அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வருகையால் அமைச்சர்கள் மத்தியில் பதற்றம் நீடித்து வருகிறது. `அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. சில எட்டப்பன்கள் மட்டுமே இருக்கிறார்கள்’ என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ள கருத்து, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் இருந்து வி.கே.சசிகலா தமிழகம் நோக்கிப் புறப்பட்டார். அ.தி.மு.க கொடி கட்டிய காரில் ஏறுவதற்கு முன்னர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர் தமிழகம் வருவதையொட்டி நீண்ட நாள்களாக சசிகலாவுடன் பேசாமல் இருந்த திவாகரனும் அவரது மகன் ஜெயானந்தும் முதல்நாள் மாலையே பெங்களூரு சென்றுவிட்டனர். தினகரனோடு இருந்த பழைய மோதல்களையெல்லாம் மறந்துவிட்டு திவாகரன் தரப்பினர் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்ததை உறவினர்களே எதிர்பார்க்கவில்லை.
முன்னதாக, சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் எனக் கூறி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதியிடம் முறையிட்டனர். இதற்காக டிஜிபி அலுவலகம் வந்தவர்களிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள், சசிகலா குற்றவாளி என்றால், ஜெயலலிதாவும் ஏ 1 குற்றவாளிதானே?' எனக் கேட்டபோது, கொதித்தெழுந்த மதுசூதனன்,
செத்துப் போனவர்களைப் பற்றிக் கேள்வியெழுப்புகிறாயே.. நாளை நீ செத்துப் போனாலும் இப்படித்தான் கேள்வி கேட்பார்கள்’ என வசைபாடியது வைரலானது. இருப்பினும், `சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தனர் அமைச்சர்கள்.
அமைச்சர்களின் பதற்றத்துக்கு ட்வீட் மூலம் பதில் கொடுத்த தினகரன், `தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய்ப் புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு,அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது’ எனப் பதிவிட்டிருந்தார்.
அதேநேரம், சசிகலா வருகையால் தனது சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தது, தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சசிகலா வருகை தந்த அதேநாளில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். பெங்களூருவில் இருந்து கிளம்பிய சசிகலா கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் வழியாக வர இருந்ததால், அந்தநேரத்தில் அங்கு பிரசாரம் செய்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்ததால் தனது பயணத் திட்டத்தையே முதல்வர் ரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து அ.தி.மு.க கொடி கட்டிய காரிலேயே சசிகலா பயணம் செய்தது, அமைச்சர்களிடையே கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. `அ.தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டையை வைத்திருக்கக் கூடிய ஒருவரின் காரில்தான் அவர் பயணம் செய்தார்’ என அ.ம.மு.கவினர் விளக்கம் கொடுத்தனர். (அந்த நபரையும் அன்றே கட்சியில் இருந்து கட்டம் கட்டியது தனிக்கதை).
பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 6 மணிக்கெல்லாம் ராமாவரம் தோட்டம் பகுதிக்கு சசிகலா வருவார் எனக் கூறப்பட்டாலும், அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. சசிகலா வந்த பாதை நெடுகிலும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். போதாக்குறைக்கு பொதுமக்களும் முண்டியடித்ததை சசிகலாவே எதிர்பார்க்கவில்லையாம். சென்னையை நெருங்குவதற்குத் தாமதமாகலாம் என்பதை உணர்ந்த அமமுக பொதுச் செயலாளர் தினகரனும், சசிகலா பேசியதாகக் கூறப்பட்ட அறிக்கை ஒன்றை மீடியாக்களுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த அறிக்கையில் சசிகலா பெயரோ, அவரது கையொப்பமோ இல்லை. அதில், தெய்வ அருளாலும் என் அக்கா அம்மா அவர்களின் ஆசியாலும் இந்தக் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் கழகமே குடும்பம், குடும்பமே கழகம் என அர்ப்பணிப்பேன்' என உருகியிருந்தார். மேலும்,
புரட்சித் தலைவியின் வழிவந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் இருந்து நமது பொது எதிரியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த ஒற்றுமையாய் இருந்து பாடுபட வேண்டும்’ என தி.மு.க-வையும் சாடியிருந்தார்.
`சசிகலாவை வரவேற்க இவ்வளவு தொண்டர்களா?’ என உளவுத்துறை போலீசார் அதிர்ச்சியடைந்தாலும் பல மாவட்டங்களில் இருந்து தலைக்கு தலா 200 ரூபாயையும் பிரியாணியையும் கொடுத்து அழைத்து வந்திருப்பதை மேலிடத்துக்குத் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலையில் சுங்குவார் சத்திரத்தை சசிகலாவின் வாகனம் நெருங்குவதற்குள் தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். காரணம், சசிகலாவின் வருகைக்காக முதல்நாள் மாலை 5 மணியில் இருந்தே அவர்கள் காத்திருந்தார்கள். அங்கிருந்து திரும்பிச் செல்வதற்கு அமமுகவினர் ஏற்பாடு செய்த வாகனம் மட்டுமே இருந்ததால் வேறு வழியில்லாமல் கால்கடுக்க இரவு முழுக்க காத்திருந்தார்கள். சிலர் கிடைத்த இடங்களில் துண்டைப் போட்டு உறங்கினர். இதன்பின்னர் அதிகாலை 5 மணியளவில் சென்னையை நெருங்கிய சசிகலா, நேராக தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்த சசிகலா, தொற்றில் இருந்து நலம் பெற்றுவிட்டாலும் ஓரிரு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளை அரங்கேற்ற உள்ளார். அது ஏறக்குறைய ஜெயலலிதா இறந்த பிறகு, போயஸ் கார்டனில் நடந்த அதே பாணியிலான சந்திப்புகளாகத்தான் இருக்கப் போகிறது. இந்த முறையும், `அ.தி.மு.கவை நீங்கள்தான் சின்னம்மா காப்பாற்ற வேண்டும்’ என அழைக்கும்வண்ணம் இருக்கும் என்கிறார்கள் மன்னார்குடி சொந்தங்கள்.
அமமுக என்ற கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் அடையாளப்படுத்தப்பட்டாலும், சசிகலா வருகையால் தன்னுடைய இமேஜ் கூடும்' எனவும் தினகரன் கருதுகிறார். இந்தமுறை எந்த அவசரமும் காட்டாமல் நிதானமாகவே
அணிகள் இணைப்பு’ என்ற புள்ளியை நோக்கி அவர் நகர்வார் என்கின்றனர் அமமுக மூத்த நிர்வாகிகள் சிலர்.
அதேநேரம், எந்தக் காலத்திலும் சசிகலா, தினகரனை அருகில் சேர்த்துக் கொள்ளக் கூடாது' என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக உள்ளது.
மீண்டும் அவர்களிடம் கைகட்டி நிற்கும் சூழல் உருவாகக் கூடாது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் அதிகாரத்தை வைத்து மொத்த அ.தி.மு.க-வையும் தங்களுடைய பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்’ என முதல்வர் தரப்பு திட்டமிடுகிறது.
இருப்பினும், ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்காதவர்கள், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காதவர்கள் என அதிருப்தியில் உள்ள சிலர், சசிகலா பக்கம் தாவலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அப்படியெல்லாம் யாரெல்லாம் செல்வார்கள் என்ற பட்டியலையும் முதல்வர் தரப்பில் சேகரித்து வைத்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறார்கள். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம், அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா?’ என செய்தியாளர்கள் கேட்டபோது,
அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. சில எட்டப்பன்கள் மட்டுமே இருக்கிறார்கள்’ எனக் கொதித்தார். இதனால் ஆவேசமடைந்த அ.ம.மு.க நிர்வாகிகளும், `எட்டப்பன்கள் யார் என்பது ஊருக்கே தெரியும்’ எனப் பதில் கொடுத்து வருகின்றனர்.
அதேநேரம், சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேசும் மன்னார்குடி உறவினர்கள் சிலர், `ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரசார பாயிண்டுகளை அடிப்படையாக வைத்து தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசுவார். அவரது பேச்சு தொண்டர்களை எழுச்சி பெற வைக்கும். அதே பாணியிலான யுக்தியை சசிகலா மேற்கொள்ள உள்ளார். இதற்கான பயணத் திட்டங்களை வடிவமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கிவிடும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக இந்தப் பயணத்தை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம் நிறைவடையும்போது மொத்த அதிமுகவும் தன்னுடைய பிடிக்குள் வந்துவிடும் எனவும் சசிகலா நம்புகிறார். நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம். காரணம், கட்சி எங்களுடைய கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் மற்ற விஷயங்கள் தானாக நடக்கத் தொடங்கிவிடும்’ என்கின்றனர்.
சசிகலாவின் கனவு பகல் கனவாகவே முடியும்' என்பதில் அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர்.
இந்த மோதலால் இரட்டை இலை முடங்கிவிடக் கூடாது’ என்ற அச்சமும் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சசிகலாவின் ஒவ்வோர் அசைவையும் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, ஸ்டாலினே உற்று கவனித்து வருகிறார் என்பதுதான் ஆச்சர்யம்.