இகோரோடு பாய்ஸ்

எக்ஸ்ட்ராக்‌ஷன் முதல் ஜகமே தந்திரம் வரை… டிரெய்லர் ரீமேக்கில் கலக்கும் இகோரோடு பாய்ஸ்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் திரைப்படம் `ஜகமே தந்திரம்’. இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லரை நைஜீரியாவைச் சேர்ந்த சிறுவர்கள் ரீமேக் செய்து தங்களது யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த ரீமேக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நைஜீரியாவின் லாகோஸ் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள்தான் இந்த ரீமேக்கை செய்தவர்கள். `இகோரோடு பாய்ஸ்’ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த பிரபல திரைப்படங்களின் டிரெய்லர்களை தங்களிடம் இருக்கும் பொருள்கள் மற்றும் குறைவான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரீமேக் செய்து யூ டியூபில் உள்ள இகோரோடு பாய்ஸ் (Ikorodu Bois) பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த ஆண்டு வெளியான `எக்ஸ்ட்ராக்‌ஷன்’ என்ற திரைப்படத்தின் டிரெய்லரை ரீமேக் செய்ததன் மூலம் பரவலாகக் கவனம் பெற்றனர்.

இகோரோடு பாய்ஸின் ட்ரெய்லர் ரீமேக்குகள் நகைச்சுவாக இருப்பதுடன் சுவாரஸ்யமாகவும் அவர்களது படைப்பாற்றலை வெளிக்காட்டும் விதமாகவும் உள்ளன. ஜகமே தந்திரம் படத்தின் வரும் டைட்டில்களை அட்டைகளில் எழுதிக் காண்பிப்பதில் இருந்து மீசை வைத்திருப்பது, சிகரெட்டுக்கு பிடிக்கும் காட்சிகளில் சிகரெட்டுக்கு பதிலாக குச்சி மிட்டாயை ஸ்டைலாக வைப்பது என வேற லெவலில் காட்சிகளை ரீமேக் செய்துள்ளனர். `எக்ஸ்ட்ராக்‌ஷன்’ படத்தின் டிரெய்லரை ரீமேக் செய்தபோது சிறுவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தும் நெட்ஃபிளிக்ஸும் இந்த ரீமேக்கை பார்ப்பார்கள் என நம்புகிறோம்” என்று பதிவிட்டிருந்தனர்.

சிறுவர்கள் ஆசைப்பட்டது போலவே எக்ஸ்ட்ராக்‌ஷன் படத்தின் ஹீரோ கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் சிறுவர்களின் டிரெயலர் ரீமேக்கைப் பார்த்தார். அதோடு, தனது சமூக வலைதள பக்கங்களிலும் சிறுவர்களின் வீடியோவைப் பகிர்ந்தார். அதுமட்டுமில்லாமல், ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களான ரூஸோ சகோதரர்களும் இவர்களுக்கு தங்களது பாராட்டினை தெரிவித்து எக்ஸ்ட்ராக்‌ஷன் 2 படத்தின் பிரீமியர் ஷோவைக் காண இகோரோடு பாய்ஸை அழைத்தனர். ட்விட்டரில் சுமார் 2.25 லட்சம் நபர்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் நபர்களும் இவர்களைப் பின்தொடர்ந்து வருகின்றனர். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் சிறுவர்களுக்கு தேவையான கேமரா, லைட் போன்ற பொருள்களைப் பரிசாக அனுப்பியது.

இகோரோடு பாய்ஸ் குழுவில் பாபாதுன்டே சன்னி, முய்ஸ் சன்னி, மாலிக் சன்னி மற்றும் இவர்களது உறவினர் ஃபவாஸ் ஐனா ஆகியோர் உள்ளனர். இதில் முய்ஸ், மாலிக் மற்றும் ஃபவாஸ் ஆகியோர் வீடியோவில் தோன்றி நடித்து வருகின்றனர். இவர்களின் மூத்த சகோதரர் பாபாதுன்டே சன்னி வீடியோக்களை எடிட் செய்து வருகிறார். நைஜீரியாவில் லாகோஸ் பகுதியில் அமைந்திருக்கும் இகோரோடு என்ற ஊரை வைத்துதான் இகோரோடு பாய்ஸ் என்று தங்களது பெயரை வைத்துள்ளனர். இவர்களது பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வரவேற்பைப் பெற்றன. `மனி ஹெய்ஸ்ட்’ நடிகர் ஆல்வாரோ மான்டே, நடிகர் வில் ஸ்மித் மற்றும் பிரபல ராப்பர் ரோடி ரிச் ஆகியோரது கவனத்தையும் இவர்கள் ஈர்த்துள்ளனர். பாபாதுன்டே இதுதொடர்பாக பேசும்போது, “உலக அளவில் உள்ள மக்கள் எங்களைப் பற்றி தெரிந்து கொள்வதால் நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : தமிழ்நாட்டில் எந்தெந்த ஏரியாவுல என்னென்ன உணவுகள் ஃபேமஸ்… Foodie டெஸ்டுக்கு நீங்க ரெடியா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top