ADMK - PMK

சீண்டும் பா.ம.க… அ.தி.மு.க-வின் பதிலடி – உடைகிறதா கூட்டணி?

ஓ.பி.எஸ் பற்றியும் தங்கள் கட்சியைப் பற்றியும் அவதூறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பா.ம.க-வுக்கு அ.தி.மு.க தரப்பில் பதில் கொடுத்திருக்கிறார். தேர்தல் முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றது. கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்னர், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டையும் அறிவித்தது அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு. இது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க அமைச்சர்கள் தென்மாவட்ட பிரசாரங்களில் பேசியதை பா.ம.க ரசிக்கவில்லை. குறிப்பாக, அப்போதைய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சை பா.ம.க தலைமை கடுமையாக விமர்சித்தது. `இட ஒதுக்கீடு அறிவிப்பு தற்காலிகமானதுதான். தேர்தலுக்குப் பின் சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அது பரிசீலிக்கப்படும்’ என்று உதயகுமார் பேசியிருந்தார். அதன்பின்னர், அ.தி.மு.க தலைமையிலிருந்து பா.ம.க தரப்பில் பேசி இந்த பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியானது.

Anbumani Ramadoss

அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தேர்தல் முடிந்து ஒன்றரை மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கிண்டல் செய்யும் தொனியில் பா.ம.க இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் பேசியதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. மேலும், பா.ம.க இல்லையென்றால் 20 தொகுதிகளில்தான் அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கும் எனவும் அன்புமணி பேசியதற்கு அ.தி.மு.க தரப்பில் கடுமையாக எதிர்வினையாற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி, “ஓ.பி.எஸ்ஸைக் கிண்டல் செய்யும் தொனியில் பேசினால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். எங்கள் தலைவர்களை அவதூறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு 23 தொகுதிகளை வாங்கிய அன்புமணி ராமதாஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துகளைக் கூறி வருகிறார். பா.ம.க இல்லையென்றால் அ.தி.மு.க 20 இடங்களில்தான் வெற்றிபெற்றிருக்கும் என்று சொல்கிறார். 23 இடங்களில் 13-ல் தோற்றது குறித்து பா.ம.க முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இதில், யாரும் தலையிட விரும்பவில்லை. ஆறு தொகுதிகளைத் தவிர கன்னியாகுமரி, ஒரத்தநாடு உள்ளிட்ட 9 தொகுதிகளில் பா.ம.கவுக்கு எந்தவித செயல்பாடுகளும் இல்லை. நிலைமை இப்படியிருக்க பா.ம.க இல்லையென்றால் அ.தி.மு.க-வால் வெற்றிபெற்றிருக்க முடியாது என்று சொல்லலாமா?

ADMK - PMK

தேக்கு மரத்தில் மரங்கொத்தி அமர்ந்து கொத்திக் கொண்டிருக்கும்போது, சின்ன சலசலப்பு ஏற்பட்டதைக் கண்டதும், தான் கொத்தியலே தேக்குமரம் விழுந்துவிடும் என மரங்கொத்தி நினைத்ததாம். அதுபோல் இருக்கிறது அன்புமணி ராமதாஸின் பேச்சு. ஓ.பி.எஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணி ராஜ்யசபா எம்.பியானார். அ.தி.மு.க பற்றி தவறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று காட்டமாகப் பதிலடி கொடுத்திருக்கிறார். அன்புமணி ராமதாஸின் பேச்சை அ.தி.மு.க தலைமை ரசிக்கவில்லை. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோரைத் தேர்வு செய்வதற்காக இன்று நடக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read – `நாட்டுக்குள்ளே ஒரு நாடா?’ – மெட்ராஸ் மாகாணம் டு தமிழ்நாடு பெயர்மாற்ற சுவாரஸ்ய பின்னணி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top