப் பிடிக்க முடியாமல் போனது ஏன்?

முதல்ல அரசியல்ல அவங்க கடந்து வந்த பாதையை சுருக்கமா பார்ப்போம்.

குஷ்பு அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே அரசியல்னா என்னன்றதை சில அனுபவங்கள் மூலமாக பொது வாழ்க்கையில் கத்துக்கிட்டார்னே சொல்லலாம். திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்து, அரசியல் கட்சிகளையும், பல்வேறு பல்வேறு அமைப்புகளையும் கொந்தளிக்க வைச்சு, தமிழகம் முழுவதுமே கடுமையான எதிர்ப்பை கிளப்பியது. அதனால, பல வழக்குகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அதுதான், அவருக்கு அரசியல் களத்தின் தாக்கத்தை புரிய வைச்சுது.

2010-ம் ஆண்டு திமுகவில் இணைகிறார் குஷ்பு. இடையில், அவர் மிதான வழக்குகள் ஒவ்வொண்ணா தள்ளுபடி ஆகுது. பின்னர், திமுகவின் ஒரு முக்கிய பாப்புலர் ஃபேஸ் ஆகிறார் குஷ்பு.

தமிழகத்தில் வோட் பேங்க் பாலிட்டிக்ஸை பொறுத்தவரைக்கும், மக்களை கவர் பண்றதுக்கு பாப்புலரான ஃபேஸ் தேவை. அந்த வகையில் குஷ்புவை திமுக பயன்படுத்திக் கொண்டதை மறுக்கவே முடியாது. ஆனால், திமுகவின் உள்குத்து அரசியலால் ரொம்பவே பாதிக்கப்பட்டார் குஷ்பு. ஆனாலும், திமுகவின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட அவர், தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு கட்சிக்கு ரொம்ப வலுவான சப்போர்ட்டா இருந்தார்.

அந்த நேரத்துலதான் 2013-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. வழக்கம்போல துணிச்சலான கருத்து ஒண்ணை ஓபனா வெளியே விட்டார். அது, ஸ்டாலினுக்கு எதிரான கருத்துன்றதால திமுகவினர் கொந்தளிச்சிட்டாங்க.

அப்படி என்ன சொன்னார்?

குஷ்பு
குஷ்பு

திமுகவின் அடுத்த தலைவர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை பொதுக்குழுதான் முடிவு செய்யும். அடுத்த தலைவர் ‘தளபதி’யாத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்”னு இருக்கலாம்னு சொல்ல, திருச்சில குஷ்பு மீது திமுகவினர் செருப்பு வீசி தாக்கினர்; சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. ஆனாலும், அசராத குஷ்பு திமுகவிலேயே நீடித்தார்.

அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் நடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட குஷ்பு வாய்ப்பு கேட்டதா பேச்சு இருக்கு. ஆனால், குஷ்புவுக்கு சீட் கொடுக்கலை. அதனால, குஷ்புவுக்கு அதிருப்தி அதிகமாச்சு. அப்புறம் திமுகவில் இருந்து முறைப்படி விலகினார்.

அப்போ, திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில், “திமுகவில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அறிவர். ஆனால், என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை திமுகவில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, திமுகவிலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்”-ன்னு ஷார்ப்பா தன்னோட ஆதங்கத்தை பதிவு பண்ணியிருந்தார் குஷ்பு.

ரைட்டு… அரசியல்னு இறங்கிட்டா, அரசியல்ல நீடிச்சுதான் ஆகணும். திமுகவுக்கு அப்புறம் பாஜகவில் சேருவார்னு பேச்சு எழ, அங்கதான் ஒரு ட்விஸ்ட். காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார் குஷ்பு.

திமுகவில் சேர்ந்துதான் தமிழக அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியலை; காங்கிரஸிலில் இணைந்து தேசிய அரசியலிலாவது தன்னோட தடத்தைப் பதிக்கலாம்ன்றதுதான் அவரோட ப்ளான். சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸில் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரும் நன்றாகவே களமாடினார். அந்தச் சூழலில்தான் அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி எல்லாரையும் ஈஸியா மீட் பண்ற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டார். குஷ்பு சொல்ல வேண்டிய விஷயத்தை இந்தியிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசி புரியவைக்கிறதால, அவரது ஸ்டைல் தலைமைகளுக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. அதனால, ஈஸியா அப்பாயின்ட்மென்டும் கிடைச்சுது.

Also Read – அமைதியா இருங்கடா அப்ரசண்டிகளா.. உ.பி அட்ராசிட்டீஸ்!

இது மத்த முக்கியப் புள்ளிகளின் காதில் புகைச்சலை ஏற்படுத்துச்சு. அதோட கொஞ்சநாள் நல்லாதான் போச்சு. ஆனால், காங்கிரஸின் கோஷ்டி அரசியல் கொத்து பரோட்டா போட ஆரம்பிச்சுது. அதேநேரத்துல, 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தல்களிலும் போட்டியிட குஷ்பு சீட்டும், அவருக்கு காங்கிரஸில் சீட் மறுக்கப்பட்டது. அப்புறம் அங்க இருந்து என்ன பிரயோஜனம். கடும் அதிருப்தி. ட்விட்டர்ல தன்னோட கட்சி பத்தியே காரசாரமா கருத்துகளை வெளியிட்டதோடு, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் முன்னிலையிலேயே ‘கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை யாரும் கூப்டுறது இல்லை. திட்டமிட்டு சிலர் ஓரங்கட்டுகின்றனர்’னு போட்டு உடைச்சாங்க. இதனால தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தரப்பு செம்ம கடுப்பு ஆகிடுச்சு.

இந்த பேக்ரவுண்ட்லதான் காங்கிரஸில் இருந்து விலகுகிறார் குஷ்பு. வழக்கம்போல கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதுறார். அதில், “காங்கிரஸ் கட்சியில் மக்களோடு தொடர்பில்லாத மேல்மட்டத் தலைவர்கள் சிலர் என்னைப் போன்ற மக்களுக்காக உண்மையாக உழைக்க முயன்றவர்களைச் செயல்பட விடாமல் அழுத்தம் கொடுத்தனர். மிக நீண்ட யோசனைக்குப் பின் கட்சியுடனான எனது தொடர்பைத் துண்டித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்”ன்னு காரணங்களை அடுக்கினார்.

அடுத்து… யெஸ்… பாஜக. 2020-ல் ஜே.பி.நட்டா முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் ஆனார். ஆனால், அதில் தோல்வியையே சந்தித்தார்.

ரோஜா
ரோஜா

மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடாத விஐபிகளுக்கு நிர்வாக ரீதியில் பதவிகளை வழங்கி அழகு பார்ப்பதுபோல் ஓரமாக உட்காரவைப்பது பாஜகவின் வழக்கம். அதன்படி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணையக் குழுவின் உறுப்பினர் பதவி இப்போது வழங்கபட்டிருக்கிறது. குஷ்புவும் நன்றி சொல்லி, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு சுதந்திரமாக நீதியைப் பெற்றுத்தர நல்ல களம் அமைந்திருக்கிறது என்று ஏற்றுக்கொண்டார்.

ஆளுமையும் ஈர்ப்பும் மிகுந்த குஷ்புவால் அரசியலில் எதிர்பார்க்கப்பட்ட உச்சம் அடைய முடியவில்லை என்பது தெளிவு. இதற்கு குஷ்பும் ஒரு காரணம், தமிழகத்தில் முக்கிய கட்சிகளில் உள்ள உள்குத்து அரசியலும் மிக முக்கிய காரணம்.

இந்தக் காரணங்களால் குஷ்பு குறித்த இமேஜ், மக்களிடையே எடுபடாமல் போனதால், சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை வானதி ஸ்ரீனிவாசனால் வீழ்த்த முடிந்தது; ஆனால், குஷ்புவால் டாக்டர் எழிலனை வீழ்த்த முடியாமல் போனது. ஒரு கட்சி விட்டு இன்னொரு கட்சிக்குத் தாவும்போது, ஏற்கெனவே இருந்த கட்சியை கழுவியூற்ற வேண்டிய சூழல். திமுக, காங்கிரஸ்ல இருந்தப்ப பாஜகவையும், பல ஜிக்களையும் கழுவி கழுவி ஊத்தினாங்க. காங்கிரஸ், பாஜகவுல இருக்கும்போது திமுகவையும் ஸ்டாலினையும் சரமாரியா சாடினாங்க.

அதுவும் இல்லாம இடையிடையில் அவர் கூறும் துணிச்சலான பல கருத்துகள், சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கிளப்பி மக்கள் மத்தியில ஏதோ ஒரு வகையில் நெகட்டிவ் இமேஜை கிரியேட் பண்ணிடுது. திருநங்கைகள் குறித்து அவதுாறான கருத்து தெரிவித்ததாக எழுந்த சர்ச்சையும், அவருக்கு எதிரான திருநங்கைகள் போராட்டமும்; விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என்று கூறியதால் ஏற்பட்ட சர்ச்சையும், அதற்கு எதிரான போராட்டங்களும்; சாமி சிலை முன்பு செருப்பு காலோடு உட்கார்ந்ததாக எழுந்த சர்ச்சை என பல விவகாரங்கள் குஷ்புவுக்கு பின்னடைவு ஏற்படுத்தின. அன்று திருமணத்துக்கு முன்பு செக்ஸ் குறித்து தன் கருத்தை போராட்டக் களேபரமாக்கிய திருமாவளவனுக்கு பல ஆண்டுகள் கழித்து பதிலடி தரும் வகையில், பெண்கள் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்து சர்ச்சையாக, அதைவைத்து பாஜக சார்பில் போராட்டக்களத்தில் வெளுத்து வாங்கினார் குஷ்பு. ஆனால், தமிழகத்தில் பரவலாக அதெல்லாம் எடுபடவில்லை என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

இப்போ… ரோஜாவுக்கு வருவோம்.

‘ஆர்கே ரோஜா அனே நேனு’ என்று ஆந்திராவில் அமைச்சராக பதவியேற்றதற்குப் பின்னால், சுமார் 15 ஆண்டு அரசியல் போராட்டம் நிகழ்த்தியிருந்தார் ரோஜா. ரோஜா தனது அரசியல் பயணத்தில் இந்த நிலையை எட்ட கொத்த விலை அதிகம்னே சொல்லலாம்.

தெலுங்கு சினிமாவில் தனக்கு இருந்த பாப்புலார்ட்டி மூலம் பாலிட்டிக்ஸில் நுழைந்த ரோஜா, முதலில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அவரது தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். கட்சியின் ‘மகளிர் அணித் தலைவி’யாக நியமிக்கப்பட்டார். தெலுங்கு தேசத்தின்ஸ்டார் பிரச்சாகரர் ஆனார். சித்தூரில் உள்ள ‘நகரி’ தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். 2009-ம் ஆண்டு சந்திரகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வந்தது. இம்முறை மக்கள் செல்வாக்கு இருந்தாலும் தோல்விதான் கிட்டியது. காரணம், உள்குத்து அரசியல். கட்சியில் ரோஜா ஓரங்கட்டப்பட்டார். அங்கிருந்து வெளியேறினார்.

ரோஜா
ரோஜா

அசராத ரோஜா இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கினார். ‘ஜெய் ஜெகன் அண்ணா’ என்று முழக்கமிட்டு ஜெகனின் நம்பிக்கை சகோதரியாக மாறினார். ஜெகன் கட்சியின் பீரங்கி ஆனார். எந்தத் தொகுதியில் தோற்றாரோ அதே தொகுதியில் வென்றார். ‘அம்மா உணவகம்’ பாணியில் ‘ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகம்’ தொடங்கி தினமும் பல்லாயிரம் ஏழை மக்களுக்கு இலவச உணவு அளித்தது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட திட்டங்களை டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக கிடைக்கும் வருவாயைக் கொண்டு செய்தது இதெல்லாம்தான் நகரி தொகுதியில் அவரது வெற்றிக்கு வித்திட்டது. அதன்பின்… நான் ‘அயர்ன் லெக்’ அல்ல, ‘கோல்டன் லக்’ என்பதை நிரூபித்துள்ளேன் என்று கெத்தாக பேசினார் ரோஜா.

சந்திராபாபு நாயுடுவுக்கும், ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் சட்டசபையில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களில் ரோஜாவின் பங்களிப்புதான் அதிகம். தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியின் குறைகளை ஆவேசமாக அடுக்குவார் ரோஜா. ரோஜாவை ஒரு வருடம் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு அவரது உக்கிரம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வருடம் சட்டப்பேரவைக்கு காலடி எடுத்து வைக்காத நிலை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் சாமர்த்திய ரோஜா.

இரண்டாவது முறையும் நகரியில் வென்று, இப்போது ஜெகன் அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராகி இருக்கிறார் ரோஜா. அமைச்சர் பதவியேற்ற பிறகு மேடையில் இருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் காலை தொட்டு வணங்கி, கையை முத்தமிட்டு தனது நன்றியை வெளிப்படுத்திய ரோஜாவின் பண்பு, தெலுங்கு மக்களுக்கு இன்னமும் பிடித்துப் போனது.

அதிர்ஷ்டம் இல்லாதவர், அவமதிக்கப்பட்டவர், ஓரங்கட்டப்பட்டவர் என்றெல்லாம் பேசப்பட்ட ரோஜா, தனது தெளிவான – மக்கள் அரசியலை முன்வைத்த நகர்வுகளால் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளார். ரோஜாவுக்கு சாத்தியப்பட்டது… குஷ்புவால் சாத்தியப்படாமல் போனதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரியலாம். இது குறித்த உங்கள் பார்வையை கமெண்ட் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top