நூற்றாண்டுகளைக் கடந்த போயிங் விமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்று. சக போட்டியாளரான ஏர் பஸ்ஸை சமாளிக்க அந்த நிறுவனம் எடுத்த ஒரு முடிவு, எப்படி அதை பாதித்தது. கால மாற்றத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு விமான உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் போயிங் கதையைத் தான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.
அமெரிக்காவில் மர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த ஒருவர், 1909-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி ஒன்றுக்குச் செல்கிறார். விமானங்கள் என்பதே அபூர்வமாக இருந்த அந்த காலகட்டத்தில், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த Sea Plane, அவரின் கவனத்தை ஈர்க்கிறது. ஓராண்டுக்குப் பின்னர் கிரீன் ரிவர் பகுதியில் இருந்த மரத்தில் கப்பல் தயாரிக்கும் சிறு நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1915 வாக்கில் அமெரிக்காவின் முதல் விமான டிசைனரான க்ளீன் மார்ட்டினை சந்தித்து, விமானத்தில் பறப்பது எப்படி என தனக்குச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்கிறார். பறக்க வேண்டும் என்கிற தீராத தாகத்தில் இருந்த அவர், மார்ட்டின் உருவாக்கிய Flying Birdcage என்கிற Sea Plane-ஐ விலைக்கு வாங்குகிறார். இருப்பினும் அந்த விமானம் டெஸ்ட் செய்யப்பட்டபோது விபத்துக்குள்ளானது. அந்த நபர் வில்லியம் இ.போயிங். ஒரே ஒரு seaplane-ல் தொடங்கி இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனமாக போயிங் வளர்ந்தது எப்படி?
அதன்பின்னர், தனது நண்பரும் அமெரிக்க கடற்படை என்ஜினீயருமான ஜார்ஜ் கோர்னார்ட் வெஸ்டர்வெல்ட்டுடன் இணைந்து புதிய விமானம் ஒன்றை டிசைன் செய்யத் தொடங்குகிறார். இருவரின் பெயர்களில் இருந்த முதல் எழுத்துகளை வைத்து B&W seaplane என்கிற பெயரில் புதிய விமானத்தை டிசைன் செய்கிறார்கள். Flying Birdcage விபத்து நடந்து ஓராண்டுக்குப் பின்னர் வெற்றிகரமாக இந்த விமானத்தின் சோதனை ஓட்டத்தை முடிக்கிறார்கள். போயிங் மாடல் 1 என்று அழைக்கப்பட்ட இந்த மாடலை அமெரிக்க கடற்படைக்கும் விற்க நடந்த முயற்சி தோல்வியடைகிறது. இருந்தும் தனது முயற்சியில் சற்றும் தளராத போயிங், சீன என்ஜினீயரான Wong Tsu உதவியோடு போயிங் மாடல் 2 விமானத்தை உருவாக்குகிறார். 1917 முதல் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்துக்கு இரண்டு விமானங்களை வெற்றிகரமாக விற்கிறார். இதுதான் போயிங் நிறுவனம் அடைந்த முதல் கமர்ஷியல் வெற்றி. அதன்பின்னர், அமெரிக்காவின் தபால் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை போயிங்கின் மாடல் 40 ஏற்படுத்தியது. படிப்படியாக ராணுவ பயன்பாட்டுக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என காலத்துக்கு ஏற்றவாறு தன்னை அப்டேட் செய்துகொண்டது போயிங். இதுமட்டுமின்றி, 1950-களில் தயாரிக்கப்பட்ட போயிங் 707 மாடல்தான் உலகின் முதன்முதலில் உருவாக்கப்பட்ட Narrow Body விமானம். பயணிகள் விமான சேவையில் பயன்படுத்தப்படும் இன்றைய மாடல் விமானங்களுக்கெல்லாம் அதுதான் முன்னோடி மாடல்.
போயிங்கின் பெயருக்கு பெரும் டேமேஜ் செய்தது அந்த நிறுவனத்தின் 737 மேக்ஸ் மாடல் விமானங்கள் சந்தித்த கோர விபத்துகள்தான்… போட்டியை சமாளிக்க போயிங் செய்த ஒரு தவறு எப்படி அத்தனை உயிர்களைப் பலிவாங்கியது… என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க!
உலகின் எந்தவொரு துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கு மிகப்பெரிய இரண்டு நிறுவனங்கள் இடையே யார் நம்பர் ஒன் என்கிற போட்டி இருப்பதைப் பார்க்கலாம். அப்படித்தான் கமர்ஷியல் விமான உற்பத்தியில் அடித்துக் கொள்ளும் இரண்டு நிறுவனங்கள் போயிங் மற்றும் ஏர் பஸ். மார்க்கெட்டைப் பிடிக்க இந்த இரண்டு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி இன்றளவும் நிலவுகிறது. உலகில் விற்பனையாகும் 70% விமானங்கள் இந்த இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவைதான். அப்படி ஏர் பஸ் நிறுவனம் தங்களது Airbus 320 விமானத்தில் பெரிய இன்ஜின்களைப் பொறுத்தி சின்ன அப்டேட்டுடன் Airbus 320 விமானங்களை 2010-களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தியது. இது போயிங்கின் மார்கெட் ஷேரைக் கடுமையாகப் பாதித்தது. இதற்குப் போட்டியாக போயிங் எடுத்த முடிவுதான், ஏற்கனவே களத்தில் இருக்கும் போயிங் 737 மாடலில் அப்டேட் செய்து போயிங் 737 மேக்ஸ் என்ற மாடலை அறிவித்தது. இதில் என்ன பிரச்னை என்றால், பெரிய இன்ஜின்களைப் பொறுத்த 737 மாடலில் சரியான இடம் இல்லாமல் இருந்தது. இதை சரிசெய்ய புத்திசாலித்தனமாக ஒரு முடிவை எடுத்தது போயிங்.
Also Read – ‘எல்லாம் ஒரே இடத்தில்…’ – தி.நகர் உருவான வரலாறு!
737 மாடல் விமானங்களில் இறக்கைகளுக்கு மேலாக இந்த இன்ஜின்களைப் பொறுத்தியது போயிங். ஆனால், இது வேறுவிதமான சிக்கலை ஏற்படுத்தியது. பொதுவாக விமானங்களின் முன்பகுதி, டேக் ஆஃப் ஆகும்போது ஒரு குறிப்பிட்ட ஆங்கிளுக்கு மேல் இருந்தால் அந்த விமானம் பறக்கும் தன்மையை இழந்துவிடும். இதை ஸ்டால் என்பார்கள். அப்படியான சூழலில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிவிடும். புதிய இன்ஜின் பொருத்தப்பட்ட போயிங் 737 மேக்ஸ் மாடலுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டது. அதை சரிசெய்ய Manoeuvring Characteristics Augmentation System எனப்படும் MCAS எனும் தொழில்நுட்பம் இந்த வகை விமானங்களில் பொறுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஆங்கிளுக்கு மேலே விமானத்தின் முன்பகுதி (Nose) சென்றால், அதை கீழ்நோக்கி செலுத்தி சரிசெய்வதுதான் இந்தத் தொழில்நுட்பம். 737 மாடல் விமானங்களுக்கும் அப்டேட் செய்யப்பட்ட 737 மேக்ஸ் மாடல் விமானங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று அறிவித்தது. அதேபோல், 737 மாடல் விமானங்களை இயக்கிய விமானிகள் சிறு பயிற்சியின் மூலமே இதை இயக்க முடியும் என்றும் சொன்னது போயிங். ஆனால், MCAS பற்றி பெரிதாக எந்தவொரு அறிவிப்பையும் செய்யாமல் விட்டது போயிங்.
இந்தத் தொழில்நுட்பத்தால்தான் 2018 மற்றும் 2019 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தோனேசியா மற்றும் சீனாவில் இரண்டு போயிங் 737 மேக்ஸ் மாடல் விமானங்கள் விழுந்து நொறுங்கின. குறிப்பாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த 190-க்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் கூட பிழைக்கவில்லை. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விமானிகள் போராடவே, MCAS தொழில்நுட்பம் தானியங்கியாக ஆன் ஆகி விமானத்தை கீழ்நோக்கி செலுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் விமானிகள் போராடியும் அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையில், கீழே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, அமெரிக்கா, இந்தியா, சீனா உள்பட பல நாடுகளும் போயிங் 737 மேக்ஸ் விமானத்துக்குத் தடை விதித்தன. அதன்பின்னர், MCAS தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதாகக் கூறி ஓராண்டுக்குப் பின்னர் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. உலகை உலுக்கிய இந்த இரண்டு விபத்துகள் குறித்து விசாரித்த அமெரிக்க நீதித்துறை போயிங் நிறுவனத்துக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது. உலகின் பெஸ்ட் செல்லர் மாடலாக இருந்த போயிங் 737 மாடலே, அந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய சோதனையையும் கொடுத்தது.
போயிங் 737 மேக்ஸ் விபத்துகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க… பாதுகாப்பில் கோட்டைவிட்ட போயிங் நிறுவனத்துக்கு அபராதம் மட்டுமே தண்டனையா?.. இதுபற்றி உங்க ஒப்பீனியனை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!