ஐபிஎல் அறிமுகத்துக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலர் சர்வதேச கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியாக, உள்ளுர் கிரிக்கெட்டில் அசத்தும் எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள Young Guns 6 வீரர்களைப் பற்றிதான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
ஷாருக்கான்
சையது முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. ஷாருக்கானின் கடைசி நேர அதிரடியால் சாம்பியன் பட்டத்தைத் தமிழக அணி தக்க வைத்தது. டி20 போட்டிகளில் மிடில் ஆர்டரில் கெத்து காட்டி வந்த ஷாருக்கானை, சமீபத்திய ஐபிஎல் ஏலத்தில் இவரை பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் லோயர் ஆர்டரில் களமிறக்கப்பட்ட இவர், 11 போட்டிகளில் 153 ரன்கள் குவித்தார். அதேபோல், டெல்லி அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் 165/5 என்ற நிலையில் களம்கண்ட ஷாருக்கானின் 194 ரன்களால் தமிழக அணி, எதிரணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 452-ஐக் கடந்து முன்னிலை பெற்றது. இத்தனைக்கும் இது ஷாருக்கானின் முதல் ரஞ்சிக் கோப்பை சதம். இப்படி டி20 மட்டுமில்லை ஆங்கரிங் இன்னிங்ஸும் ஆட முடியும் என்று நிரூபித்திருக்கும் ஷாருக்கான், இந்திய அணியின் பினிஷராகவும் விரைவில் ஜொலிப்பார் என்று நம்பலாம்.
அபிமன்யு ஈஸ்வரன்
தமிழகப் பின்னணி கொண்ட அபிமன்யு ஈஸ்வரன், மேற்குவங்க அணியின் ஸ்டார் ஓபனிங் பேட்ஸ்மேன். ஸ்ட்ரோக் பிளேவில் அசத்தும் 26 வயதான அபிமன்யூ, இதுவரை 68 முதல்தர போட்டிகளில் 4,689 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது பேட்டிங் சராசரி 43.4. இந்தியா ஏ, இந்தியா ரெட் அணிகளுக்காகவும் விளையாடியிருக்கிறார். சார்ட்டட் அக்கவுண்டண்டான இவரது தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேற்குவங்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அடுத்த ஓபனர் ரெடி மக்களே..!
ஷிவம் மவி
2018 ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்த ஷிவம் மவியை, அந்த ஆண்டே ஐபிஎல் அணிகளுள் ஒன்றான கொல்கத்தா ஒப்பந்தம் செய்தது. கடந்த 3 சீசன்களாக கொல்கத்தாவுக்காக விளையாடி வரும் ஷிவம், கடந்த சீசனில் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இவரையும் இந்திய சீனியர் கிரிக்கெட் ஜெர்ஸியில் விரைவில் பார்க்கலாம்.
ராஜ் அங்காட்
ஹிமாச்சலப்பிரதேசத்தில் பிறந்த இந்த இளம் வீரர் தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வசித்து வருகிறார். ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டராக இவர் சமீபத்தில் உலகக் கோப்பையை வென்ற ஜூனியர் இந்திய அணியின் தூணாக இருந்தவர். இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ராஜ், 373 ரன்கள் (சராசரி 57.17) மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்திய அணியில் ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டராக நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்றே எதிர்பார்க்கலாம்.
யாஷ் துல்
ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல். இவரது பேட்டிங்கைப் பார்த்து அசந்துபோன டெல்லி பெரிய விலை கொடுத்து ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. சமீபத்தில் தமிழக அணிக்கெதிரான போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய இந்த இளம் நட்சத்திரம் இரட்டை சதமடித்து நம்பிக்கையளித்தது. எதிர்காலத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக யாஷ் துல்லை பார்க்கலாம்.
கே.எஸ்.பரத்
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி-யின் விக்கெட் கீப்பராகவும் ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் அசத்திய கே.எஸ்.பரத், நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் காயமடைந்த சாஹாவுக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். இந்திய அணிக்காக முறையாக இதுவரை அறிமுகமாகாத பரத், விரைவிலேயே இந்திய அணிக்காகக் களமிறங்குவார்.
வாழ்த்துக்கள் இளம் நட்சத்திரங்களே..!
Also Read
Kellian Barontini