நதியா

டிரெண்ட் செட்டர் `பூவே பூச்சூடவா’ சுந்தரி… நதியா செய்த 3 மேஜிக்குகள்!

இயக்குநர் பாசில் இயக்கிய `பூவே பூச்சூடவா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா… சுந்தரி கேரக்டருக்குக் கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த ஹீரோயின்களுக்கென புதிய டிரெண்ட் செட் செய்தது என்றே சொல்லலாம்… சுந்தரி கேரக்டரில் நதியா செய்த 3 மேஜிக்குகள் பற்றிதான் இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போறோம்.

இயக்குநர் பாசிலின் நண்பரின் மகள்தான் நடிகை நதியா. அவரோட ஒரிஜினல் பெயர் ஜரீனா… படத்துக்காக அவர் பெயர் நதியாவாக மாற்றினார் பாசில். ஏன் அந்தப் பெயரைத் தேர்வு செய்தார்ங்குறதுக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்ய காரணமும் இருக்கு… வீடியோவை முழுசா பாருங்க.. அந்த காரணத்தை நானே சொல்றேன்.  

* சென்சேஷன்

பூவே பூச்சூடவா படம் 1985-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ரிலீஸானது. படத்தில் இடம்பெற்றிருந்த சுந்தரி கேரக்டர் நதியாவுக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. அன்றைய இளம் பெண்கள் பலரும் நதியாவைப் போலவே உடையணிந்து கொள்வதை விரும்பினார்கள். எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், படம் ரிலீஸுக்குப் பின்னர், `நதியா ஸ்டிக்கர் பொட்டு, நதியா கொண்டை, நதியா சுடிதார்’ என நதியாவின் ஸ்டைல் வைரலானது. மாடர்ன் பெண்ணாக நதியாவின் டிரெஸ்ஸிங் தொடங்கி அவரின் மேக்கப் வரை எல்லாமே ஒரு டிரெண்ட் செட்டராக அப்போதைய பத்திரிகைகள் தொடங்கி, பட்டி, தொட்டியெங்கும் பிரபலமானது.

* நடிப்பு ஒன்றே போதும்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி மெட்டீரியலாக ஹீரோயின்கள் பயன்படுத்தப்பட்டு வந்த சூழலில், நதியாவின் என்ட்ரி புதிய தொடக்கம் என்றே சொல்லலாம். படமாகவே இதை ஒரு டிரெண்ட் செட்டர் என்று சொல்வார்கள். கவர்ச்சி துளியும் இல்லை. பாட்டி – பேத்தியின் உறவை இயல்பாகப் பேசிய படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாட்டி கேரக்டரில் நடிகை பத்மினி நடித்திருந்தார். பேத்தியாக வரும் சுந்தரிதான் படத்தின் ஆகப்பெரும் பலமே. பாட்டி வீட்டுக்கு வந்ததும் அவர் தொடங்கும் சுட்டித்தனங்கள் அவரை அந்த ஏரியாவின் ஃபேவரைட் பெர்சனாக்கும். பக்கத்து வீட்டு எஸ்.வி.சேகரிடம் வம்பிழுக்கும் காட்சிகள், குழந்தைகளை பாட்டி முன்னால் மிரட்டிவிட்டு, பின் அவர்களுடன் ஃப்ரண்டு பிடிப்பது, ஒரு கட்டத்தில் பாட்டியுடன் ஆவேசமாக வாதமிட்டுவிட்டு பின்னர் தனது உடல்நிலை பற்றிய உண்மையைச் சொல்வது என சுந்தரியாகவே வாழ்ந்திருப்பார் நதியா.

* கேரக்டரைசேஷன்

அந்த காலகட்டத்தில் வந்த பெரும்பாலான படங்களில் ஹீரோயின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்றால், சாதிக்க விரும்பும் ஹீரோவுக்கு ஒரு ஏணியாக, உந்துகோலாக இருப்பார், இல்லையென்றால் ஹீரோவோட வம்பிழுத்து பின்னர் அவரின் வீர, தீர பராக்கிரமம் புரிந்து அவரைக் காதலிப்பவராக இருப்பார். மொத்தத்தில் ஹீரோவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். அப்படியான சூழலில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் எதுவும் இல்லாமல் அறிமுக நடிகையான நதியாவின் கேரக்டர் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. கதையும் பக்கத்து வீட்டில் நடப்பது போன்ற உணர்வைக் கொடுக்கவே, ஒரு ஃபீல் குட் மூவியாக ஆடியன்ஸிடம் பெரிய வரவேற்பையும் பெற்றது.  

நதியா பெயர்க்காரணம் குறித்து இயக்குநர் பாசில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவர் பேசுகையில், “அந்த காலகட்டத்தில், ருமேனியாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நதியா கொமேனச்சி உலக அளவில் பிரபலமானவராக இருந்தார். பத்திரிகைகளில் அடிக்கடி அவரது படங்களும், செய்திகளும் வந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்த எனது சகோதரன் `இந்த ஜரீனாவுக்கு பதிலாக அந்த நதியாவை எடுத்து சேர்த்துவிட்டால் நன்றாக இருக்குமே’ என்றார். எனக்கும் அது சரியாகத் தோன்றியதால் `செரீனா மொய்து’, `நதியா மொய்து’ ஆனார். அதுவே மக்கள் மனதில் நிலைக்கும் பெயராகிவிட்டது’’ என்று கூறியிருந்தார்.

நடிகை நதியா நடிச்ச படங்கள்ல உங்களோட ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top