பல்கலை. துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் – பேரவையில் புதிய மசோதா தாக்கல்!

உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் நிலையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான புதிய சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கலாகியிருக்கிறது.

துணை வேந்தர்கள் மாநாடு

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு இன்றும் நாளையும் (ஏப்ரல் 25,26) நடைபெற இருக்கிறது. ‘வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு’, ‘2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும்’ என்கிற தலைப்புகளில் நடக்கும் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் புதிய மசோதா

இந்தசூழலில், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான புதிய சட்ட மசோதாவை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்த விவாதத்தின்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’தமிழ்நாட்டு உயர் கல்வித்துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வேந்தராக ஆளுநரும் இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சரும் இருக்கின்றனர். கொள்கை முடிவுகளை எடுக்கும் அரசுக்கு, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாமல் இருப்பது, உயர் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

மேலும்,”கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேக உரிமை என்பதுபோலச் செயல்பட்டு வருகிறார். மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க முடியவில்லை. இது ஒட்டுமொத்த பல்கலை., நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் இத்தகைய அதிகாரங்களைக் கொடுப்பது, அரசுகளுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குஜராத் நிலை

பூஞ்சி ஆணையப் பரிந்துரையை ஏற்கலாம் என்று 2017-ல் அ.தி.மு.க ஆட்சியில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அ.தி.மு.க உறுப்பினர்களுக்கும் இந்த மசோதாவை ஆதரிப்பதில் நெருடல் இருக்காது.பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசின் ஒப்புதலோடு, ஆளுநர் நியமிக்கிறார். குஜராத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களிலும் உரிய திருத்தம்செய்து, பல்கலை. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்துவருவதாக ஆளுங்கட்சியான தி.மு.க குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தி.மு.க அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கலாகியிருக்கிறது.

Also Read – கமலாலயமும் எம்.ஜி.ஆர் மாளிகையும் – பேரவையில் உதயநிதி – ஓ.பி.எஸ் கலகல!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top