வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட முதல் பெண் கணிதவியலாளரும், வானவியல் அறிஞரும், சிறந்த தத்துவவாதியுமான ஹைப்பேஷியா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட, அவருடன் சேர்ந்து ஆயிரம் ஆண்டுகாலம் அறிவியல் முடங்கிப் போனது என்ற ஒரு பேச்சும் உண்டு. யார் இந்த ஹைப்பேஷியா… அவர் ஏன் அறிவியலுக்கு முக்கியம், ஏன் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
ஹைப்பேஷியா
ஏறக்குறைய 1600 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகம் அழிந்த வரலாற்றைப் பற்றி நாம் பலரும் கேள்விப்பட்டிருப்போம். பூமியின் சுற்றளவை ஓரளவுக்கு நெருங்கி வந்து கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்ட்ரியாவைச் சேர்ந்தவர். நீராவி என்ஜின் கண்டறியப்பட்டதுதான் தொழிற்புரட்சிக்கு காரணம்னு படிச்சிருக்கோம்ல… ஆனா, 1600 வருஷங்களுக்கு முன்பே நீராவி என்ஜின் பற்றிய குறிப்புகளும் கண்டுபிடிப்பும் அங்கே நிகழ்ந்திருக்குனு சொன்னா உங்களால் நம்பமுடியுதா? அந்த நூலகத்தில் அழிந்து போன பல்லாயிரக்கணக்கான புத்தகங்களுடன் சேர்ந்து அழிந்துபோன ஒரு நபர் “ஹைப்பேஷியா”. வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட முதல் பெண் கணிதவியலாளரும், வானவியல் அறிஞரும், சிறந்த தத்துவவாதியுமான ஹைப்பேஷியா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து ஆயிரம் ஆண்டுகாலம் அறிவியல் முடங்கிப் போனது என்ற ஒரு பேச்சும் உண்டு. யார் இந்த ஹைப்பேஷியா, அவர் ஏன் அறிவியலுக்கு முக்கியம், ஏன் அவர் படுகொலை செய்யப்பட்டார்?

ஹைப்பேஷியா, அறிவும் அழகும் ஒருங்கே சேர்ந்தவராக ஆபத்தானவராகவே வர்ணிக்கப்பட்டிருக்கிறார். வானியல், கணிதம், தத்துவம் மற்றும் இசை என பல்துறை வித்தகராக ஹைப்பேஷியா இருந்திருக்கிறார். இவற்றை மாணவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இத்துறைகளில் ஹைப்பேஷியாவின் அறிவு மகத்தானது என்றும், அவருடைய காலத்துக்கு ஆயிரமாண்டுகள் பின்னர் கண்டறியப்பட்ட அறிவியல் கோட்பாடுகளை அவர் உருவாக்கியவர் என்றும் பல குறிப்புகள் வரலாறு முழுக்கவே காலங்காலமாக உலவி வருகின்றன. அந்நகரத்தினுடைய ஆட்சியாளர் கூட ஹைப்பேஷியாவின் மாணவர், அவருடைய அறிவுரைகள் ஆட்சியிலும் எதிரொலித்திருக்கிறது.
இத்தனை அறிவான, அழகான, திறமைசாலி ஏன் கொடூரமாக படுகொலை செய்யப்பாட்டார்? ஐரோப்பாவின் அறிவுலகோடு சம்பந்தப்பட்ட ஹைப்பேஷியா பற்றிய ஒரு முக்கியமான படைப்பு மலையாளத்திலும் தமிழிலும் இருக்கிறது, அது பற்றி கடைசியில் பார்ப்போம்.
அலெக்சாண்ட்ரியா நகரத்தின் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தியோனின் மகள் தான் ஹைப்பேஷியா. தந்தையிடம் கல்வி கற்ற ஹைப்பேஷியா, 13 ஆண்டுகளிலேயே அங்கு ஆசிரியராகவும் ஆனார். இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு புனிதமான மொழி “கணிதமும் வானவியலும் இசையும் சேர்ந்த ஒரு கலைவை” என அவர் நம்பினார். கோள்களின் இயக்கத்தைப் பற்றியும், அவற்றின் சுற்றுவட்டப் பாதைகளைப் பற்றியும் அவற்றில் உள்ள சீரான இயக்கம் பற்றியும் அவர் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அவற்றை மாணவர்களுக்குப் பாடமாகவும் போதித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கோள் எங்கிருக்கும் என்பதையும், கோள்களின் இருப்பிடத்தை வைத்து தேதியைத் துல்லியமாக கண்டறிவதற்குமான ஒரு கருவியை திறம்பட மேம்படுத்தியிருக்கிறார். பூமிதான் சூரியக் குடும்பத்தின் மையம், கோள்கள் பூமியை வட்டப்பாதையில் தான் சுற்றி வருகின்றன என்பதாகத் தான் அப்போதைய அறிவியல் புரிதல் இருந்தது. இந்தப் புரிதலுடன் இப்படி ஒரு கருவியைப் பயன்படுத்துவது சரியான முடிவைத் தராது. ஆனால், ஹைப்பேஷியாவின் கருவி துல்லியமான முடிவுகளைத் தந்தன என்றால், மேலே சொன்ன தவறான புரிதலைக் களைந்து சூரியன்தான் சூரியக் குடும்பத்தின் மையம் என்பதும், அத்தனை கோள்களும் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன என்பதையும் ஹைப்பேஷியா அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அவர், படுகொலை செய்யப்பட்டதும், அவர் ஒரு சூணியக்காரியாக சித்தரிக்கப்பட்டு அவருடைய புத்தகங்களும் கருத்துகளும் அழிக்கப்பட்டதும், அலெக்சாண்ட்ரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதும் ஹைப்பேஷியாவின் கண்டுபிடிப்புகள் அழிந்துபோக காரனமாகின. ரகசியமாக ஹைப்பேஷியாவின் கொள்கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்களாலும், காலத்தால் அவரைப் பிந்தியவர்களின் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் மேற்கோள் காட்டப்பட்டதன் வாயிலாகவே ஹைப்பேஷியாவின் கண்டுபிடிப்புகள் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
அறிவிற் சிறந்தவர் என நம்பப்படும் ஒரு பெண்ணின் கருத்துகளும் கண்டுபிடிப்புகளும் ஏன் அழிக்கப்பட்டன?
மாவீரன் அலெக்சாண்டரால் எகிப்தில் உருவாக்கப்பட்ட நகரம் தான் “அலெக்சாண்ட்ரியா”, அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த தாலமி I மற்றும் இன்னபிற அரசர்களால் செழுமைப்படுத்தப்பட்ட இந்நகரத்தின் நூலகம் உலகப்பிரசித்தி. இந்நகரம் அன்றைய காலகட்டத்தில் ஓர் அறிவுத்தலைநகரமாக இருந்தது. அந்தத் துறைமுகத்துக்கு வரும் ஒவ்வொரு கப்பலும் ஒரு புத்தகத்தை நூலகத்துக்குத் தரவேண்டும், நூலகத்தில் இருக்கும் நகலெடுப்பவர் அதை நகலெடுத்தபின் நகலை அந்தக் கப்பலுக்கும், மூலப்புத்தகத்தை நூலகத்திலும் சேமித்து வைப்பார்கள். இப்படி எட்டுத்திக்கிலும் இருந்து கலைச்செல்வங்கள் அந்நூலகத்தில் சேமிக்கப்பட்டன. நூலகத்திலேயே கல்வி பயில்வதற்கான அரங்குகளும் விவாத அரங்குகளும் அங்கே இருந்தன. ஹைப்பேஷியா ஆசிரியராக இருந்ததும் இங்கிருந்த ஒரு பள்ளியில் தான்.
கி.பி நான்காம் நூற்றாண்டில், அலெக்சாண்டிரியா நகரம் பண்டைய கடவுள்களையும் பல தெய்வங்களையும் வணங்கும் சிலை வழிபாட்டாளர்கள் அதாவது பேகன்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. ஹைப்பேஷியாவும் ஒரு பேகன் வழிவந்தவர் தான். அதே சமயத்தில் அங்கே யூதர்களும் கிறித்துவர்களும் பேகன்களுக்கு சமமான எண்ணிக்கையில் இருந்தனர். அலெக்சாண்டிரியா நகரம் அப்போது கிறித்துவத்தைப் பின்பற்றிய ரோமானியர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்ததும் கிறித்துவர்களின் கைகள் ஓங்கின, பேகன்களில் பலர் கிறித்துவத்துக்கு மதம் மாறினர், பலர் மதம் மாற்றப்பட்டனர், ஹைப்பேஷியா போன்ற அறிவுப்புலத்தினர் மதத்தை விடுத்து அறிவின் பக்கம் நின்றனர். ரோமானிய ஆளுநராக அந்நகரத்துக்கு அப்போது “ஒரஸ்டஸ்” நியமிக்கப்பட்டார், கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக சிரில் நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் ஒரஸ்டஸ் ஹைப்பேஷியாவின் மாணவர், ஆட்சியிலும் ஹைப்பேஷியாவின் ஆலோசனையைப் பெற்றார். பிஷப் சிரிலோ பேகன்களை முழுவதுமாக கிறித்துவத்தை ஏற்க வைக்கும் வேலையை முன்னெடுத்துக்கொண்டு இருந்தார். கிறித்துவத்தை ஏற்க மறுத்து வாதிடுபவர்கள் மீது அனல் வாதம் புனல்வாதமெல்லாம் புரிந்து கிறித்துவத்துக்கு மாற்றினார். பெண்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட அக்காலத்தில், ஹைப்பேஷியா போன்ற ஒரு அறிவியலாளர் சூணியக்காரியாக முத்திரைக் குத்தப்பட்டார். ஆளுநரை ஹைப்பேஷியா எனும் சூணியக்காரி வசியப்படுத்தி கிறித்துவரான அவரைக் கிறித்துவத்துக்கு எதிராகத் தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்ட அவர், துன்புறுத்தப்பட்டார். இழிவுசெய்யப்பட்டார். ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவர் சென்றுகொண்டிருந்த வண்டியில் இருந்து இழுத்து கீழே தள்ளப்பட்டு உடைகளைக் கிழித்தெறிந்து ஊனமாக்கி அவரைத் தீக்கிரையாக்கினார் கிறிஸ்தவர்கள்.
அதன் பிறகு நூலகத்தில் இருந்த அவரின் படைப்புகளில் எவை எவற்றையெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ அவற்றை அவருடைய மாணவர்கள் கொண்டு சென்றனர். அதில் எஞ்சிப்பிழைத்தவை மட்டுமே இப்போது ஹைப்பேஷியா குறித்து நாம் அறிய உதவுபவை.
Also Read – கண்ணீர் வரவைக்கும் யானை மரண சம்பவங்கள்!
ஹைப்பேஷியா குறித்து வரலாறு நெடுகவே பல குறிப்புகள் உண்டு. ஐரோப்பிய கலை அறிவியல் வட்டாரங்களிலும் ஓவியங்களாகவும் சிறு சிறு குறிப்புகளாகவும் இடம்பெற்று வருகிறார். ஹைப்பேஷியாவை மையமாக வைத்து நாவல்களாக பல புத்தகங்கள் வெளியாகின. சார்லஸ் கிங்ஸ்லி எழுதிய “ஹைப்பேஷியா” என்ற புத்தகம் பரவலாக ஹைப்பேஷியா மீது வெளிச்சம் பாய்ச்சியது. உம்பர்ட்டோ ஈகோவின் புத்தகமும் குறிப்பிடத்தக்கது. அதே போல அகோரா என்ற திரைப்படம் வரலாற்றுப் பிழைகளுடன் இருந்தாலும் ஹைப்பேஷியா பற்றி சமீபத்தில் பலரையும் பேசவைத்தது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் விட்டுத்தள்ளுங்கள், மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ட்டி.டி.ராமகிருஷ்ணனால் எழுதப்பட்ட ‘பிரான்சிஸ் இட்டிக்கோரா’ நாவலின் அடிநாதமே இவர்தான். இந்தப் புத்தகம் மலையாளத்தில் இருந்து தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.