நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பதவி விலகப்போறதா சொல்லிருக்காங்க. (அய்யோ அங்க பார்த்துட்டு அப்படியே இந்த பக்கம் பார்ப்பாங்களே மொமன்ட் ஃபார் யாருக்கோ) எங்கயோ நியூசிலாந்துல நடந்த அந்த சம்பவத்துக்கு இங்க நம்ம பயலுக மேற்கை ஏற்காதே வீழும் சூரியனேனு ஃபீல் பண்ணி வாட்ஸப் ஸ்டேட்டஸ் வச்சிட்டு இருக்கானுக. அதுக்கு சில காரணங்கள் இருக்கு. நம்ம ஜிக்கும் அவங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு. அதே சமயம் நம்ம ஜி அவங்ககிட்ட கத்துக்குறதுக்கு சில விஷயங்களும் இருக்கு. அட அண்ணாமலைக்கும் இவங்களுக்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா? யார் இந்த ஜெசிந்தா? அப்படி என்ன பண்ணாங்க? ஏன் பதவி விலகுறாங்க? இவங்களை பத்தி நியூசிலாந்து டீக்கடை வாசல்ல என்ன பேசிக்கிட்டாங்க? வாங்க பார்க்கலாம்.
ரொம்ப கம்மியான வயசுல பிரதமர் ஆன ஜெசிந்தா நியூசிலாந்துல ஆளும் கட்சியா இருக்குற லேபர் பார்ட்டியோட தலைவரும்கூட. பொதுவா ஒரு கட்சில ரொம்ப கம்மியான வயசுல ஒருத்தர் தலைவராகணும்னா நம்ம ஊர்ல ரெண்டு விதமா அது சாத்தியம். ஒண்ணு அந்த கட்சி லெட்டர் பேட் கட்சியா இருக்கணும். வடிவேலு சொல்ற மாதிரி சேர்ந்த உடனே தலைவர் பதவி வாங்கிடலாம். இன்னொன்னு ஏற்கனவே அவங்க அப்பா தலைவரா இருந்தா வாரிசுக்கு ஈசியா தலைவர் பதவி கிடைக்க சான்ஸ் இருக்கு. இது ரெண்டுமே ஜெசிந்தாவுக்கு பொருந்தாது. ஏன்னா லேபர் பார்ட்டி அங்க 100 வருசத்துக்கும் மேல செல்வாக்கா இருக்குற கட்சி. நிறைய தேர்தல்களை ஜெயிச்ச கட்சி. ஜெசிந்தா அரசியல் வாரிசும் கிடையாது. அந்த வகைல நம்ம அண்ணாமலை மாதிரினு சொல்லலாம். ஜெசிந்தாவோட அப்பா ஒரு போலீஸ் ஆஃபிசர். அம்மா ஸ்கூல்ல வேலை பார்க்குறாங்க. காலேஜ் படிக்கும்போதே அரசியல்ல ஆர்வம் வந்த ஜெசிந்தா 17 வயசுல லேபர் பார்ட்டில உறுப்பினரா ஜாயின் பண்றாங்க. ஒரு தேர்தல்ல அவங்களோட அத்தை போட்டியிடுறாங்க. அவங்களுக்காக இவங்க கேம்பெய்ன் பண்றாங்க. அதுதான் முதல் அரசியல் அனுபவம். பாலிடிக்ஸ்ல பேச்சிலர் டிகிரி பண்றாங்க. அமெரிக்கால போய் பிஜி பண்றாங்க. அங்கயே தொழிலாளர் உரிமைக்காக நிறைய போராட்டங்கள்ல பங்கெடுக்குறாங்க. அங்க இருந்து லண்டன் பிரதமர் அலுவலகத்துல பாலிசி அட்வைஸரா ஜாயின் பண்றாங்க. அங்க இருந்து சீனா, இஸ்ரேல், ஹங்கேரினு டிராவல் பண்ணி அரசியல் களத்துல இயங்குறாங்க. கட்சில இவங்க பேரு பெருசாகுது. 28 வயசுல முதல் முறையா எம்.பியா செலக்ட் ஆகுறாங்க. 37 வயசுல அடுத்தடுத்து கட்சியோட துணைத் தலைவர், எதிர்கட்சித் தலைவர், கட்சியோட தலைவர், பிரதமர்னு ஒருவருசத்துல பெரிய இடத்துக்கு வந்துடுறாங்க. இவங்க பிரதமரானப்போ உலகத்துலயே கம்மியான வயசுல பிரதமரான பெண் இவங்கதான். 2017 ல இருந்து இப்போ வரை இவங்கதான் நியூசிலாந்து பிரதமரா இருக்காங்க. இப்போ இந்த பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்யப்போறதா அறிவிச்சிருக்காங்க.
உலகம் முழுக்க ஜெசிந்தா பிரபலமானதுக்கு முக்கியமான காரணம் ஒரு தலைவரா அவர் நடந்துகொண்ட விதம். ‘ஒரு சாதாரண நேரத்துல ஒரு நாட்டோட பிரதமரா என்னவேணாலும் பண்ணாலும். ஆனா இந்த 6 வருசம் நான் நிறைய சோதனைகளுக்கு நடுவில பிரதமரா இருந்து கையாண்டிருக்கேன்’ அப்படினு ஜெசிந்தா சொல்லியிருக்காங்க. உண்மைதான் அவங்களோட ஆட்சிலதான் கொரோனா, உலகையே உலுக்கிய துப்பாக்கிச்சூடு, எரிமலை வெடிப்புனு சுத்தி சுத்தி பிரச்னைகள் வந்தது. அது அத்தனையும் இவங்க கையாண்ட விதம் இவங்களை உலகம் முழுக்க பிரபலமாக்கியது. அதுல குறிப்பா சில விஷயங்கள் மட்டும் பார்க்கலாம்.
* கொரோனா காலத்துல சிறப்பா செயல்பட்ட நாடுகள்ல முதல் இடத்துல இருந்தது நியூசிலாந்துதான். ஒரு உதாரணத்துக்கு சொல்வதென்றால் இந்தியாவில் லாக்டவுன் வந்தபோது 560 பேருக்கு கொரோனா இருந்தது. ஆனால் நியூசிலாந்தில் 50 பேருக்கு கொரோனா வந்தபோதே நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. இந்தியாவில் கொரோனா வந்த 100 பேரில் 2 பேர் இறந்த நிலையில் நியூசிலாந்தில் 1000 பேருக்கு ஒருவர் இறந்தார்கள். வெறும் நான்கு மாதத்தில் கொரோனாவை வென்று ஜூன் 2020-லயே கொரோனா இல்லாத நாடாக அறிவித்தார் ஜெசிந்தா. கொரோனா காலத்தில் தனது அமைச்சர்களுக்கு 20 சதவீதம் சம்பளத்தில் பிடித்தம் செய்தது பொதுமக்களிடம் பெரிய வரவேற்பைக் கொடுத்தது. 2022 ஜனவரியில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார் ஜெசிந்தா ஆனால் அந்த நேரத்தில் ஒமிக்ரான் வந்ததால் திருமணத்தை தள்ளி வைத்தார். பல விஷயங்களில் அலெர்டாக இருந்து அறிவியல்ரீதியாக செயல்பட்டதால்தான் சீக்கிரம் அந்த நாடு கொரோனாவிலிருந்து விடுபட்டதாக சொல்லப்பட்டது. நம்ம ஆட்கள் விளக்கு போட சொன்னது ஞாபகம் இருக்கா ஃப்ரெண்ட்ஸ்?
* 2019 மார்ச்சில் க்ரைஸ்ட்சர்ச் என்ற நகரில் இருந்த மசூதிகளில் புகுந்து ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிரவைத்தது. மதவெறுப்புதான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தார் ஜெசிந்தா. ‘இவர்கள் எங்கிருந்து வந்தாலும் இவர்கள்தான் நம் ஆட்கள். நான் இவர்கள் பக்கம்தான் நிற்கிறேன். சுட்டவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை’ என்று பேசினார். அதோடு மதப்பிரச்னையை உருவாக்கும் என்பதால் சுட்டவரின் பெயரை வெளியிட மாட்டேன் என்றும் அறிவித்தார். ஜெசிந்தாவின் இந்த செயலுக்கு பெரிய ஆதரவு எழுந்தது. இது நடந்த சில மாதங்களில் நியூசிலாந்தின் வொயிட் ஐலேண்ட் என்ற சுற்றுலா தளத்தில் எரிமலை வெடித்து 9 பேர் இறந்தனர். அதில் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சென்று சந்தித்தார்.
Also Read : பெண்களுக்கு ஏன் நிதி சுதந்திரம் அவசியம் – 5 காரணங்கள்!
* தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கிளார்க் என்பவரோடு காதலில் இருந்தார் ஜெசிந்தா. 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு எங்கேஜ்மெண்ட் நடந்தது. திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தையும் பிறந்தது. ஆட்சியில் இருக்கும்போது கர்ப்பமான இரண்டாவது பெண் தலைவர் இவர். முதல் ஆள் பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோ. மூன்று மாதக் குழந்தையுடன் ஐ.நா சபைக்கு சென்று பேசியது செம்ம வைரல் ஆனது. ‘நாட்டையும் பார்த்துட்டு குழந்தையும் பாத்துக்கணுமே.. எப்படிங்க’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது. ‘குழந்தையை கவனித்துக்கொண்டே வேலை பார்க்கும் முதல் பெண் நான் இல்லை. எல்லாரும்தானே பண்றாங்க’ என்று கூலாக சொன்னார்.
* இவர் அறிவித்த Wellbeing Budget இன்னொரு மாஸ்டர்ஸ்ட்ரோக். நம்ம ஊரில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் இருப்பதைப் போல குழந்தைகள் நலம், மனநலம் இதையெல்லாம் உள்ளடக்கிய அந்த பட்ஜெட் பாராட்டப்பட்டது. எல்லா மாணவிகளுக்கும் இலவச பீரியட் கிட் வழங்குவோம் என்று அறிவித்தது, அபார்சன் செய்வது குற்றமில்லை அது ஹெல்த் சம்பந்தப்பட்டது என்று சொன்னது, LGBTQ அணிவகுப்பில் கலந்துகொண்டது என Inclusive-ஆக பார்க்கும் இவரது செயலுக்காகத்தான் அத்தனை ஃபேன்ஸ். இந்த மாதிரி விஷயங்கள்லாம் நம்ம ஊர் அரசியல்வாதிகளும் செயல்படுத்தலாம்.
பெண்கள்கிட்ட நாட்டைக் கொடுங்கப்பா.. பாருங்க எப்படி கில்லி மாதிரி செயல்படுறாங்க என்று பலரையும் சொல்லவைத்தவர் ஜெசிந்தா. தற்போது அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். “இனிமேலும் இந்தப் பதவியில் இருக்க எனக்கு ஆற்றல் இல்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. இப்போது நான் பதவி விலகவில்லை என்றால் அடுத்த தேர்தலில் நாம் வெற்றிபெற முடியாது.” என்று சொல்லியிருக்கிறார். “வர்ற அக்டோபர்ல எலெக்சன் வருதுல. அதுல லேபர் பார்ட்டி ஜெயிக்கிறது கஷ்டம்னு கருத்துக் கணிப்புல சொல்லிட்டான்ப்பா. அதான் அத்தாச்சி ரிசைன் பண்ணிடுச்சு. வெவரம்யா நம்ம புள்ள” என்று நியூசிலாந்து பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் டீக்கடை வாசலில் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்.