மன்சூர் அலிகான்

மகா வில்லன் மன்சூர் அலிகானின் பயணம்!

தமிழ் சினிமாவோட வெள்ளித்திரையில தங்களோட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தின வில்லன்கள் ஏராளம். பி.எஸ் வீரப்பா, நம்பியார் தொடங்கி அர்ஜூன் தாஸ் வரையிலான பட்டியல் கொஞ்சம் பெரிசு. அந்த பட்டியல்ல அட்டகாசமான சிரிப்போட ஒருத்தர் இருப்பார். அவரோட பெயர்தான் மன்சூர் அலிகான். 1990 காலக்கட்டத்துல மன்சூர் அலிகானோட நடிப்பு தவறாம எல்லா படங்கள்லேயும் இருக்கும். குரூப் டான்சர், பைட் மாஸ்டர்னு ஆரம்பிச்சு ஹீரோக்களுக்கு சவால்விடுற வில்லானா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான். வித்தியாசமான முக பாவனை, ஆளையே அதிரவைக்கிற சிரிப்பு, நக்கலும், நையாண்டியும் கலந்த பேச்சு, அலட்சியமான நடை, மிரட்டலான உடல்மொழினு திரையில மன்சூர் அலிகான் உருவான கதை சுவாரஸ்யமானது.

மகா வில்லன் மன்சூர் அலிகான்!

ஆரம்பக்காலக்கட்டங்கள்ல குரூப்டான்சரா தன்னோட கெரியரை ஆரம்பிச்சவர், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டண்ட் மேனாக மாறினார்.  முதல்முதலாக வேலைகிடைச்சிடுச்சு படத்துல கிடைச்ச வாய்ப்பை கெட்டியா பிடிச்சுகிட்டார். சின்ன சின்ன ரோல்கள்ல நடிச்சிருந்தாலும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்துற வாய்ப்பு கிடைக்காதானு காத்துகிட்டிருந்தார். அந்த நேரம் புலன் விசாரணை முடிச்சிட்டு, கேப்டன் பிரபாகரனை இயக்க தயாராகிட்டு இருந்தார், ஆர்.கே செல்வமணி. வீரபத்ரன் கதாபாத்திரத்துக்கு சரியான கதாபாத்திரத்தை தேடி அலைஞ்ச நேரம் அது. அந்த படத்தின் தயாரிப்பாளர் ராவுத்தரின் பட்டறையில் இருந்த வசனகர்த்தாவும், இயக்குநருமான லியாகத்அலிகான்கிட்ட வாய்ப்பு கேட்டு போறார், மன்சூர்.  லியாகத் அலிகானும், ராவுத்தரிடம் மன்சூரைக் காட்டிய முதல் நிமிடமே இந்த புதுமுகம்தான் நமக்கு தேவைனு சொல்லி ஓகே சொல்லிட்டார். இங்கதான் விதி விளையாட ஆரம்பிச்சது. புதுமுகம்ங்குறதால ஓகே சொன்ன ராவுத்தரும், லியாகத் அலிகானும் வேலைகிடைச்சிடுச்சு படத்தோட ப்ரொஜெக்‌ஷன் பார்க்க போறாங்க. அதுல வெள்ளைவேட்டி கட்டிக்கிட்டு மன்சூர் நடிக்க, அதைப் பார்த்து டென்சன் ஆனார், ராவுத்தர். என்னய்யா புதுமுகம்தான்னு சொன்ன, இப்போ படத்துல நடிச்சிட்டிருக்கான். இதுசரிப்பட்டு வராது, வேற ஆளைப் பார்ப்போம்னு சொல்லிட்டு போயிட்டார். மறுபடியும் லியாகத் அலிகான் சமாதானப்படுத்தி கேப்டன் பிரபாகரனுக்கு மன்சூர் அலிகானை கூட்டிட்டு வந்தார். ஆர்.கே.செல்வமணிக்கும் இவரை பிடிச்சுப்போகவே படத்துக்குள்ள வில்லனா வந்தார், மன்சூர். காதுல ஒரு கடுக்கன், கறைபடிஞ்ச பற்கள், தலையை ஒருபக்கம் சாய்ச்சு பேசுன வசனங்கள், பார்த்தவுடனே பதறவைக்குற உடல்மொழினு கேரெக்டராவே மாறியிருந்தார், மன்சூர். முகத்துல ரத்தம் ஊத்தி மிரட்டலான சிரிப்பை வெளிப்படுத்துன அந்த சீன் ஹீரோவை விட பலமானவன் நான்னு நிருபிச்சார், மன்சூர். அதுவரைக்கும் அப்படி ஒரு வித்தியாசமான வில்லனை தமிழ்சினிமா பார்த்தில்லைனும் சொல்லலாம். இப்படி ஒரே படத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார், மன்சூர். கேப்டன் பிரபாகரனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களோட படங்கள்ல வில்லனா நடிக்க கமிட் ஆனார், மன்சூர். ஆனாலும் விஜயகாந்தின் பல படங்களில் வில்லனாவும், கெஸ்ட்ரோல்லயும் கலக்கினார், மன்சூர்.

வில்லன் டு கதாநாயகன்!

வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கும்போதே ஹீரோவாக அவதாரம் எடுத்தார், மன்சூர். அந்த படத்துக்கு ராஜாதி ராஜனு ஆரம்பிச்சு 44 எழுத்துகளோட ஒரு டைட்டிலை வைச்சு கோடம்பாக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வெளியிட, விஜயகாந்த் குத்துவிளக்கேற்ற, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் புகழ்ந்து பேசனு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். அந்தப் படத்தில் ஹீரோ மட்டுமல்ல, கதை, திரைக்கதை, இயக்கம், இசையமைப்பாளர் என பல அவதாரம் எடுத்தார். ராபின்ஹூட் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய வசூலைக் குவிக்காம போனாலும், மன்சூர் அலிகானின் ஹீரோ அவதாரம் கவனத்தை ஈர்த்தது. இனிமே ஹீரோதான் என்ற பாலிசி எல்லாம் இல்லாமல், மீண்டும் வில்லனாக வந்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார், மன்சூர். ஒருபக்கம் வில்லன், ஒரு பக்கம் ஹீரோனு ரெட்டைக் குதிரையில சவாரி செஞ்சார், மன்சூர். சிந்துபாத், என்னைப்பார் யோகம் வரும், வாழ்க ஜனநாயகம்னு பல படங்கள்ல ஹீரோவா கலக்கினார்.

காமெடி வில்லன்!

உடல்மொழியிலேயே மிரட்டும் வில்லனிலிருந்து காமெடி வில்லனுக்கு ஷிப்ட் ஆனார் மன்சூர். நானும் ரவுடிதான் படத்தில் பார்த்திபனுடன் அரசியல்வாதியாக வந்து பின்னிபெடல் எடுத்திருந்தார். இந்த ரூட்டும் நல்லாத்தான் இருக்குனு சொல்லி, குலேபகாவலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூலம் நகைச்சுவையை அழுத்தமாக பதிவு செஞ்சார் மன்சூர். அதேபோல சிங்கம் 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் அழுத்தமான நடிப்பையும் தவறாம பதிவு பண்ணியிருக்கார்.

அரசியல் வசனங்கள்!

முதல்முதலாக ஹீரோவாக அறிமுகமான படத்தில் இடம்பெற்ற முதல் பாடலில் ஜெயலலிதா படத்தைக் காட்டிய பின்னர் வர்ற வரிகள் அப்போதைய அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியது. “நாட்டை ஆளுறவன் நாட்டை மதிக்காட்டி குடிமகன் எப்படி மதிப்பான், பதவியில உள்ளவங்க பகல்வேசம் போட்டா பாட்டாளி சும்மாவா இருப்பான்” -இப்படி ஒரு வரியை தன் படத்தில் வைத்தார் மன்சூர். இதுக்காக தலைவன் எப்பவுமே வருத்தப்படவே இல்லை. 2021-ல உட்சபட்சமா டிப் டாப் தமிழானு ஒரு ஆல்பம் சாங் தயாரிச்சு தானே இசையமைச்சு, தானே பாடி ரிலீஸ் பண்ணினார், மன்சூர். மத்திய அரசை ஒரே பாட்ல தரலோக்கலா இறங்கி கலாய்ச்சிருப்பாரு மன்சூர். வத்திக்குச்சி பாட்டுக்கு ஸ்டுடியோல போட்ட ஸ்டெப்பை முன்னாடியே இந்த ஆல்பம் சாங்ல வச்சிருப்பார்.

தக் லைஃப்!

படப்பிடிப்பு நாள் அன்னைக்கு பூனையை குறுக்க ஓடவிடுறது, ராகு காலத்துல படப்பூஜையை ஆரம்பிக்கிறதுனு கோடம்பாக்க செண்டிமெண்ட்டை உடைத்தார், மன்சூர். இதுக்காக பலபேர் விமர்சனமும் வச்சாங்க. இதைத்தாண்டி எப்போவுமே படம் நடிக்கிறதுல தீராத ஆர்வம் மன்சூருக்கு உண்டு. ஒரு தடவை ஒரு பிரஸ்மீட்ல book my show அப்ளிகேஷனை ‘மாமா வேலை பார்க்க உனக்கு எதுக்கு 30 ரூபாய்’னு சொல்லி வெளுத்துவாங்கினார். தான் டைரக்ட் பண்ணியிருக்கிற படத்தை ‘இது மோசமான படம், இதுவும் நான் டைரக்ட் பண்ணியிருக்கேன், நான் நடிச்ச படத்தை நானே பார்க்க மாட்டேன்’னு சொன்னார்.

அரசியல் வாழ்க்கை!

ஆரம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியி தீவிர ஆதரவாளராக இருந்தார். அரசியலில் பரபரப்பான விமர்சனங்களை வைத்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடத் தயாரானார் மன்சூர் அலிகான். அந்த நேரத்துல புதிய தமிழகம் கட்சி சார்புல அதிமுகவோட கோட்டையான பெரியகுளம் தொகுதியில போட்டியிட்டார். அப்போ அதிமுக சார்புல போட்டியிட்டவர் டி.டி.வி தினகரன். அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியா 90,000-க்கும் மேல ஓட்டுகளை அள்ளி மூணாவது இடத்தை பிடிச்சார், மன்சூர். தொடர்ந்து சினிமாக்கள்ல நடிச்சுகிட்டே அரசியல்லயும் ஆர்வம் காட்டினார். அடுத்ததா தன்னை நாம் தமிழர் கட்சியில சேர்த்துக்கிட்டார். நாம் தமிழர் அறிவிக்கிற போராட்டங்கள்ல தவறாம கலந்துக்க ஆரம்பிச்சார், மன்சூர். ஒரு தடவை பிரதமர் மோடி தமிழகம் வர்றதை கண்டிச்சு, நாம் தமிழர் கட்சி நடத்துன போராட்டத்துல கலந்துகிட்டு ஜெயிலுக்கு போய் வந்தார். உள்ள போய்ட்டு வெளியே வந்தவர், ‘நாம் தமிழர் கட்சியினர் ஜெயிலுக்கு போறது கோவிலுக்கு போய்ட்டு வர்றது மாதிரி’னு சொல்லி தஃக்லைப் கொடுத்தார். 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களமிறங்கினார் மன்சூர். வாக்கு சேகரிக்க செஞ்ச செயல்கள் குபீர் ரகமா இருந்தது. அந்த தேர்தல்ல 55,000 ஓட்டுகளை வாங்கி  4-ம் இடம் வாங்கினார், மன்சூர். அதேபோல கடந்த சட்டமன்ற தேர்தல்ல நாம் தமிழர் கட்சியில இருந்து வெளியேறி, தமிழ்தேசிய புலிகள் கட்சியை ஆரம்பிச்சு தொண்டாமுத்தூர் தொகுதியில நின்னார். பிறகு நான் தேர்தல்ல போட்டியிடலனு சொல்லி பரபரப்பாக்கினார்.

தன் பேச்சால பல சிக்கல்களைச் சந்திச்சாலும், என்னைக்குமே பேச படப்பட்டதே இல்லை மன்சூர் அலிகான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top