Padmapriya

ம.நீ.ம. வேட்பாளர் பத்மபிரியா பற்றி எங்களுக்குத் தெரிந்த சில விஷயங்கள்… உங்களுக்குத் தெரியுமா?!

யூ டியூப் சென்சேஷன் பத்மபிரியாவை மதுரவாயல் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறது மக்கள் நீதி மய்யம்.

அவரின் இன்ட்ரஸ்டிங் பக்கங்களிலிருந்து…

 • சென்னையில்தான் படித்தது, வளர்ந்தது எல்லாம். அதனாலேயே இவரது யூடியூப் சேனலுக்கு `சென்னை தமிழச்சி’ என்று பெயர் வைத்திருக்கிறார். அதே பெயரிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் களமாடுகிறார்.
 • எம்.எஸ்.ஸி மைக்ரோ பயாலஜி படித்திருக்கும் இவர், பெங்களூரில் ஒராண்டு புற்றுநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். அதன்பிறகு சென்னை திரும்பியவர், பயாலஜி டீச்சராக இருக்கிறார்.
 • `மத்தவங்களுக்கு சொல்லித் தர்றது ரொம்பப் பிடிக்கும்’ என்று சொல்லும் பத்மபிரியா, அழகுக் குறிப்புகள், மூலிகைகள், பெண்கள், விலங்குகள் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார்.
 • இஐஏ 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பாக பேசி வெளியிட்ட விளக்க வீடியோ, இவரை ஓவர் நைட்டில் செலிபிரட்டி அந்தஸ்துக்குக் கொண்டுபோனது. அதற்காக மிரட்டல்கள் வந்ததாகச் சொல்லும் பத்மபிரியா, பின்னர் அந்த வீடியோவை நீக்கிவிட்டார். அதற்கான காரணங்களை விளக்கியும் ஒரு வீடியோவை இவர் வெளியிட்டார்.
 • ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து விழிப்புணர்வு வீடியோவுக்காக, பாதிக்கப்பட்ட பெண்ணைப் போல் மேக்கப் போட்டு இவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவை சிலர், `இந்த சகோதரிக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்’ என்கிறரீதியில் டேக் போட்டு வைரலாக்கிவிட்டனர்.
 • லாக்டௌன் சமயத்தில் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் ஃபேஸ்புக்கில் கொரோனா குறித்து கோரக்கர் எழுதியதாக காமெடியாகப் பதிவிட்டிருந்தார். அது உண்மை என வாட்ஸப், சில பத்திரிகைகளிலும் செய்தி வெளியான நிலையில், அது தொடர்பாக இவர் உணர்ச்சிவசமாகப் பேசி வெளியிட்ட வீடியோவும் செம வைரல். இது கடும் விமர்சனங்களைச் சந்திக்கவே, `தெரியாம நடந்திருச்சு’ என்று சாரி சொல்லி தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது பத்மபிரியாவுக்கு.
 • முழுநேர மாடலிங்கில் விருப்பமில்லை என்று சொல்லும் இவருக்கு ஈடுபாடு வந்தால் அவ்வப்போது மாடலிங்கும் செய்வாராம்.
 • நடனக் கலைஞர், பாடகர் என பல ஆசைகள் சிறுவயது முதல் இருந்திருக்கின்றன. முறைப்படி நடனம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், கிளாசிக்கல் டான்ஸ் மீது அதீத ஆர்வமுண்டு.
 • நடிப்பில் ஆர்வம் அதிகமிருக்கும் இவருக்கு கமல் ஆதர்ஸ நடிகர். இஐஏ வீடியோ வைரலுக்குப் பின்னர் வந்த பல சீரியல் வாய்ப்புகளை வேண்டாமென்று மறுத்திருக்கிறார்.
 • தினமும் 22 தெருநாய்களுக்கு உணவளித்து ஆதரித்து வரும் இவர், 22 மரங்களையும் நட்டு வளர்க்கிறார். மக்கள் நீதி மய்யத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரான பின்னர், டீச்சர் வேலையின் நடுவில் கிடைக்கும் இடைவெளிகளில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 • இதுதவிர மூலிகைக் குளியல் பொடி, மாஸ்க் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

முதல் வீடியோவுக்கே பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதையும் மீறியே வீடியோக்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார். இப்போது வேட்பாளரான பின்னர், எந்த அட்வைஸும் வீட்டிலிருந்து வரவில்லையாம். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுரவாயல் தொகுதியிலேதான் இவரது வீடும் இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top