பிரியாமணி

`ஏ புள்ள முத்தழகு… கலக்குற போ’ – பிரியாமணி சம்பவங்கள்!

‘பருத்திவீரன்’ ஷூட்டிங் மதுரை பக்கம் ஒரு கிராமத்துல நடந்துக்கிட்டிருக்கு. படத்துல பாத்தீங்கன்னா ஊரோரம் புளியமரம் பாட்டும் அதோட தொடர்ச்சியா வர்ற கார்த்தி – பிரியாமணி கான்வர்சேசன் சீனும் டாப் லைட்லதான் படமாக்கப்பட்டிருக்கும். இதுக்காக கிட்டத்தட்ட தொடர்ந்து 10 நாளுக்கு மேல.. தினமும் காலையில 11 மணியிலேர்ந்து மதியம் 3 மணி வரைக்கும் பிரேக்கூட இல்லாம ஷூட்டிங்கை நடத்திக்கிட்டு வர்றாரு படத்தோட டைரக்டர் அமீர். அதுக்குக் காரணம் அந்த டைம்ல மட்டும்தான் டாப் லைட் கிடைக்கும். அப்படி அந்த சீன் ஷூட் பண்ணிக்கிட்டிருக்கும்போது ஒரு நாள் டைரக்டர் அமீர் பிரியாமணியிடம், ‘கார்த்தி உங்கள அறையும்போது அப்படியே அடி வாங்கி இந்த தண்ணியில விழுந்துடுங்கன்னு’ சொல்லி ஒரு சின்ன குட்டையைக் காட்டுறாரு. அவர் காட்டுன இடத்தைப் பாத்தா, குட்டை முழுக்க அழுக்கான தண்ணி, குப்பை, நிறைய பூச்சின்னு பாக்கவே அறுவெறுப்பா இருக்கு. மணி வேற சரியா 2. ஒருபக்கம் பிரியாமணிக்கு நல்ல பசி வேற. ஆனா இந்த சங்கடம் எதையும் வெளியில காட்டிக்காம ‘பண்ணிடலாம் சார்’ னு கூலா சொல்லிட்டு அந்த ஷாட்ல நடிக்கப்போனாங்க. அமீர் சொன்ன மாதிரியே கார்த்திகிட்ட அறை வாங்கி பொத்துன்னு அந்த குட்டையில விழுந்து எந்திரிச்சாங்க. இப்படி ஒரு தடவை ரெண்டு தடவை இல்ல, அந்த டேக் ஓகே ஆகுற வரைக்கும் பலமுறை விழுந்து எந்திரிச்சாங்க. அப்படியொரு சின்சியர் ப்ளஸ் டேலண்டான ஆர்டிஸ்ட்தான் பிரியாமணி. அதோட விளைவு இங்க அடிச்ச அடி ஒன்றிய அரசுக்கு கேட்டு டெல்லிக்கே கூப்பிட்டு அவருக்கு தேசிய விருது கொடுத்துச்சு.

இப்படி ஒரே படம் மூலம் யாருப்பா இந்த பொண்ணுன்னு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பாக்க வெச்ச பிரியாமணி அதுக்கப்புறம் தமிழ் சினிமாவுல நிச்சயம் ஒரு பெரிய ரவுண்ட் வந்திருப்பாங்கன்னுதான நினைக்கிறீங்க அதான் இல்லை. அப்படியொரு இண்டஸ்ட்ரி ஹிட் படத்துல நடிச்சத்துக்கப்புறமும் பிரியாமணியால தமிழ்ல ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியலை. ஆனா அதேசமயம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தினு மற்ற மொழிகள்ல பீக்குக்குப்போனாங்க.  பருத்திவீரனுக்கு முன்னாடி பிரியாமணி கரியர்ல என்ன நடந்துச்சு அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு.. அது எல்லாத்தையும்விட தனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த பருத்திவீரன் படத்தையும் இயக்குநர் அமீரையுமே அதுக்கப்புறம் பிரியாமணி ஏன் கடுமையா விமர்சனம் செஞ்சாங்கங்கிறதையெல்லாம் இப்போ நாம பாக்கலாம். 

பெங்களூர்ல பிறந்தாலும் பிரியாமணியோட குடும்பம் மலையாள வம்சாவளியைச் சேர்ந்தவங்க. இவங்க குடும்பமே கலைத்துறையைச் சேர்ந்தவங்கதான். இவங்க பாட்டி கமலா கைலாஷ்ங்கிறவங்க கர்நாட்டிக் சிங்கரா இருந்திருக்காங்க. பாலிவுட் ஹீரோயின் வித்யா பாலன், பாடகி மால்குடி சுபாலாம் ஒருவகையில இவங்களுக்கு சொந்தம்தான். இதனால ஸ்கூல் படிக்கும்போதே பிரியாமணி மாடலிங் பண்ண ஆரம்பிச்சாங்க. குறிப்பா நிறைய புடவைகள் சம்பந்தப்பட்ட ஆட்ஸ் இவங்களைத் தேடி வர ஆரம்பிச்சுது. அதுக்கு முக்கிய காரணம் பிரியாமணியோட பாந்தமான முகம்தான்.  2003-ல பாரதிராஜா ‘கண்களால் கைது செய்’ அப்படிங்கிற படத்தை புதுமுகங்களை வெச்சு டைரக்ட் பண்ணனும்னு முடிவு செய்றாரு. அதுக்கு ஹீரோயினா நிறைய மாடல்ஸை வரவெச்சு ஆடிசன் பண்ணி பாக்குறாரு. அதுல ஒருத்தரா பாரதிராஜா ஆபிஸுக்கு வந்தாங்க பிரியாமணி. அப்போ… மோஸ்ட் சீனியர் டைரக்டரான பாரதிராஜாவைப் பாத்து எந்த பயமும் இல்லாம இன்னும் சொல்லப்போனா கொஞ்சம் கெத்தாவே பேசியிருக்காங்க பிரியாமணி. அந்த கெத்தைப் பாத்து பிடிச்சுப் போய்தான் இந்தப் பொண்ணுதான் நம்ம படத்தோட ஹீரோயின்னு முடிவு பண்ணியிருக்காரு பாரதிராஜா. முதல் படமே பாரதிராஜா படம்னு கரியர் ஸ்டார்ட் ஆனாலும் அந்தப் படத்தோட ஷூட்டிங் தள்ளிக்கிட்டேப் போக ஆரம்பிச்சுது, இதுக்கு இடையில பிரியாமணிக்கு தெலுங்குல‘எவரே ஆட்டக்காடு’ அப்படிங்குற படம் கிடைச்சு அந்தப் படமும் 2003-ல ரிலீஸ் ஆச்சு. அந்தப் படம் ரிலீஸ் ஆகி மறுவருசம்தான் பாரதிராஜா டைரக்சன்ல நடிச்ச ‘கண்களால் கைது செய்’ படமே ரிலீஸ் ஆச்சு. அந்தப் படம் பெரிய ஃப்ளாப் ஆனாலும் பிரியாமணி தன்னோட களையான திராவிட முக அழகாலேயும் நடிப்பாலயும் வசீகர நடன அசைவுகள் மூலமாவும் சின்னதா கவனம் ஈர்த்திருந்தாங்க. 

தொடர்ந்து தன்னோட படங்கள்ல டஸ்கி ஸ்கின் டோன் ஹீரோயின்களை மட்டுமே பயன்படுத்திவந்த இயக்குநர் பாலுமகேந்திரா கண்ணுல இந்த டஸ்கி ப்யூட்டி பட்டாங்க. பாலுமகேந்திரா தன்னோட இயக்கத்துல தனுஷுக்கு ஜோடியா பிரியாமணியை ‘அது ஒரு கனா காலம்’ படத்துல நடிக்க வெச்சாரு. ஆனா அந்தப் படமும் பாக்ஸ் ஆஃபிஸ்ல மிகப்பெரிய அடிவாங்குச்சு… என்னதான் இப்படி பாரதிராஜா, பாலுமகேந்திரான்னு பிரியாமணியோட கரியர் தொடங்குனாலும்.. அந்தப் படங்கள்ல பிரியாமணி தன்னோட பங்களிப்பை சிறப்பா கொடுத்திருந்தாலும் அந்த ரெண்டு படங்களுமே மிகப்பெரிய ப்ளாப் ஆனதால இவங்க ஒரு நல்ல நடிகை அப்படிங்கிற விஷயம் இண்டஸ்ட்ரில இருக்குறவங்களுக்கே சரியா தெரியாத அளவுலதான் இருந்துச்சு.

அந்த நேரத்துலதான் அமீரோட டைரக்சன்ல பருத்திவீரன் படத்துல கமிட் ஆகுறாங்க பிரியாமணி. 2007-ல வெளியான அந்தப் படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி தென்னிந்தியாவையே திரும்பிபாக்க வெச்சுது. அந்தப் படத்துல அவங்களோட நடிப்பு எப்படி இருந்துச்சுங்கிறதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ஆனா அப்போத்தைக்கு பிரியாமணிக்கு இருந்த புரிதல் குறைபாடா இல்ல வேற எதுவும் காரணமா தெரியலை, பருத்திவீரன் ரிலீஸுக்கு அப்புறம் பிரியாமணி தொடர்ந்து அமீரை விமர்சனம் பண்ண ஆரம்பிச்சாங்க. பதிலுக்கு அமீரும் பிரியாமணியை விமர்சனம் பண்ண ஆரம்பிச்சாரு. அந்த நேரத்துல பருத்திவீரன்ல நடிச்சதுக்காக பிரியாமணிக்கு தேசிய விருது அறிவிக்கப்படவும், இந்த விருதை இயக்குநர் அமீருக்கு சமர்ப்பிக்கிறேன்னு சொல்லி அப்போதைக்கு அந்த பிரச்சைனையை ஆஃப் பண்ணாங்க பிரியாமணி. ஆனாலும் பின்னாடி அமீர் யோகி படத்துல ஹீரோவா அறிமுகமாகும்போது அவருக்கு ஜோடியா நடிக்க பிரியாமணியையைக் கேட்டப்போ ஏனோ அவங்க நடிக்க மறுத்துட்டாங்க.  

பருத்திவிரன் பெரிய ஹிட் ஆகி மிகப்பெரிய ஃபேமைக் கொடுத்திருந்தாலும் அந்தப் படம் நடிச்சுக்கிட்டிருக்கும்போதே தெலுங்குல டிபிக்கல் கிளாமர் ஹீரோயின் ரோல்கள்ல பிரியாமணி கமிட் ஆகியிருந்த ‘எமதொங்கா’ மாதிரியான படங்கள் அடுத்தடுத்து அங்க ரிலீஸ் ஆகி சக்ஸஸ் ஆக ஆரம்பிச்சுது. இதனாலயோ என்னவோ பருத்திவீரன் மூலமா கிடைச்ச ஃபேமை பயன்படுத்தி தமிழ்லயும் டயர் 1 ஹீரோயினா ஆகனும் விஜய், அஜித்துக்கு ஜோடியா நடிக்கனும்னு முடிவு பண்ணி உச்சபட்ச கிளாமர் அப்படிங்கிற ரூட் எடுத்தாங்க பிரியாமணி. பருத்திவீரன் ஹிட்டுக்கு அப்புறம் அடுத்து பிரியாமணி என்ன மாதிரியான படத்துல வரப்போறாங்கன்னு தமிழ்நாடே எதிர்பார்த்துக்கிட்டிருந்தப்போ  அப்போ பரபரப்பா வந்துக்கிட்டிருந்த விஷாலுக்கு ஜோடியா அவங்க கமிட் ஆன ‘மலைக்கோட்டை’ படத்துல அளவுக்கு அதிகமா க்ளாமர் காட்டி நடிச்சாங்க. ஆனா பருத்திவீரன்ல முத்தழகா பாத்து ரசிச்ச பிரியாமணியை கிளாமர் அழகா பாக்க தமிழ்நாட்டு மக்களுக்கு மனசு வரலைன்னுதான் சொல்லனும். போதாக்குறைக்கு பருத்திவீரன் மாதிரி ஒரு எக்ஸ்ட்ரானரி ஃபர்ஃபாமான்ஸ் பண்ணி அவங்களை பாத்துட்டு, இப்படி கதையில எந்த முக்கியத்துவமும் இல்லாம வெறுமனே கிளாமர் காட்டி டான்ஸ் ஆடிட்டு போற ஹீரோயினா வந்ததை தமிழ் சினிமா ரசிகர்களால ஏத்துக்க முடியலை. மலைக்கோட்டைக்கு அடுத்ததா பருத்திவீரனுக்கு முன்னாடியே பிரியாமணி கமிட் பண்ணியிருந்த தோட்டா படத்துலயும் ஜீவனுக்கு ஜோடியா வெறும் கிளாமர் டாலா வந்ததும் அவங்க சார்மிங்கை இன்னும் குறைச்சுது. 

அடுத்தடுத்து பிரியாமணி.. நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாம நடிச்ச ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் மாதிரியான படங்கள், மக்கள் மனசுல இவங்க மேல இருந்த அபிமானத்தை இன்னும் குறைக்க ஆரம்பிச்சுது. ஆனா இதெல்லாம் தமிழ்ல மட்டும்தான் நடந்துச்சு.  எந்த கிளாமர் ரூட் தமிழ்ல ஒர்க் அவுட் ஆகலையோ அந்த கிளாமர் ரூட் தெலுங்கு, கன்னட மொழிகள்ல அவங்களுக்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு. தொடர்ந்து அது மாதிரியான ரோல்கள்லயே நடிச்சு வந்தாங்க. துரோனாங்கிற தெலுங்கு படத்துலலாம் பிரியாமணி நடிச்ச பிகினி சீன்ஸை பாத்து தெலுங்கு உலகமே வாயடைச்சுப் போய் நின்னுச்சுன்னுதான் சொல்லனும். 

இந்த டைம்லதான் மணிரத்னம் இயக்குன ராவணன் படத்துல விக்ரம் தங்கையா பிரியாமணி கமிட் ஆகுறாங்க. ஹிந்தி வெர்சன்லயும் அபிஷேக் பச்சனுக்கு தங்கச்சியா நடிச்சாங்க பிரியாமணி. ரெண்டு லேங்க்வேஜ்லயும் இந்தப் படம் சரியா போகலைன்னாலும் இந்தப் படம்தான் பிரியாமணிக்கு ஹிந்தி மார்க்கெட்ல ஒரு வெளிச்சத்தை தந்துச்சு. அதே வருசம் ராம் கோபால் வர்மா டைரக்சன்ல சூர்யாகூட பிரியாமணி நடிச்சு தமிழ், ஹிந்தி மொழிகள்ல வந்த ரத்த சரிக்த்ரா படம் மூலமாவும் அவங்களுக்கு ஹிந்தியில ஒரு நல்ல மைலேஜ் கிடைச்சுது. அதனாலயே ஷாருக்கானோட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துல ஐட்டம் சாங் ஆடுற வாய்ப்பும் பிரியாமணியைத் தேடி வந்துச்சு. இந்த காலகட்டத்துலலாம் பிரியாமணிக்கு தமிழ், தெலுங்குல பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சுதுன்னாலும் கன்னடத்துல நம்பர் ஒன் ஹீரோயினா புனித் ராஜ்குமார், கிச்சா சுதீப் போன்ற கன்னட சூப்பர் ஸ்டார்களோட படங்கள்ல தொடர்ந்து நடிச்சுக்கிட்டு வந்தாங்க. கிட்டத்தட்ட 2015,16 வரைக்கும் அங்க அவங்க முன்னணி ஹீரோயினா நடிச்சுக்கிட்டிருந்தாங்க . இங்க தமிழ்ல வந்த காஞ்சனா-2 படம் கன்னடத்துல கல்பனா 2 னு ரீமேக் ஆனப்போ இங்க தமிழ்ல நித்யா மேனன் நடிச்ச ரோல்லயும் இங்க கொடி படத்துல திரிஷா நடிச்ச ரோல்லயும் அங்க பிரியாமனிதான் பண்ணாங்கன்னா பாத்துக்கோங்களேன். இன்னும் சொல்லப்போனா இங்க நயன்தாரா எடுத்த ரூட் மாதிரி ஒரு கட்டத்துக்குமேல பிரியாமணி கன்னடத்துலயும் மலையாளத்துலயும் நிறைய ஹீரோயின் ஓரியண்டட் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாங்க. 

Also Read – திரை தீப்பிடிக்கும்..ஸ்கிரீன்லாம் கிழியும் – இந்தப் படங்களை ரீ-ரிலீஸ் பண்ணா!

இந்த நேரத்துலதான் ஒரு மிகப்பெரிய டர்னிங் பிரியாமணி லைஃப்ல நடந்த்ச்சு. அதுதான் ஃபேமிலிமேன் வெப்சீரிஸ். 2019-ல வெளியான இந்த சீரிஸோட ரீச்சும் இந்த சீரிஸ்ல பிரியாமணி தந்த டேரிங்கான நடிப்பும் பிரியாமணிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்து திரும்பவும் இந்தியா முழுக்க பேசப்பட்டுற ஒரு ஆளா அவங்களை மாத்துச்சு. தொடர்ந்து ஹிந்தியில அடுத்தடுத்து வந்த ‘அடீட்’  ‘ஹிஸ் ஸ்டோரி’ மாதிரியான ஓடிடி வெளியீடுகளும் பிரியாமணியோட நடிப்புத்திறமையை இந்தியா முழுக்க இன்னும் கொண்டுபோய் சேர்த்துச்சு. 

ஆனா என்னதான் பிரியாமணி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு பிற மொழிகள்ல தொடர்ந்து அசத்தி வந்தாலும் தமிழ்ல என்னமோ அவங்களுக்கு பருத்திவீரனுக்கு அப்புறம் பெருசா கிளிக் ஆகலைனுதான் சொல்லனும். ஒருவேளை பருத்திவீரனுக்கு அப்புறம் அவங்க நடிகை அஞ்சலி மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்குற படங்கள்ல நடிச்சிருந்தாலோ இல்ல நயன்தாரா மாதிரி ஹீரோயின் ஓரியண்டன்ட் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருந்தாலோ அந்த குறை நீங்கியிருக்கலாம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை, இனி வரும் காலத்துலயாவது அந்தக் குறை நீங்க வாய்ப்பிருக்கு

சரி நீங்க சொல்லுங்க.. பிரியாமணி நடிச்ச பருத்திவீரன் படம் நம்ம எல்லோருக்குமே பிடிச்ச படம்தான். ஆனா அந்த படம் தவிர்த்து அவங்க நடிச்சதுல நீங்க ரொம்ப ரசிச்ச படம் எது..  இனிமே அவங்க தமிழ்ல நடிக்குறப்போ என்ன மாதிரியான கேரக்டர்கள் பண்ணா நல்லாயிருக்கும்னு நீங்க ஆசைப்படுறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க. 

https://fb.watch/nBW-Isp_qj/

1 thought on “`ஏ புள்ள முத்தழகு… கலக்குற போ’ – பிரியாமணி சம்பவங்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top