அர்ஜூன்

லியோவுடன் மோதத் தயாரான ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன் கதை!

சினிமாக்கள் தியேட்டருக்குள்ள இருந்து பார்க்குறப்போவும் சரி, டிவியில பார்க்குறப்போவும் சரி நமக்கு ஒரு உணர்வையோ, கருத்தையோ கடத்தும். அந்த மாதிரி உணர்வைக் கடத்துறதுல நிறைய ஹீரோக்கள் இருக்கத்தான் செய்றாங்க. அதுல முக்கியமானவர், நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். இவர் படம் பார்க்கிற அந்த இரண்டரை மணிநேரம் மட்டும் இந்தியாவுக்கும், நமக்கு ஏதும் ஆகாது. நம்மாள் பார்த்துப்பார்னு தைரியம் வரும். அந்த தைரியத்துக்கு சொந்தக்காரர். சினிமாவுல வந்து இவர் சண்டை போடுறப்போ வில்லன் வாங்குற அடி நமக்கு வலிக்கும். அந்த அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பார். கடந்த 40 வருஷத்துல 30 வருஷத்துக்கும் மேல ஹீரோவாவும், கடந்த 10 வருஷத்துல குணச்சித்திர, வில்லன் நடிகராவும் சக்சஸ்புல்லா வலம் வந்துக்கிட்டிருக்கிறவர்தான் நடிகர் அர்ஜூன். அப்படிப்பட்ட ஆக்‌ஷன் கிங்கை பற்றித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

கன்னட நடிகர் சக்தி பிரசாத் மகன் அர்ஜுன். 1981-ல் வெளியான ‘சிம்ஹதா மரி சைன்யா’ படத்தின் மூலமா ஹீரோவாக அறிமுகமானார். 1984-ல் ராமநாராயணன் இயக்கிய ‘நன்றி’ படத்தின் மூலமா தமிழ்ல என்ட்ரி ஆனார். ஆராம்பக் காலக்கட்டங்களில் தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளில் நடித்தார். தமிழில் யார், சங்கர் குரு, தாய்மேல் ஆணை இப்படி பல படங்கள் ஹிட் கொடுக்க, தமிழில் கவனிக்கத்தக்க ஹீரோவானார்.

அர்ஜூன்
அர்ஜூன்

அடுத்ததாக1993-ல் இயக்குநர் ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ படத்தில் ஹீரோவாக நடித்தார், அர்ஜுன். தமிழில் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. அடுத்தடுத்த படிநிலைகளுக்கும் அர்ஜூனை எடுத்துச் சென்றது ஜெண்டில்மேன். அதே வருடம் வெளியான பிரதாப், கோகுலம் படங்களும் வெற்றியடைந்தன. அதன் பின்னர் பல படங்களில் நடித்து வியக்க வைத்தார்.

1999-ல் ஷங்கர் முதன்முறையாக தயாரித்து இயக்கிய ‘முதல்வன்’ அர்ஜுனின் திரைவாழ்க்கையை புரட்டிப்போட்டது. அன்றைய உட்சநட்சத்திரத்துக்கு சொல்லப்பட்ட கதை, ஆனால் அவர் மறுக்க, அதை அர்ஜூன் செய்து முடித்தார். படம் பார்த்தவர்கள் ‘அர்ஜூனைத் தவிர இந்த கேரக்டரை யாரும் செய்திருக்க முடியாது’ என்றார்கள். அவர்கள் சொன்னதுபோலவே கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார், அர்ஜூன். அடுத்ததாக சண்டைக்காட்சிகளில் அனல்பறந்த ஏழுமலை, கிரி, வாத்தியார், மருதமலை என ஆக்‌ஷன் ப்ளாக்பஸ்டர்கள் வரிசைகட்டின. அதே அளவுக்கு தன் படங்களில் வடிவேலுவுடன் காமெடியிலும் பின்னியிருந்தார்.

தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், பாடகர் அர்ஜூன்!

நடிகராக அறிமுகமான அடுத்த 10 வருடங்கள் கழித்து படம் இயக்கினார். 1992-ல் ‘சேவகன்’ படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியதோடு தயாரிக்கவும் செய்தார் அர்ஜுன். குஷ்பு ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இயக்கிய பிரதாப்பும் வெற்றி பெற்றது. மூன்றாவதாக இயக்கிய படம்தான் ஜெய்ஹிந்த். ப்ளாக்பஸ்டர் ஹிட். தீவிரவாதிகளைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரி. இந்தியத் தேசப்பற்றை முன்னிறுத்திய படங்களில் முக்கியமான படமாக இன்று வரை இருந்து வருகிறது. பல தேசப்பற்று படங்களுக்கு முன்னோடியாகவும் அது அமைந்தது. இன்று வரை சுதந்திரத் தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் படமாகவும் உள்ளது. இந்த படத்தில் ஊத்தட்டுமா பாடலை பாடியிருந்தார் அர்ஜூன்.1995-ல் அர்ஜுன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த ‘கர்ணா’வுக்கு எழுத்தாளராக மறினார். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வேதம், ஏழுமலை, பரசுராம், ஜெய்ஹிந்த் 2, சொல்லிவிடவா என பல படங்கள் இயக்கி, அதை தயாரித்தும் இருக்கிறார். இவர் இயக்கிய வேதம் படத்தில்தான் விஷால் உதவி இயக்குநராக வேலை செய்தார்.

அர்ஜூன்
அர்ஜூன்

மாற்றத்துக்கு வித்திட்ட மங்காத்தா!

எல்லா நடிகர்களும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களை டிரான்ஸ்பர்மேஷன் செய்து கொள்கிறார்கள். அப்படி அர்ஜூனும் முதல் 10 வருடங்கள் நடிப்பு, அடுத்த 20 வருடங்கள் இயக்கமும் நடிப்புமாக தொடர்ந்தார். ஆனால் இனி தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடிப்பு தொடர்வது இயலாத காரியம் என உணர்ந்த அர்ஜூன், அஜித்குமார் அழைக்க மங்காத்தாவில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். அஜித்தும், அர்ஜூனும் இணைந்து கலக்கிய மங்காத்தா க்ளைமேக்ஸ் இன்றுவரை பேசப்படும் ஒன்றாக அமைந்ததற்கு அஜித்-அர்ஜூன் கூட்டணி முக்கியமான காரணம். அந்த படத்தில் அர்ஜூன் தன் நடிப்பை நிரூபித்திருந்தார் என சொல்வதற்கு முக்கியமான காரணம் இருந்தது. அதற்கு முன் ஒரு ஸ்டாரை கொண்டாடும் கூட்டத்துக்கு முன்னர் திரையில் அவரை எதிர்த்துப் பேசினாலே ரசிகர்கள் கூச்சல் போடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் மங்காத்தா க்ளைமேக்சில் அஜித் அர்ஜூனை அடிக்கும்போது அஜித் ரசிகர்கள் பொறுமையே காத்தனர். இவர் அடிக்கக் கூடிய ஆள்தான் என்ற பிம்பம்தான் அதற்கு முக்கியமான காரணம். இந்த கேரெக்டர் சக்சஸ் ஆக, கடல், இரும்புத்திரை என வில்லனாக ஒருபக்கம் கலக்க ஆரம்பித்தார். ஹீரோ மாதிரியான ப்டங்களில் குணச்சித்திர நடிப்பும் தொடர்ந்து வருகிறார். அடுத்ததாக லியோவில் கமிட்டாகி விஜயுடன் ஆக்‌ஷனுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். வில்லன், துணை நடிகராகிவிட்ட பின்னரும் பின்னரும் ஹீரோ அல்லது முதன்மையான பாத்திரத்துக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்கள் அர்ஜுனைத் தேடிவருகின்றன. இதுவே ஒரு நடிகர் என்பதற்கு உதாரணம்.

Also Read – பாவம்யா நாங்க.. நடிகர் கௌதம் மேனன் வேணாம்.. டைரக்டர்தான் வேணும்!

ஆக்‌ஷனிலிருந்து அன்புக்கு டிராஸ்பர்மேஷன்!

அதுக்காக ஆக்‌ஷன் ஜானர் மட்டுமே நடிப்பாரா என்று கேட்டால், முன்னால் இருந்தே சாப்டான இளைஞன் கதாபாத்திரத்தில் காதல் தேனை சொட்ட விடும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், ஆக்‌ஷனுக்கு முன்னால் அந்த படங்கள் பெரிதாக இவரை கவனிக்கப்படவில்லை. ஆனால், அப்படியொரு காதல் நாயகனாக ரிதம் படத்தில் நடித்தார். வணிகரீதியில் மிகப்பெரிய உச்சத்தை படம் எட்டாவிட்டாலும், அர்ஜூனின் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது. துள்ளி வரும் காற்றைக்கூட காதல் பேச வைத்து மாறியிருந்தார், அர்ஜூன். வாழ்க்கைத் துணையை இழந்த இருவருக்கிடையே அரும்பும் நட்பையும் அது காதலாக முகிழ்வதையும் தடைகளைக் கடந்து இருவரும் வாழ்வில் இணைவதையும் ஒரு அழகான கவிதையைப் போல் காட்சிப்படுத்தியிருந்த அந்தப் படத்தில் கார்த்திகேயனாக அர்ஜுன் மிக இயல்பாகவும், அழகாகவும் நடித்திருந்தார். மிகவும் ஹேண்ட்சமான ஹீரோவாகவும் எல்லோராலும் ரசிக்கப்பட்டார். இதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் இயல்பான நடிப்புத் திறனும் இளமையான தோற்றமுமே. இதை இப்போதும் தக்கவைத்திருக்கிறார். இப்போதுகூட அவருடைய தோற்றத்தின் மூலம் உண்மையான வயதைத் தெரிந்துகொள்ள முடியாது. விக்கிபீடியாவில் பாருங்கள் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

அர்ஜூன்
அர்ஜூன்

அர்ஜூன் பலம்!

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த அர்ஜுன் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவர் அதிக ஆண்டுகள் சினிமாவில் ஹீரோவாக நடித்ததற்கு இதுவும் ஒரு காரணம் .எல்லா மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து தன்னுடய இருப்பை தக்க வைத்துக் கொண்டிருந்தார். ஆந்திராவில் ஹிட்டாகும் படங்களை ரீமேக் செய்து ஹிட்டடிக்க வைப்பார், அதுவும் இவருக்கு கூடுதல் பலம். இன்னொரு விஷயம் இன்னைக்கு வீரசிம்மா ரெட்டியை கலாய்த்து தள்ளுகிறோம். ஆனால் அர்ஜூன் நடித்த ஏழுமலை படம், பாலகிருஷ்ணா தெலுங்குல நடிச்ச படத்தோட ரீமேக். அங்க அவர் எவ்ளோ அட்டகாசம் பண்ணாரோ அதை தமிழில் அர்ஜூன் பண்ணினார். ஆனால் ரசிக்கும் படியா இருந்தது. அதுக்குக் காரணம் அவரோட மேனரிசம். எதிரில் 100 பேர் வந்தாலும் ஆல்அவுட் ஆக்கும் ஆக்‌ஷனுக்கு ஏற்ற உடற்கட்டு, சண்டைக் காட்சிகளில் மெனக்கெடல் என ‘ஆக்‌ஷன் கிங்’ என்ற அடைமொழிக்குப் பொருத்தமானவராக இன்றும் இருக்கிறார்.

கனவை நிறைவேற்றிய கலைஞன்!

என்னதான் நிறைய ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. ஹாலிவுட்டில் நல்ல ஆக்‌ஷன் ஜானர் சினிமாக்களை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு, சில்வர்ஸ்டார் ஸ்டோலன், அர்னால்டு, புரூஸ்லீ என ஹாலிவுட் ஹீரோக்கள் போல ஃபிட், ஹாண்ட்சம், ஆக்‌ஷன் ஹீரோ தமிழில் இல்லையே எனும் வருத்தம் இருந்தது. அதை 100 சதவிகிதம் நிறைவேற்றினார், ஆக்‌ஷன்கிங் அர்ஜூன்.

எனக்கு இவர் படங்கள்ல ரொம்ப பிடிச்சது ஏழுமலையும், கிரியும்தான். உங்களுக்கு எந்த படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top