Jeppiaar

‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..!

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவரும் ஏழை மாணவர்கள் பலரது கல்விக் கனவை நிறைவேற்றியவருமான ஜேப்பியாரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய நினைவுகள் சில…

  • போலீஸ் கான்ஸ்டபிள், எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றத் தலைவர், அ.தி.மு.க தென்சென்னை மாவட்டத் தலைவர், தமிழக அரசின் மேலவைக் கொறடா, முதலமைச்சரின் சிறப்புத் தூதர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சேர்மன், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுத் துறை இயக்குநர் – ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜேப்பியாரின் அடையாளங்களாக இருந்த பட்டங்கள் இவை.
  • கன்னியாகுமரி மாவட்டத்தின் முட்டம் பகுதியிலிருந்து சென்னைக்கு இவர் வந்த கதை சுவாரஸ்யமானது. சிறுவயது முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், பள்ளிக்குச் செல்வதில் ஈடுபாடு காட்டாமல் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டி வந்தார். இதனால், பத்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்தது. பதினாறு வயதுக்குளேயே 6.1 அடி உயரத்தை எட்டிய இவர், தந்தையின் சொல்படி போலீஸில் சேர்ந்தார். கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்த ஜேப்பியார், விரைவிலேயே தலைமைக் காவலர் பொறுப்புக்கு வந்தார். அதேநேரம், இரண்டு முறை சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இரண்டாவது முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, `தலைவரைப் பார்த்து சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு வருகிறேன்’ என்று கூறி சென்னைக்கு பஸ் ஏறியிருக்கிறார்.
ஜேப்பியார்

சென்னை வந்திறங்கிய அவர், காசிமேடு மீன் மார்க்கெட்டில் வேலையில் சேர்ந்ததோடு எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை ஒட்டுவது உள்ளிட்ட வேலைகளையும் செய்துவந்த அவர், தனது சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்ய முயற்சிக்கவே இல்லை. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பிரியத்துகுரியவரான ஜேப்பியார், அ.தி.மு.க தொடங்கப்பட்ட பின்னர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக உயர்ந்த பின்னர், 1977 தேர்தலில் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக தமிழகம் முழுவதும் அவருடன் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேர்தல் வெற்றிக்குப்பின்னர் சட்ட மேலவை கொறடாவாக உயர்ந்தார். சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு வருகிறேன் என்று சென்னை புறப்பட்ட ஜேப்பியார், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுத் துறை இயக்குநரான பின்னரே முட்டத்துக்குச் சென்றார். கட்சியில் இவரது அதிரடிகள் காரணமாக `மாவீரன்’ என்ற அடைமொழியோடே கட்சிக்காரர்கள் இவரை அழைத்தனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்த்து வைக்கும் திறன் பெற்றிருந்ததால், எம்.ஜி.ஆரின் போலீஸ் ஸ்டேஷன் என்றும் ஜேப்பியார் அழைக்கப்பட்டார்.

  • எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய ஜேப்பியார், 1988-ல் எம்.ஜி.ஆரின் அன்னை சத்தியபாமா பெயரில் பொறியியல் கல்லூரியை நிறுவினார். பின்னர், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகமாக சத்தியபாமா பல்கலைக்கழகம் உருவெடுத்தது. இதன்மூலம் தமிழகத்தின் முதல் தனியார் பல்கலைக்கழக நிறுவனர் ஆனார். தமிழகக் கல்வித் துறையில் தனியார் பங்களிப்புக்கு இவர் போட்ட விதை முக்கியமானது. அதன்பின்னர், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அதேபோல், சத்தியபாமா பல் மருத்துவக் கல்லூரி, செயிண்ட் மேரீஸ் மேலாண்மை கல்வி நிறுவனம், பனிமலர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி போன்றவைகளையும் அவர் தனியொருயாளாக நிறுவி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவினார்.
ஜேப்பியார்
  • கல்வி நிலையங்களில் கேம்பஸ் இண்டர்வியூ என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நேர்காணல் நடத்தும் முறை குறித்து முதல்முறையாகக் கேள்வி எழுப்பியவர் ஜேப்பியார். பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஒவ்வொரு மாணவரும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகள் தொடங்கி கல்லூரிப் படிப்பு வரையில் நல்ல பெர்ஃபாமன்ஸ் ரெக்கார்ட் வைத்திருக்க வேண்டும் என ஐ.டி நிறுவனங்கள் சொல்லிவந்தன. இதைக் கேள்விக்குள்ளாக்கிய ஜேப்பியார், ஒரு மாணவர் எப்படி உள்ளே வருகிறார் என்பது முக்கியமல்ல. எப்படி வெளியே போகிறார் என்பதுதான் முக்கியம்’ என்றார்.கல்லூரியில் நாங்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தபிறகு எப்படியிருக்கிறது ஒரு மாணவரின் பெர்ஃபாமன்ஸ் என்பதைப் பாருங்கள்’ என்று சொன்னார். அதேபோல், பொறியியல் படிப்பை முடித்தபிறகு மாணவர்கள் குறைந்த சம்பளத்துக்கு பிபிஓ நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்வதை விரும்பாதவர் ஜேப்பியார். அதற்குப் பதிலாக நம் கல்வி நிறுவனங்களிலேயே முதுகலைப் படிப்பை முடித்து இங்கேயே பேராசிரியர் பணியிடங்களில் சேரலாமே என்று மாணவர்களை மோட்டிவேட் செய்வாராம்.
  • கல்வியின் மீது தீராக் காதல் கொண்டிருந்த ஜேப்பியார், அரசியல் பணிகளுக்கு இடையிலும் படிப்பைக் கைவிடவில்லை. சட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டப்படிப்பையும் முடித்தார். `வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்’ என்ற தலைப்பில் அவர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தார். எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நம்பிக்கையோடு ஆங்கிலத்தில் பேசுவது அவரது தனித்த அடையாளம் என்கிறார்கள்.
  • கல்வி தவிர வியாபாரத்தில் நாட்டம் கொண்டிருந்த அவர், குடிநீர், பால், சிமெண்ட், கம்பி, உப்பு, டெக்னோ பார்க், டிராவல் ஏஜென்ஸி, ரெடிமிக்ஸ் கான்க்ரீட் என பலதுறைகளிலும் பிஸினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதேபோல், தமிழில் மூக்குத்தி என்ற பெயரில் இதழையும் நடத்தினார். எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்ற நல்லதை நாடு கேட்கும் படத்தைக் கையிலெடுத்த ஜேப்பியார், எம்.ஜி.ஆரின் தம்பியாக நடித்து அந்தப் படத்தை நிறைவு செய்து வெளியிட்டார். அந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர் தயாரிக்கவும் செய்தார். `வசந்த அழைப்புகள்’ படம் இவரது தயாரிப்பில் வெளியான மற்றொரு படம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top