ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் பிடெலாய்டு ரோட்டிஃபர் (bdelloid rotifer) என்ற பல செல் உயிரினம் சுமார் 24,000 ஆண்டுகளாக பனியில் உறைந்து கிடந்து, தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ம முடிகிறதா? நீங்க நம்பலைனாலும் அதுதான் நெசம். பொதுவாக எந்த உயிரினமும் வெப்பநிலை மற்றும் குளிர் நிலை ஆகியவற்றை குறிப்பிட்ட அளவுக்கு மேலோ அல்லது கீழோ தாங்கும் திறன் உடையதாக இருக்காது. ஆனால், இந்த உயிரினம் எந்தவித கடினமான சூழ்நிலையையும் தாங்கும் திறன் பெற்றது. அதாவது, உணவில்லாமல் இருக்கும் சூழ்நிலை, நீரின்றி வாழும் சூழ்நிலை மற்றும் குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருக்கும் சூழ்நிலை போன்ற கடினமான சூழ்நிலைகளையும் இந்த உயிரினம் எதிர்கொள்ளக்கூடியது. தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையானது, `உலகிலேயே கதிரியக்க எதிர்ப்பு திறன் அதிகம் உள்ள உயிரினங்களில் இதுவும் ஒன்று’ என குறிப்பிட்டுள்ளது. இந்த உயிரினம் எப்படி இந்த நிலையை அடைகிறது என்பதை தெரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
பிடெலாய்டு ரோட்டிஃபர் என்ற மிகச்சிறிய உயிரினமானது -20 டிகிரி செல்சியஸ் குளிரில் சுமார் பத்து ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் வாழக்கூடியது என முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால், தற்போது கிடைத்துள்ள பிடெலாய்டு ரோட்டிஃபர் உயிரினத்தை ஆய்வு செய்ததில், இந்த உயிரினம் சுமார் 23,960 ஆண்டுகள் முதல் 24,485 ஆண்டுகள் வரை பழமையானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள அலசேயா நதி அருகே இந்த உயிரினமானது ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது. இந்த உயிரினம் தற்போது புத்துயிர் பெற்றது மட்டும் இல்லாமல் எந்தவித பாலின தொடர்பும் இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் திறனையும் பெற்றுள்ளது. தரையில் இருந்து சுமார் 3.5 மீட்டர் கீழே எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த உயிரினம் மீட்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசியோகெமிக்கல் அண்ட் பயாலஜிகல் ப்ராப்ளம்ஸ் இன் சாயில் சயின்ஸ் (Institute of Physicochemical and Biological Problems in Soil Science) நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டாஸ் மலாவின் என்ற ஆராச்சியாளர் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக பேசும்போது, “பிடெலாய்டு ரோட்டிஃபர்கள் கிரிப்டோபயோசிஸைப் பயன்படுத்த பரிணாமம் அடைந்தன. (உயிரினங்கள் வறட்சி, உறைதல் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாடு போன்ற சுற்றுசூழல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை கிரிப்டோ பயோசிஸ் என்பர்.) ஒரு பல செல் உயிரினமானது உறைபனியில் பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். பின்னர், மீண்டும் அவை உயிர் பெறும்.” என்று கூறியுள்ளார். ரோட்டிஃபர் என்பது நன்னீரில் வாழக்கூடிய பல செல் உயிரினம் என்று பொருள். சுமார் 50 மில்லியன் ஆண்டுகள் உயிர்வாழ தேவையான விஷயங்களை இந்த உயிரினங்கள் தெரிந்து வைத்துள்ளன என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல செல் உயிரினங்கள் பல ஆண்டுகள் உறைந்த நிலையில் இருந்துவிட்டு மீண்டும் உயிர் பெறுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜுலை மாதம் கடலின் அடிப்பகுதியில் இருந்த செயலற்ற நுண்ணுயிரிகளை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக புத்துயிர் பெற வைத்த செய்திகளும் வெளியாகியுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான தாவரங்களைக் கூட விஞ்ஞானிகள் புத்துயிர் பெற செய்துள்ளனர். சுமார் 1,500 ஆண்டுகள் அண்டார்டிகாவில் பனிக்கட்டியாக இருந்த பாசியை ஆராய்ச்சியாளர்கள் மீட்டு உயிர்பெற செய்துள்ளனர். அதேபோல, நூற்புழுக்களையும் மீட்டு ஆராய்ச்சியாளர்கள் புத்துயிர் பெற செய்துள்ளனர். இதன் வரிசையில் தற்போது பிடெலாய்டு ரோட்டிஃபர் என்ற விலங்கையும் ஆராய்ச்சியாளர்கள் புத்துயிர் பெற செய்துள்ளனர். அவ்வகையில், உலகின் மிக நீண்டகாலம் உயிர் பிழைத்திருக்கும் உயிரினம் இது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read : நீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!